உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி கைது செய்யப்பட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம் அரசியல் கைதிகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள எவரும் வாய்திறக்காமை கவலையளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கனடாவுக்கு விஜயம் செய்துள்ள அவருக்கு, கடந்த 24ஆம் திகதி அங்கு வாழும் இலங்கை முஸ்லிம்களால் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் சாணக்கியன் எம்.பி. தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அண்மையில் காத்தான்குடியைச் சேர்ந்த தாய்மார்கள் குழுவொன்று என்னை வந்து சந்தித்தார்கள். கைது செய்யப்பட்டுள்ள தமது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள அமைப்புகள் மௌனம் காப்பது தொடர்பில் அவர்கள் தமது கவலைகளை என்னிடம் தெரிவித்தார்கள். இது வரை ஒரு அமைப்புகூட அவர்களது விடுதலைக்காக வீதியில் இறங்கி குரல் கொடுக்கவோ, அறிக்கை ஒன்றைக் கூட வெளியிடவோ இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். முஸ்லிம் பெண்களாகிய எங்களால் வீதியில் இறங்கிப் போராட முடியாது, அப்படிச் செய்தால் எங்களை சமூகம் பிழையாகப் பார்க்கும் என்பதையும் அவர்கள் எனக்கு விளக்கினார்கள்.
இந்த 300 பேரையும் முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக்கப் போகிறதா என நான் கேட்க விரும்புகிறேன். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறோம். தொடர்ந்தும் அதற்காக நாம் முன்னிற்போம்.
முஸ்லிம் அரசியல்வாதிகளை விடுங்கள். அவர்கள் ஒருபோதும் குரல் கொடுக்கமாட்டார்கள். தௌபீக் எம்.பி.யின் வீட்டின் மீது மக்கள் ஏன் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் மீது உள்ள அதிருப்தியின் வெளிப்பாடே அது.
ஆகக் குறைந்தது, இந்த 300 பேரையும் விடுவியுங்கள், வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கிறோம் என்றாவது அதனை ஆதரித்து முஸ்லிம் எம்.பி.க்கள் அரசுக்கு நிபந்தனை விதித்திருக்கலாம். அதனைக் கூட அவர்கள் செய்யவில்லை.
இந்த முஸ்லிம் அரசியல் கைதிகள் பிழை செய்திருந்தால் உடனடியாக அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யுங்கள் என்றே நாம் கூறுகிறோம். குற்றமற்றவர்கள் என்றால் தொடர்ந்தும் தடுத்து வைக்காது உடன் விடுவியுங்கள். 31 மாதங்களாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இவர்களது விடுதலை தொடர்பில் இதுவரை ஒரு முஸ்லிம் அமைப்பு கூட வீதியில் இறங்கிப் போராட வில்லை என்பது கவலை தருகிறது.
வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் தமிழ் பேசும் சமூகங்களாக ஒற்றுமைப்படாத வரை அங்குள்ள சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியாது. இந்த ஒற்றுமையில்தான் எமது எதிர்காலமே தங்கியுள்ளது.
இன்று தமிழ்கள் மத்தியிலும் இஸ்லாமோபோபியாவின் தாக்கத்தை காண முடிகிறது. படித்த வைத்தியர்கள் கூட முஸ்லிம் வைத்தியர்களால் தமது தொழிலுக்கு ஆபத்து வரலாம் என வெளிப்படையாகக் கூறுகின்ற நிலைமை தோன்றியுள்ளது. இது இஸ்லாமோபோபியாவின் விளைவுதான். இவ்வாறான சந்தேகங்களைப் போக்க நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே என்னைப் பார்க்கின்றேன்.
சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் சாணக்கியன் ஏன் முஸ்லிம்களின் பிரச்சினையைப் பேச வேண்டும் என்ற கேள்வி உள்ளது. எங்களுக்காக ஏன் பேசுகின்றார் என அவர்கள் கேட்கலாம். எனினும் நான் அனைத்து மக்களது பிரச்சனைகளுக்காகவுமே குரல் கொடுகின்றேன்.
இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியிலேயே எனக்கு அதிக வரவேற்பு உள்ளதை நான் அறிவேன். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது அவர்கள் எங்களை பாராட்டுவதனை விடவும், இஸ்லாமியர்களுடைய பாராட்டுக்கள் அதிகமாக வருகின்றது. எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர், நாங்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று கூறினார். அது உண்மைதான். எனினும் நான் அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை என்றார்.
இந் நிகழ்வில் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். – Vidivelli