சட்டரீதியான பாதுகாப்பிலிருந்து கடத்தி துஷ்பிரயோகம்: விசாரணைக்காக பொலிஸ் நிலையம் சென்ற 15 வயது சிறுமிக்கு கருத்தரிப்பு பரிசோதனை
மாத்தறை பொலிஸாருக்கு எதிராக சிறப்பு விசாரணைகள் ஆரம்பம்
(எம்.எப்.எம்.பஸீர்)
15 வயது சிறுமி ஒருவரை அவரது சட்ட ரீதியிலான பாதுகாப்பிலிருந்து கடத்தி துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக, பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விசாரணைப் பிரிவுக்கு வந்த போது அவருக்கு அங்கு கருத்தரிப்பு தொடர்பிலான பரிசோதனைகளை முன்னெடுத்ததாக கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மோசமாக நடந்துகொண்ட பொலிசாருக்கு எதிராக பி.சி.ஏ.டப்ளியூ.பி.பீ. எனப்படும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பணியகத்தின் பணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ‘விடிவெள்ளியிடம் ‘ தெரிவித்தார்.
அத்துடன் அந்த சிறுமியை சட்ட ரீதியிலான பாதுகாப்பிலிருந்து கடத்தி துஷ்பிரயோகம், செய்த இளைஞனுக்கு எதிராக பிரத்தியேக சிறப்பு விசாரணைகளும், சட்ட நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, மாத்தறை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடொன்றில், இளைஞன் ஒருவன் 15 வயது சிறுமி ஒருவரை சட்ட ரீதியிலான பாதுகாப்பிலிருந்து கடத்தி துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணைகளுக்கு இருதரப்பும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, பொலிஸ் நிலையத்தில் பலர் முன்னிலையிலும் சிறுமிக்கு கருத்தரிப்பு பரிசோதனை செய்யப்பட்டு, அவர் கர்ப்பிணி என பொலிசாரால் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த பரிசோதனையை முன்னெடுக்க சந்தேக நபரான இளைஞனின் தாயார் மருந்தகத்திலிருந்து கருத்தரிப்பு பரிசோதனை கருவியை கொள்வனவு செய்து வந்து கொடுத்துள்ளதுடன், அதனையடுத்து சிறுமியிடம் சிறுநீர் மாதிரியை பெற்று பொலிசார் இந்த பரிசோதனையை செய்துள்ளதாக அறிய முடிகிறது. இவை பலர் முன்னிலையிலும் நடந்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் அந்த பரிசோதனைகளின் பின்னர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறி, அவரை அழைத்துச் சென்று திருமணம் முடிக்குமாறு சந்தேக நபரான இளைஞருக்கே தெரிவித்துள்ள உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இரு நாட்களில் விவாக பதிவினை உறுதி செய்யும் ஆவணத்தை கொண்டுவந்து காண்பிக்க வேண்டும் எனவும் கூறியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் கூறுகின்றனர்.
இதனைவிட, சிறுமியின் வயிற்றுப் பகுதியில் காணப்பட்ட காயங்களை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் படம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பில் நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றினை அடுத்து, விடயத்தை அறிந்துள்ள மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸா, உடனடியாக உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
அதன் அறிக்கையையும் மையப்படுத்தி, இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலேயே, சம்பவம் தொடர்பிலான சிறப்பு விசாரணைகள் தற்போது பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பதுகாப்பு பணியகம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. – Vidivelli