(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் ஹஜ் முகவர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர்கள் உம்ரா யாத்திரை ஏற்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.எம்.ஹிஷாம் தெரிவித்துள்ளார். அத்துடன் பொது மக்கள் உம்ரா யாத்திரைக்காக எவரிடமும் கட்டணம் செலுத்த வேண்டாமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அரச ஹஜ் குழுவும், கலாசார அமைச்சும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் அடுத்த வருட ஹஜ் யாத்திரையை இலங்கையர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
முகவர்கள் இரகசியமாக உம்ரா ஏற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படும் பிரசாரங்களுக்குபதிலளிக்கும் வகையில் ‘விடிவெள்ளி’க்கு விளக்கமளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்; இந்த வருட உம்ரா ஏற்பாடுகளுக்கான விதிமுறைகளின்படி IATA சான்றிதழ் பெற்றிருக்கும் முகவர்கள் சவூதி அரேபிய முவர்களைத் தொடர்பு கொண்டு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடலாம். அந்த உடன்படிக்கை சவூதியில் உள்ள இலங்கை கொன்சியூலர் நாயகத்தினால் சிபாரிசு செய்யப்பட்டு பின்பு இலங்கையில் வெளிநாட்டமைச்சு,சவூதிதூதரகம் என்பவற்றினால் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
உடன்படிக்கை சவூதி ஹஜ் அமைச்சுக்கு வழங்கப்பட்டதும் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். வங்கிகணக்கிலக்கமொன்றினை சவூதி ஹஜ் அமைச்சு வழங்கும். அந்த கணக்கிலக்கத்துக்கு இலங்கை வங்கியூடாக பணம் அனுப்ப முடியும். எல்லா கொடுப்பனவுகளும் வழங்கப்பட்ட பின்பு உம்ரா விசா வழங்கப்படும். IBAN கணக்கு ஊடாக பணம் அனுப்பி வைக்கப்படும். இது சட்டபூர்வமானதாகும்.
இந்நடைமுறையின் கீழ் IATA உள்ளவர்களுக்கு உம்ரா யாத்திரைக்கு மக்களை அனுப்ப முடியும். இந்த வகையிலே IATA சான்றிதழ் பெற்றுள்ள சில முகவர்கள் உம்ரா ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
அத்தோடு இரண்டு இலட்சம் சவூதி ரியால் வங்கி உறுதி சவூதி அரேபியாவின் முவர்களாலேயே சவூதி வங்கிக்கு வழங்கப்படுகிறது.
IATA சான்றிதழ் பெற்றுள்ள ஓரிருவரே இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.இந்நிலையில் ஹஜ் முகவர்கள் சங்கத்தின்உறுப்பினர்கள் உம்ரா ஏற்பாடுகளைச் செய்வதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. உம்ரா யாத்திரைக்காக எவரிடமும் முற்பணம் செலுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுவே சங்கத்தின்தீர்மானமாகும் எனவும் ஹிஷாம் கூறினார்.
மக்கள் இரண்டு வருடமாக ஹஜ் கடமையை மேற்கொள்ள முடியாதிருக்கின்றனர். எனவே அடுத்த வருட ஹஜ் கோட்டாவை அரச ஹஜ் குழு பெற்றுத்தர வேண்டும். இதற்கு திணைக்களமும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடி நிலைமையினை கருத்திற்கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்குடனே ஹஜ் முகவர்கள் சங்கம் உம்ரா ஏற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஹஜ் யாத்திரைக்கு அதிகமான ஹஜ் கோட்டாக்களைப் பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நோன்பு ஏப்ரல் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இரண்டு மாதங்களின் பின் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளப்படவுள்ளது என்பதனை கருத்திற்கொண்டு சவூதி அரேபியாவின் கொவிட் 19 சட்ட திட்டங்களைப் பேணி யாத்திரையை மேற்கொள்ள அனுமதி பெற்றுக்கொள்ளப்படவேண்டுமென ஹஜ் முகவர்கள் சங்கத்தின் இணைத் தலைவர்களான எம்.ஆர்.எம்.பாரூக் மற்றும் அஹமட் நிஜார் விடிவெள்ளிக்குத் தெரிவித்தனர். – Vidivelli