இரு மாதங்களாக கடலில் தத்தளித்து சென்னையில் கரை சேர்ந்த வாழைச்சேனை மீனவர்கள்
எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் தொடர்பில் கடந்த இரு மாதங்களாக எந்தவித தகவல்களும் கிடைத்திராத நிலையில், தற்போது அவர்கள் இந்தியாவிலுள்ள துறைமுகம் ஒன்றில் நவம்பர் 28 ஆம் திகதி பாதுகாப்பாக கரைசேர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இவர்கள் இதுவரை இலங்கையிலுள்ள தமது குடும்பத்தினருடன் எந்தவித தொடர்பினையும் ஏற்படுத்தவில்லை என்றும் எப்போது நாடு வந்து சேருவார்கள் என்ற ஏக்கத்தில் தாம் காத்திருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவ் விடயம் தொடர்பாக காணாமல் போன மீனவர்களின் உறவினர்களை “விடிவெள்ளி”க்காக நேரில் சந்தித்துப் பேசினோம்.
“காணாமல்போன நான்கு பேரினதும் போட்டாவைப் பார்த்தவுடன்தான் மனசுக்குள் நிம்மதி வந்தது” எனக் கூறுகிறார் வாழைச்சேனை ஹைராத் வீதியில் வசித்துவரும் படகின் உரிமையாளர் வீ.ரீ.எம்.பதுர்தீன்.
“எனது 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான Imul A 0093 PLE எனும் நீல நிறப் படகில் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி 21 வயதுடைய எனது மகன் முகம்மட் றிஸ்கான் உட்பட நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர். இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் ஒரு வாரத்தில் கரைக்குத் திரும்புவது வழக்கம். ஆனால் அவர்கள் சென்ற திகதியிலிருந்து ஒரு வாரம் கடந்தும் திரும்பாததால் நாங்கள் அவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டோம்” என்று கவலையுடன் சம்பவத்தை விபரித்தார் படகு உரிமையாளர்.
“படகுடன் காணாமல் போன நான்கு நபர்களையும் மீட்டெடுக்க நாங்கள் ஓடாத ஓட்டமில்லை, படாத பாடுமில்லை. அவர்களை கண்டுபிடிப்பதற்கு இதுவரை சுமார் எட்டு இலட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். ஆனால் நாங்கள் இன்னும் தைரியம் இழக்கவில்லை.
இந்த நிலையில்தான் எங்களுக்கு சந்தோசமான செய்தி ஒன்று இந்த மாதம் திங்கட்கிழமை 29 ஆம் திகதி கிடைத்தது. காணாமல் போன நான்கு மீனவர்களும் படகுடன் இந்தியா – சென்னையில் கரை ஒதுங்கிய போது பிடிக்கப்பட்ட போட்டோ ஒன்று எங்களது வட்ஸ் அப்புக்கு வந்தது. அதைப் பார்த்ததும் எங்களுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. இவ்வாறு சென்னையில் கரையொதுங்கியுள்ள நான்கு மீனவர்களையும் அரசாங்கம் அவசரமாக நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நான்கு மீனவர்களின் குடும்பத்தினர்களும் சொல்ல முடியாத துயரங்களுடன் தமது நாட்களைக் கடத்தி வருகின்றனர். சென்ற மாதம் வாழைச்சேனைக்கு வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இம் மீனவர்களை அவசரமாக மீட்டுத் தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார். அல்லாஹ்வின் உதவியால் மீனவர்கள் நான்கு பேரும் விரைவில் வீடு வந்து சேர்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் படகு உரிமையாளர்.
இப் படகில் சென்ற ஓட்டமாவடி பாலை நகர் பள்ளிவாசல் வீதியில் வசித்து வரும் மீனவர் எச்.எம்.ஹைதர் என்பவரின் பிள்ளைகளையும் நாம் சந்தித்தோம். “சுமார் இரண்டு மாதங்கள் கடந்தும் எங்களது தந்தை இன்னும் வீடு வரவில்லை. எங்களது தந்தை காணாமல்போன நாளிலிருந்து நாங்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
எங்களது தந்தையுடன் காணாமல்போன நான்கு மீனவர்களும் ஒரு மாதத்துக்கு முன்னர் அந்தமான் தீவு கடற்பரப்பில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சில நாட்களுக்கு பின்னர் அவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. தற்போது அவர்கள் கரை ஒதுங்கியுள்ள புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது. அதனைப் பார்த்து நாங்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளோம். எங்களது தந்தையின் குரலை கேட்க வேண்டும் போல் இருக்கிறது. அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்” என அவர்கள் தமது ஆதங்கத்தை முன்வைத்தனர்.
காணாமல் போன மற்றொரு மீனவர் றியாலின் சகோதரி அசனார் நிஸாயா கூறுகையில், “நாங்கள் குடும்பத்தில் ஐந்து பேர். கடலுக்குச் சென்று காணாமல் போன எனது தம்பி றியால்தான் எங்களது குடும்பத்தில் கடைசிப் பிள்ளை. அவர்தான் குடும்பத்தை கவனிப்பது. அவருக்கு இப்போதுதான் பத்தொன்பது வயது. இந்த வயதில் குடும்பச் சுமைகள் அவருக்கு அதிகமாக உள்ளது. எங்களது தந்தை மரணித்து எட்டு மாதங்கள்தான். தாயும் நோய் காரணமாக 6 வருடங்களாக படுக்கையில் உள்ளார். எனது தம்பி நலமுடன் வீடு வர வேண்டும் என்றுதான் நாங்கள் பிரார்த்தனைகளுடன் இருக்கிறோம். தம்பியின் போட்டோவை பார்த்ததிலிருந்து நாங்கள் நிம்மதியடைந்துள்ளோம். அவரும் மற்றைய மீனவர்களும் எந்த ஆபத்துக்களுமின்றி நாட்டுக்கு வர வேண்டும்” என்றார்.
“சோதனையிலும், வேதனையிலும் தான் நாங்கள் இன்று வரை வாழ்ந்து வருகின்றோம். எனது கணவர் கடலுக்குப் போனவர் இன்னும் வரவில்லை. வறுமையில் வாழ்ந்து வரும் எங்களை எங்களது குடும்பத்தினரும் அயலவர்களும்தான் கவனித்து வருகின்றனர். எனது கணவர் நலமுடன் வீடு வர வேண்டும் என்றுதான் நாங்கள் என்றும் பிரார்த்தனைகளுடன் இருக்கிறோம்” என மீராவோடையில் வசித்து வரும் மீனவர் எம்.எச்.எம்.கலீல் என்பவரின் மனைவி எம்மிடம் தெரிவித்தார்.
குறித்த நான்கு மீனவர்களும் இந்தியாவின் சென்னை, திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் அதானி துறைமுகத்துக்குள் கடந்த திங்கட்கிழமை (29) நுழைந்துள்ளதாகவும் அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாம் பயணித்த முதல் நாளிலேயே நடுக்கடலில் வைத்து படகின் இயந்திரம் பழுதாகியதாகவும், அங்கிருந்து தமது படகு அந்தமான் தீவுகளைச் சென்றடைந்ததாகவும் மீனவர்கள் பொலிசாருக்கு வாக்குமூலமளித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து காற்று வாக்கில் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் வந்ததாகவும் அங்கிருந்து காசிமேடு படகு மூலம், அவர்கள் காட்டூர் அதானி துறைமுகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகள் முடிவடைந்த பின்னர், சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக இவர்கள் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வருகிறது.-Vidivelli