முஸ்லிம் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிப்போம்
பசிலுடனான சந்திப்பின் பின்னர் ஹரீஸ் தெரிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள முக்கியமான சவால்கள், பிரச்சினைகள், அழுத்தங்கள் என்பன அறிக்கையிடப்பட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிடம் விரைவில் கையளிக்கப்படவுள்ளது.
முஸ்லிம்களின் தேசிய ரீதியிலான பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியைக் கோரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு ஆதரவளித்துவரும் 20ஆவது திருத்தத்திற்கும் 2022ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்புக்கும் ஆதரவளித்து வாக்களித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலின்போது நிதியமைச்சர் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்களை பட்டியலிட்டு தருமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை வேண்டியிருந்தார். இதற்கமையவே முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பான அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சருடனான பேச்சு வார்த்தை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்வதற்காகவே இக்கட்டான சந்தர்ப்பங்களிலெல்லாம் அரசுக்கு தாம் ஆதரவு வழங்கி வருவதாகவும், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாதவிடத்து அரசை ஆதரிப்பதில் எந்தப் பலனும் இல்லை என்பதை நிதியமைச்சருக்கு நாம் தெளிவுபடுத்தினோம்
நிதியமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளையும் சவால்களையும் நாம் பட்டியலிட்டுள்ளோம்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் சமூகத்துக்கு பாதிப்பில்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும், காதிநீதிமன்ற கட்டமைப்பு பாதுகாக்கப்படவேண்டும். “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஞானசாரதேரரின் தலைமையிலான ஜனாதிபதி செயலணி முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு செயற்படக்கூடாது.
வடகிழக்கு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் நியாயமான முறையில் தீர்வு காணப்படவேண்டும். முஸ்லிம்களின் பரம்பரை காணிகள் பாதுகாக்கப்படவேண்டும். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் உட்பட ஏனைய பகுதிகளில் பிரதேச செயலாளர் பிரிவு எல்லை நிர்ணயங்கள் துரிதப்படுத்தப்படவேண்டும்.
அத்தோடு மாடறுப்பதற்கான தடை மீள்பரிசீலனை செய்யப்படவேண்டும். மேலும் அரசாங்கம் முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்களில் தீர்மானங்கள் மேற்கொள்ளும்போது முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்க வேண்டும். கலந்தாலோசிக்காது திடீரென தீர்மானங்கள் அமுல்படுத்தப்படக்கூடாது போன்ற கோரிக்கை உட்பட மேலும் பொதுவான கோரிக்கைகளையும் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம்.
ஜனாதிபதியுடனான சந்திப்பினை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவே ஏற்பாடு செய்துள்ளார். விரைவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கடந்தவாரம் இடம் பெற்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், நஷீர் அஹமட், ஏ.ஆர்.இஷாக், அலிசப்ரி ரஹீம்,எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.- Vidivelli