அல்லாஹ் அல்லாஹ் என கத்தினேன்
ஸ்கூல் பேக் தான் என்னை மிதக்க வைத்தது;
சம்பவத்தின் உயிர்தப்பிய 9 வயது மாணவி அனீக்கா
நாங்க எல்லாரும் பாதையில போயிட்டிருந்தம். அப்பதான் அது கெழிஞ்சி விழுந்தது. எனக்கு சரியான பயம் வந்துட்டு. அல்லாஹ் அல்லாஹ் என்டு சத்தமா கத்தினன். நான் போட்டிருந்த ஸ்கூல் பேக் என்ன தண்ணிக்குள்ள போக விடாம என்ன உசத்தி விட்டது. அதாலதான் நான் மிதந்தன். கைய அடிச்சி அடிச்சி நீந்தினன். கொஞ்ச நேரத்துல போட்ல வந்து என்ன காப்பாத்தினாங்க. எனக்கு பக்கத்துல இருந்த இரண்டு பிள்ளைகளும் மௌத்தாகிட்டாங்க. எனக்கு முன்னுக்கு இருந்த டீச்சரும் மௌத்தாகிட்டாங்க. அவங்க நல்ல டீச்சர். எங்கட ஏரியாவுலதான் அவங்கட வீடு இருக்கு. என்ட கையில சின்ன காயம் இருக்கு. நான் ஹொஸ்பிட்டல் போகல. உடன வாப்பா வந்து என்ன வீட்டுக்கு கூட்டி வந்தாங்க என கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிர்தப்பிய 9 வயது சிறுமி பாத்திமா அனீக்கா விடிவௌ்ளிக்குத் தெரிவித்தார்.
கிண்ணியா அல் அஸ்கர் கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் இவர் வழக்கமாக தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில்தான் பாடசாலைக்குச் செல்வார். எனினும் அன்றைய தினம் மோட்டார் சைக்கிளில் வீதி வழியாகச் செல்ல அதிக நேரம் எடுக்கும் என்பதால் அனீக்காவின் தந்தை ரனீஸ், தனது மகளை குறித்த படகுப் பாதையில் ஏற்றி பாடசாலைக்கு அனுப்பினார். இது குறித்து அனீக்காவின் தந்தை ரனீஸ் விடிவெள்ளிக்கு கூறுகையில்,
அன்று நான் மகளை பாதையில் ஏற்றிவிட்டு, பாதை ஆற்றில் அரைவாசி தூரத்தை கடந்த பின்னர் நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். பின்னர்தான் இந்த விபத்து பற்றிக் கேள்விப்பட்டேன்.
நாங்கள் கடலுக்கு அருகில் வசிப்பதால் எனது மகளுக்கு நீச்சல் தெரியும். அவர் கைகளை அடித்து அடித்து நீந்தியுள்ளார். அவர் தனது தோள்களில் அணிந்திருந்த பாடசாலைப் பை நீர் புகாதது. அதனால் அப் பை, மகளை நீருக்குள் மூழ்க விடவில்லை. பாதை கரையை அடைய சிறிது நேரம் இருந்ததால் எல்லோரும் பாதையின் முன்பக்கமாகச் சென்றுள்ளார்கள். இதனால் ஒரு பக்கம் பாரம் கூடி, பாதை கவிழ்ந்துள்ளது.
மகள் நீந்திக் கொண்டிருந்த போது மீனவர்கள் உடனடியாக படகில் வந்து இவரைத்தான் முதலில் காப்பாற்றியுள்ளனர். இவரோடு சேர்த்து மேலும் 7 பிள்ளைகளைக் காப்பாற்றியுள்ளனர்.
பிள்ளைகள் பாடசாலை செல்லும் நேரத்தில் அதிக வாகன நெரிசல் இருப்பதால் கடந்த இரு வாரங்களாக நான் பிள்ளையை இந்தப் பாதையில்தான் அனுப்புவேன். இப் பாதையில் 5 முதல் 10 நிமிடங்களிலேயே ஆற்றைக் கடந்து விடலாம். பாதை தரையிறங்கும் இடத்திலேயே பாடசாலையும் உள்ளது. இதனால்தான் எல்லோரும் இப் பாதையை பயன்படுத்துவார்கள் என்றும் அனீக்காவின் தந்தை ரனீஸ் மேலும் குறிப்பிட்டார்.
