ஆனாலும் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்; இன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக பிணை பெறும் சாத்தியம்
(புத்தளத்திலிருந்து எம்.எப்.எம்.பஸீர்)
‘நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசிங்க இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.
கடந்த 8 ஆம் திகதி உயர் நீதிமன்றில் சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே முன் வைத்த விடயங்கள், நேற்று அஹ்னாபுக்காக ஆஜராகிய சட்டத்தரணிகளால் புத்தளம் மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்குத் தொடுநர் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக, அஹ்னாபுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மன்றுக்கு அறிவித்தார். இதனையடுத்தே அவருக்கு பிணையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக அஹ்னாப் ஜஸீம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றப் பத்திரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று (15) இரண்டாவது தடவையாக விசாரணைக்கு வந்தது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள கவிஞர், ஆசிரியர் அஹ்னாப் ஜஸீமுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ராமலிங்கம் ரஞ்சனின் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர, சட்டத்தரணிகளன நுஹ்மான், ஸ்வஸ்திகா அருலிங்கம், தேவபாலன், ஏ. சஜான், ஹுஸ்னி ராஜிஹ் உள்ளிட்டவர்கள் ஆஜராகினர்.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபருக்காக அரச சட்டவாதி உதார கருணாதிலகவின் கீழ் அரச சட்டவாதிகளான சஜின் பண்டார மற்றும் நிஷாரா ஜயரத்ன ஆகியோரை உள்ளடக்கிய குழு பிரசன்னமானது.
கடந்த நவம்பர் 15 ஆம் திகதி குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (15) சட்டத்தரணி ராமலிங்கம் ரஞ்சன் பிணை கோரி வாதங்களை முன் வைத்தார்.
அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்டவிரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/ 21 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 8 ஆம் திகதி அம்மனு உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது மனுதாரர் (இம்மனுவின் பிரதிவாதி அஹ்னாப்) சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆஜரானதாகவும், பிரதிவாதிகளுக்காக ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, அஹ்னாபுக்கு இன்றைய தினம் (நேற்று 15) பிணையளிக்க சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றில் எதிர்ப்பு முன் வைக்கமாட்டார் என தெரிவித்ததாக கூறினார். உயர் நீதிமன்றில் அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை விளக்கும் நீதிமன்ற பதிவினையும் சிரேஷ்ட சட்டத்தரணி ராமலிங்கம் ரஞ்சன் மன்றுக்கு சமர்ப்பித்தார்.
இதனை வழக்குத் தொடுநர் சார்பில் ஆஜரான அரச சட்டவாதி உதார கருணாதிலகவும் ஏற்றுக்கொண்டதுடன், இவ்வழக்கின் பிரதிவாதியான அஹ்னாப் ஜஸீமுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் அனைத்து விடயங்களையும் ஒப்பீடு செய்து ஆராய்ந்து இணக்கம் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து நேற்று (15) மு.ப. 10. 45 அளவில் அஹ்னாபுக்கு பிணையளிப்பதாக புத்தளம் மேல் நீதிமன்றின் நீதிபதி நயோமி விக்ரமசிங்க அறிவித்தார்.
5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் அவரை விடுவிப்பதாக அறிவித்த நீதிபதி, அம்மூவரும் புத்தளம் மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். அத்துடன் அஹ்னாப் ஜஸீம் ஒவ்வொரு மாதமும் முதல், இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் மு.ப.9.00 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் இடையே, புத்தளம் – பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் கையெழுத்திட வேண்டும் என மற்றொரு பிணை நிபந்தனையையும் நீதிபதி பிறப்பித்தார்.
வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்த நீதிமன்றம், அஹ்னாபுக்கு கடவுச் சீட்டு ஒன்று இதுவரை இல்லை என்ற விடயம் மன்றுக்கு முன் வைக்கப்பட்டதை அடுத்து, அவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மையப்படுத்தி அவருக்கு கடவுச் சீட்டு விநியோகிப்பதை தடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டது. அத்துடன் கடவுச் சீட்டு இல்லை என்பதைஅடுத்த வழக்குத் தவணையின் போது சத்தியக் கடதாசி மூலம் மன்றுக்கு அறிவிக்கவும் உத்தரவிட்டார்..
இதனைவிட, குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, அடிப்படைவாத கருத்துக்களை மீள போதனை செய்ய முயன்றாலோ அதனை ஒத்த குற்றச் செயலொன்றினைச் செய்தாலோ பிணை ரத்து செய்யப்படும் என நீதிபதி எச்சரித்தார்.
இதனைவிட, அஹ்னாப் ஜஸீம் தற்போது மன்னார், சிலாவத்துறை – பண்டாரிக்குளத்தில் நிரந்தர வதிவாளராக வசிக்கும் நிலையில் அம்முகவரியை நீதிமன்றுக்கு அறிவிக்காமல் மாற்றக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து இவ்வழக்கை மிக விரைவில் விசாரணைக்கு எடுக்கவும், ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு எடுப்பதாயினும் அதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் அரச சட்டவாதி உதார கருணாதிலக மன்றுக்கு தெரிவித்தார்.
எனினும் வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க சில ஆவணங்கள் இன்னும் பிரதிவாதியான அஹ்னாப் தரப்புக்கு கிடைக்காமை தொடர்பில் அவரது சட்டத்தரணியால் மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
கிடைக்காத ஆவணங்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு எழுத்து மூலம் அறிவித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் என இதன்போது அரச சட்டவாதி உதார கருணாதிலக உத்தரவாதம் அளித்தார்.
இந் நிலையில், கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் ( நீதிமன்ற அறை – 8 ) வழக்குக் கோவையை புத்தளம் மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்க நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டதுடன், வழக்கு விசாரணைக்கான திகதியை தீர்மானிக்கவும், ஆவணங்கள், பிணை நிபந்தனை சான்றுகளை முழுமைப்படுத்தவும் வழக்கு எதிர்வரும் 2022 ஜனவரி 6 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கு விசாரணைகள் மு.ப. 11.40 மணியளவில் நிறைவடைந்த போதும், பி.ப. 4.00 மணி வரை அஹ்னாப் நீதிமன்றிலேயே சிறைக்காவலர்களின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். புத்தளம் மேல் நீதிமன்றில் காணப்பட்ட இணக்கத்துக்கு அமைய, 3 சரீரப் பிணையாளர்களும் கையெழுத்திட்டும் கூட அவர் விடுவிக்கப்படவில்லை.
கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கில் அஹ்னாப் ஜஸீம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பிணையளிக்கப்படும் வரை தம்மால் அவரை விடுவிக்க முடியாது என சிறைச்சாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்குக்கு அமையவே புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக இதன்போது அஹ்னாபின் சட்டத்தரணிகள் விளக்கியுள்ள போதும், குறித்த காரணியை மையப்படுத்தி அஹ்னாப் ஜஸீம் புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை அளிக்கப்பட்டும் கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு மாலை 4.10 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று (16) பெரும்பாலும், கொழும்பு 8 ஆம் இலக்க மேலதிக நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு பிணை குறித்த விடயத்துக்கு தீர்வு காணப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அது முதல் தடுப்புக் காவலிலும், விளக்கமறியலிலும் அவர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli