(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘கொவிட் 19 ஜனாஸாக்களை தூர பிரதேசங்களிலிருந்து ஓட்டமாவடி மஜ்மா நகருக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவு பாரியளவில் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஓட்டமாவடிக்கு ஜனாஸாக்களைக் கொண்டு செல்ல தற்போது 85 ஆயிரம் ரூபா அறவிடப்படுகிறது. எனவே அரசாங்கம் இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில்; ‘அண்மையில் நான் யாழ்ப்பாணம் சோனக தெருவில் முஸ்லிம் சமூகத்தைச் சந்தித்தேன். அவர்கள் இந்த முறைப்பாட்டினை என் முன்வைத்தனர். முஸ்லிம்கள் மாத்திரமல்ல அடக்கத்தை விரும்பும் கிறிஸ்தவர்களும் அதிகரித்துள்ள போக்குவரத்து கட்டணத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அரசாங்கம் மக்களுக்கு இவ்விவகாரத்தில் நிவாரணம் வழங்க வேண்டும். போக்குவரத்து செலவில் 50 வீதத்தை அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும். இல்லையேல் வடக்கிற்கு என கொவிட் 19 மையவாடியொன்றினை இனங்காணவேண்டும். இது வடக்கிற்கோ, யாழ்ப்பாணத்துக்கோ மாத்திரமான பிரச்சினையல்ல. மேல்மாகாணத்தில் கொழும்பில் இருந்து ஓட்டமாவடிக்கு ஜனாஸாவை கொண்டு செல்ல சுமார் 45 ஆயிரம் ரூபா அறவிடப்படுகிறது. இவ்வாறான நிலைமையையே வடமேல் மாகாண மக்களும் எதிர்கொண்டுள்ளார்கள்.
மக்கள் தற்போது பொருளாதார நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அதிகரித்த கட்டணத்தை அவர்களால் செலுத்த முடியாது திண்டாடுவதைக் காண முடிகிறது.இந்நிலைமையை சமாளிப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.-Vidivelli