நாங்கள் இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்கும்போது அதற்காக எங்களைப் பாராட்டுகின்றீர்கள், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. அதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக முஸ்லிம்களின் குரல் எப்போது எழும் என்று நாம் காத்திருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
கனடாவுக்கு விஜயம் செய்துள்ள அவருக்கு, கடந்த 24 ஆம் திகதி அங்கு வாழும் இலங்கை முஸ்லிம்களால் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உட்பட பலர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் சாணக்கியன் எம்.பி. தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பாத யாத்திரையின் போது ஒரு எல்லையிலிருந்து அடுத்த எல்லைவரை இஸ்லாமிய மக்கள் எம்மோடு நடந்து வந்தார்கள். அந்த எல்லையுடன் நின்றுவிட்டார்கள், அதற்குப் பின் அவர்கள் வரவில்லை. முழு தூரமும் நீங்கள் எங்களுடன் வர வேண்டும். அந்த நடை பயணத்தில் மட்டுமல்ல எமது அரசியல் பயணத்திலும் முழு தூரமும் எங்களோடு நீங்கள் வர வேண்டும். அப்போதுதான் நாம் இரண்டு சமூகமும் இந்நாட்டிலே தலைநிமிர்ந்து வாழ முடியும்.
எங்களுக்கு வெவ்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. முஸ்லிம்கள் தனியான அடையாளமுள்ள மக்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதில் எந்தவித தயக்கமோ சலனமோ எங்களிடத்தில் கிடையாது. ஆனால், இந்த நாட்டிலே வாழும் எண்ணிக்கையிலேயே சிறுபான்மையினராக இருக்கின்ற மொழியினால் ஒன்றுபட்ட சமூகங்களான நாங்கள் ஒன்றாக செயற்படாவிட்டால் எமக்கு விடிவு கிடைக்காது. இதனை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
எம்மை நாம் சிறுபான்மையினர் என்று கூறாது மக்கள் என்று கூற வேண்டும் என நான் காத்தான்குடியில் குறிப்பிட்டிருந்தேன்.
சரியானது எதுவோ, நீதியானது எதுவோ, மக்களுக்கு நல்லது எதுவென்று நாங்கள் நினைப்பது எதுவோ அதை செய்வதில் ஒருபோதும் நாம் பின்நிற்க மாட்டோம். அது அனைத்து மக்களுக்கும் நன்மையானதாக இருக்க வேண்டும். சிங்கள மக்களுக்கு தீமையான எதையும் நாங்கள் செய்ய மாட்டோம் என்பதை நான் தெளிவாக சொல்கிறேன்.
அதேபோன்று, இஸ்லாமிய மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் எதையும் நாங்கள் செய்ய மாட்டோம். எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற ஏனைய சமூகங்களுக்கும் தீங்கிழைக்கும் எதையும் நாம் செய்ய மாட்டோம். நாங்களும் சக பிரஜைகளாக இலங்கையில் வாழ வேண்டும். எங்களுக்கும் தீமை ஏற்படக் கூடாது. எங்களின் சமூகம் எதிர்பார்க்கும் நீதி கிடைக்கவேண்டும்.
சம பிரஜைகளாக வாழ்தல் என்றால் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதல்ல. சமபிரஜைத்துவம் என்று சொல்வது, எல்லோரும் ஒரு மக்கள் என்பதல்ல. இலங்கையில் இரண்டு மூன்று அடையாளங்கள் இருக்கலாம். ஆனால், அதற்குள்ளே தனிப்பட்ட அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதன்போதுதான், இலங்கையர் என்கின்ற அடையாளம் பெருமைமிக்கதாக, பெறுமதியாக, சிறப்பானதாக அமையும். தனித்துவ அடையாளங்களை மறுத்து எல்லோரையும் ஒரே மாதிரியாக சித்திரிக்கின்றதானது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
அடுத்த தேர்தலில் இஸ்லாமியர்கள் சாணக்கியன் எம்.பி.க்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். அதேபோல், தமிழ் மக்களும் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். இதற்கான சூழ்நிலை வரவேண்டும். தற்போது, அந்த சூழல் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், இஸ்லாமிய வேட்பாளர்கள் எமது கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள். எமது கட்சியில் அந்த பேதம் இருந்ததில்லை.
1977 ஆம் ஆண்டு அரசியல் மேடைகளில் “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்காவிட்டால், தம்பி அஷ்ரப் பெற்றுக்கொடுப்பான்” என்று எம்.எச்.எம்.அஷ்ரப் கூறியிருந்தார். அந்த அளவுக்கு எமது உறவு இருந்தது. துரதிஷ்டவசமாக ஆயுதப்போராட்ட காலங்களிலே பல தீமைகள் இரு சாராருக்கும் நிகழ்ந்திருக்கிறது. இப்போது ஆயுதப் போராட்டங்கள் இல்லை. அது முடிந்து 12 வருடங்களாகிவிட்டது. அந்த உறவை கொண்டுவருவதற்கு திரும்பவும் எமக்கு 12 வருடங்கள் தேவையா? அடுத்த வருடமே நாம் ஒன்றாக வேண்டும் என்றார். – Vidivelli