நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு கசிவு மற்றும் அதனோடிணைந்த வெடிப்புச் சம்பவங்கள் பரவலாகப் பதிவாகி வருகின்றமை மக்களைப் பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்த நேரத்தில் எந்த வீட்டில் வெடிக்குமோ என்ற பதற்றத்தில் நிம்மதியின்றித் தவிக்கின்றனர்.
ஏலவே சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக கடந்த பல மாதங்களாக நெருக்கடிகளைச் சந்தித்து வந்த மக்களுக்கு இந்த எரிவாயுக் கசிவு விவகாரம் மேலும் தலையிடியைக் கொடுத்துள்ளது.
கடந்த நவம்பர் 20 முதல் நேற்று மாலை வரை சுமார் 30க்கும் அதிகமான எரிவாயுக் கசிவு மற்றும் அதனால் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் நாடெங்கும் பதிவாகியுள்ளன. கடந்த இரு தினங்களில் மாத்திரம் 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை அனைத்திற்கும் எரிவாயுக் கசிவுதான் காரணமா என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே இது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நால்வர் கொண்ட குழுவின் அறிக்கை நேற்று மாலை நுகர்வோர் அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் கண்டறிதல்கள் குறித்து நேற்றிரவு வரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்களால் அதன் இரசாயனக் கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே இந்த வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை நுகர்வோர் அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என எரிவாயு விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோன்று இக் கலவையின் விகிதத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே இதற்குக் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சில ஆவணங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் தாம் எரிவாயு கலவையில் எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என்றும் சர்வதேச தர நிர்ணயங்களைப் பின்பற்றியே செயற்பட்டு வருவதாகவும் குறித்த எரிவாயு விநியோக நிறுவனம் வாதிட்டு வருகின்றது. அதுமாத்திரமன்றி நுகர்வோரின் தவறான கையாள்கையே இந்த விபத்துகளுக்குக் காரணம் என நுகர்வோர் மீதே அந்நிறுவனம் பழிசுமத்த ஆரம்பித்துள்ளது.
சமையலறை விபத்துச் சம்பவங்கள் அவ்வப்போது நாட்டில் நிகழ்வது வழக்கம். எனினும் நாடெங்கும் குறுகிய காலத்தினுள் இவ்வாறான வெடிப்புச் சம்பவங்கள் இதற்கு முன்னர் பதிவாகவில்லை. எனவேதான் இதன் உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் எரிவாயு விநியோகத்தில் இரண்டு நிறுவனங்களே ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளன. இதுவே இவ்வாறான சிக்கல்கள் நீடிக்கவும் குறித்த நிறுவனங்கள் பொறுப்பற்ற விதமாக நடந்து கொள்ளவும் காரணமாகும். இந்த ஏகபோக உரிமை நீக்கப்பட்டு, போட்டிமிக்க சந்தைச் சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமே நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க முடியுமாகவிருக்கும்.
தேசிய பாதுகாப்பு என்பது நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களும் அச்சமின்றி நிம்மதியாக வாழ வழிவகுப்பதாகும். தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பது மாத்திரம் தேசியப் பாதுகாப்பல்ல. இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு எனும் கோஷத்தை முன்னிறுத்தியே ஆட்சிக்கு வந்தது. துரதிஷ்டவசமாக இன்று வீட்டில் உள்ள சமையல் எரிவாயு கூட பாதுகாப்பற்றதாக மாறி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற அளவுக்கு நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது.
இன்று ஒவ்வொரு வீட்டிலும் வெடி குண்டுகள் இருப்பதாக இந்த விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். அப்படியானால் அந்த வெடி குண்டுகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் அனுப்பிய நிறுவனத்திற்கு எதிராக, அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? அல்லது எல்லா வீடுகளும் வெடித்துச் சிதறும் வரை அரசாங்கம் வேடிக்கை பார்க்கப் போகிறதா?- Vidivelli