றிப்தி அலி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குளினால் கடந்த திங்கட்கிழமை (22) நிறைவேற்றப்பட்டது.
எதிர்கால ஜனாதிபதி என்ற கனவுடனுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனினும் இந்த வரவு செலவுத் திட்டத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையினை நாட்டு மக்களுக்கு மீண்டுமொன்று தடவை காண்பிக்க வேண்டியிருந்தது.
பாராளுமன்றத்தில் 145 ஆசனங்களை கொண்டுள்ள ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக ஆதரவாக வாக்களிப்பர் என வாக்கெடுப்புக்கு முன்னரே பலரும் ஆரூடம் கூறியிருந்தனர். இதில் ஒரு சில எம்.பி.க்கள் தாம் ஆதரவாக வாக்களிப்போம் என்பதை முன்கூட்டியே பகிரங்கமான தெரிவித்திருந்தனர்.
கடந்த முறை 20ஆவது திருத்தச் சட்டம் வாக்கெடுப்புக்கு வந்த போதும் மேற்படி 7 முஸ்லிம் எம்.பி.க்களும் அதற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தனர். இந்த செயற்பாடு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பாரிய விமர்சனத்தைத் தோற்றுவித்திருந்தது.
குறித்த ஏழு பேரும் தனியாக செயற்பட்டு வருவதுடன் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே அரச ஆதரவு அணியினராக செயற்படுகின்றனர். இவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரம் கூட ஆளும் கட்சியினாலேயே வழங்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட அபிருத்தி குழுத் தலைவர் பதவிகளும், சிலருக்கு அரசாங்க வாகனங்களும், எரிபொருள் கொடுப்பனவும் வேறு சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு ஆளும் அரசாங்கத்துடன் தேனிலவு கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது தொடர்பில் முழு நாடும் அதிகம் அவதானித்துக்கொண்டிருந்தது.
இவ்வாறான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற இரண்டு முஸ்லிம் கட்சிகளினதும் உயர் பீட கூட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வரவு செலவுத் திட்டத்தினை எதிர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் கட்சியின் தீர்மானத்தினை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், கட்சிகளின் தீர்மானத்தினை கருத்திற் கொள்ளாது ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தனர். அதேவேளை, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா. தலைவர் ரிசாத் பதியுதீன் ஆகிய இருவரும் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
இவர்களின் ஆதரவினையும் சேர்த்து 153 வாக்குகள் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக கிடைத்தன.
இடைநிறுத்தம்
இப் பின்னணியில்தான் கட்சியின் தீர்மானத்தை மீறி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களான இசாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மற்றும் முஷர்ரப் முதுநபீன் ஆகியோர் அக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமது கட்சித் தீர்மானத்தை மீறி வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் நஸீர் அகமட் ஆகியோரை கட்சியின் பதவிகளிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இவர்கள் இடைநிறுத்தப்படவில்லை. மாறாக கட்சியில் வகித்து வந்த பதவிகளிலிருந்தே இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
கடும் விமர்சனங்கள்
இதேவேளை, குறித்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்த செயற்பாடும் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
தாம் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தன் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளதாக குறித்த எம்.பி.க்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். எனினும் அவ்வாறு சமூகம் நன்மையடைந்ததாக எங்கும் காண முடியவில்லை. மாறாக இவர்களின் தனிப்பட்ட நலன்களே நிறைவேற்றிக்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த பின்னரே கொவிட் காரணமாக உயிரிழப்போர் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டது நிறுத்தப்பட்டதாக தெரிவித்து வருகின்றனர். எனினும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலையீட்டினை அடுத்தே கட்டாய தகனம் நிறுத்தப்பட்டது என்பதே யதார்த்தமாகும்.
ஓட்டமாவடியில் மாத்திரமே இப்போது கொவிட் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. இதனால் ஏனைய மாவட்டங்களில் வாழும் மக்கள் ஜனாஸாக்களை அங்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதில் பாரிய சிரமங்களைச் சந்திக்கின்றனர். எனினும் இதற்குக் கூட தீர்வைப் பெற்றுக் கொடுக்க இந்த எம்.பி.க்களால் முடியவில்லை. அது மாத்திரமல்லாமல் நல்லடக்கத்திற்கான ஒதுக்கப்பட்ட காணியில் இடப்பாற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக வேறு இடத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் இவர்களால் முடியவில்லை.
அதேவேளை, மாடறுப்பு தடை, காதி நீதிமன்ற ஒழிப்பு, புர்கா தடை, முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்ட விவகாரம், ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி போன்ற விடயங்களில் கூட தலையிட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க இவர்களுக்கு திராணியில்லாது போய்விட்டது.
தற்போது இந்த தடைகளை அமுல்படுத்துவதற்கான சட்ட மூலங்கள் சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த தீர்மானங்களை வாபஸ் பெறச் செய்வதற்கான எந்தவித பலமும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடமில்லை.
இதேவேளை, கல்முனை மாநகரை பாதுகாப்பதென்றால் வரவு செலவுத் திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆதரவளிக்க வேண்டும் என கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் வேண்டுகோளொன்றை விடுத்திருந்தது. இந்த வேண்டுகோளை உத்தியோகபூர்வமாக வெளியிடும் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்று கல்முனை முஹையதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் நேரடி அரசியல் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசாங்கத்துடன் தேனிலவு கொண்டாடும் குறித்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கல்முனை விவகாரத்திற்கு ஏன் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளுராட்சி, மாகாண சபை இராஜாங்க அமைச்சராக ஹரீஸ் செயற்பட்ட போதே இதற்கு நிரந்த தீர்வினை பெற்றுக்கொடுத்திருக்கலாம். எனினும் இதற்காக அவர் ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை.
வரவு செலவுத்திட்டத்தை ஆதரிக்குமாறு கோரி கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் நடாத்திய நாடகம் போன்ற மற்றுமொரு நாடகத்தை பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரபும் அரங்கேற்றினார். முஷர்ரப் எம்.பி. பட்ஜட்டை ஆதரிக்க வேண்டும் என சிலர் வீடியோக்களில் தோன்றி அன்று காலை முகநூல் ஊடாக கோரிக்கைகளை முன்வைத்தனர். எனினும் இது குறித்த எம்.பி.யின் ஏற்பாட்டில் நடந்த நாடகம் என்பது பின்னர் உறுதியானது.
இவ்வாறு குறித்த 7 முஸ்லிம் எம்.பி.க்கள் மாத்திரமன்றி அவர்களது கட்சித் தலைவர்கள், உயர் பீடங்கள் கூட மக்களை ஏமாற்றும் வகையிலேயே தொடர் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். 20 க்கு ஆதரவளித்தவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த மு.கா. தலைவர் ஹக்கீம், பின்னர் அவர்களை மன்னித்துவிட்டதாக மற்றுமொரு பூச்சாண்டியை அரங்கேற்றினார். அதேபோன்றுதான் 20 ஐ ஆதரித்த தனது கட்சி எம்.பி.க்களை ரிஷாத் பதியுதீன் அண்மையில் தான் சென்ற இடங்களிலெல்லாம் குறித்த எம்.பி.க்களை அரவணைத்து மகிழ்ந்தார்.
இப்படி முஸ்லிம் கட்சிகள் அனைத்துமே சமூகத்தை ஏமாற்றுவதையே குறியாகக் கொண்டு செயற்படுகின்றன. இதற்கு முற்றுப் புள்ளி வைப்பது யார் என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி.- Vidivelli