நாங்கள் நீருக்குள் விழ எங்கள் மீது பாதை கவிழ்ந்து விழுந்தது
நீந்திக் கரை சேர்ந்து கூக்குரலிட்ட
பின்னரே காப்பாற்றுவதற்கு மக்கள் வந்தனர்;
சம்பவத்தில் மகனுடன் உயிர் தப்பிய ஆசிரியரின் திகில் அனுபவம்
பாதை கரையை அடைய 10 மீற்றர் தூரமே இருந்தது. அப்போதுதான் பாதை ஒரு பக்கமாக சரிந்தது. பின்னர் அதிலிருந்த நாங்கள் நீருக்குள் வீழ்ந்தோம். பாரத்தை தாங்க முடியாததால் பாதை தலை கீழாகப் புரண்டு எங்கள் மேல் கவிழ்ந்தது என கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிர்தப்பிய ஆசிரியர் எம்.எம். ரமீஸ் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் ஆசிரியர் ரமீஸ், தனது மகனுடன் பாடசாலைக்குச் செல்லும் நோக்கில் குறித்த படகுப் பாதையில் பயணித்த போதே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
இவருடன் பயணித்த மகன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். இந் நிலையில் சம்பவம் தொடர்பில் ஆசிரியர் எம்.எம். ரமீஸ் விடிவெள்ளிக்கு தொடர்ந்தும் விபரிக்கையில்,
அன்று காலை 7.30 மணியளவில் வழக்கம்போல் நானும் எனது மகனும் பாடசாலை செல்வதற்காக இப் பாதையில் எனது மோட்டார் சைக்கிளுடன் பயணித்தோம். 3 மோட்டார் சைக்கிள்களுடன் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடங்கலாக 25 பேர் வரை அப்போது பயணித்தோம். பாதை பயணித்து கரையை அடைவதற்கு சுமார் 10 மீற்றர் தூரம் இருக்கையில், ஒரு பக்கமாக சரியத் தொடங்கியது.
பாதை உடைந்து கவிழவில்லை. மாறாக பயணித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் சம நிலை இல்லாததாலேயே சரிந்தது. இவ்வாறு ஒரு பக்கமாக சரியவும் எல்லோரும் மறுபக்கமாக நகர்ந்தனர். அப்போதுதான் பாதை தலைகீழாகப் புரண்டது.
பாதையில் பயணித்த நாம் தண்ணீருக்குள் கீழே விழ எமக்கு மேல் பாதை வீழ்ந்தது. பாதை கவிழ்ந்த இடம் ஆழமான பகுதியாகும். சுமார் 12 முதல் 15 அடி வரை அப் பகுதி ஆழமானது என நினைக்கிறேன்.
ஆட்களுக்கு மேல் பாதை விழுந்ததால் உடனடியாக எங்களால் நீருக்கு மேலே வர முடியாமல் போனது. இருந்தாலும் நான் எனது மகனைப் பிடித்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினேன். இன்னுமொரு பாடசாலை மாணவன் எனது காலைப் பிடித்துக் கொண்டே கரையை நோக்கி வந்தார்.
பாதை கவிழ்ந்த நேரத்தில் கரையில் 2 பேர் மாத்திரமே நின்றிருந்தனர். இதனால் நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றுவதற்கு உதவிக்கு யாராலும் வர முடியவில்லை. நாம் கரைக்கு வந்து கூக்குரலிட்டோம். சுமார் 15 நிமிடங்களின் பின்னரே மக்கள் அங்கு கூடினர். எனினும் அந்த இடத்தில் உடனடியாக எல்லோரையும் காப்பாற்றக் கூடிய சூழல் இருக்கவில்லை. நீரோட்டம் வேகமாகவிருந்தது.
இந்தப் பாதை சேவையை ஆரம்பித்து 2 மாதங்கள்தான் இருக்கும் என நினைக்கிறேன். இந்த சேவையை நடாத்தியவரின் நோக்கம் நல்லது. இதனால் நாம் பயனடைந்தோம். எனினும் இதற்கு அனுமதி வழங்கியவர்கள் இதனை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்களை வழங்கியிருக்க வேண்டும். அதிகாரிகள் இதனை கண்காணித்திருக்க வேண்டும். அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கவனயீனம், அக்கறையின்மைதான் இந்த விபத்துக்குக் காரணம். இதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆக வேண்டும் என்றார்.
(படங்கள் : குமணன்)\- Vidivelli