– பிணை மறுக்கப்பட்டது ஏன்?
– போலியாக புனையப்பட்ட வழக்கு என மன்றுக்கு அறிவிப்பு
– ஜனவரி 28 இல் சாட்சி விசாரணை
எம்.எப்.எம்.பஸீர்
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணைகளுக்கான திகதியும் குறிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக வேறு விடயங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுவது தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 19 ஆம் திகதி, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, மன்றில் முன்வைத்த விடயங்கள் ஊடாக இந்த விடயம் வெளிப்பட்டது. எனினும் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்படும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத அந்த விசாரணைகள் என்ன என்பதை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா வெளிப்படுத்தவில்லை.
தம் பக்க நியாயங்களை முன் வைக்க, குறிப்பாக வழக்கின் சாட்சியாளர்களான மலிக் மற்றும், பெளசான் ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு வாக்கு மூலம் வழங்கியிருப்பின் அதன் பிரதிகள், ரி.ஐ.டி., சி.சி.டி. ஆகிய பொலிஸ் பிரிவுகள் இவ்வழக்குடன் தொடர்புபட்டு முன்னெடுத்த இருவேறு விசாரணைகள் தொடர்பிலான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பிரதானமாக கோரினர். எனினும் அவற்றை வழங்க முடியாது என சட்ட மா அதிபர் மறுப்பு தெரிவித்தார்.
பிரதிவாதிகள் கோரும் சான்றாவணங்கள் பல, இந்த வழக்குடன் நேரடியாக தொடர்புபட்டதல்ல எனவும், அத்துடன் பிரதிவாதிகளுக்கு எதிராக இடம்பெறும் வேறு விசாரணைகளுடன் தொடர்புடையது என்பதாலும் அவற்றை வழங்க முடியாது என வழக்குத் தொடுநர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.
இதனூடாகவே, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மெளலவி சலீம் கான் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குக்கு மேலதிகமாக வேறு விடயங்கள் குறித்த பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றதா எனும் கேள்வி எழுந்துள்ளது.
கைதும் குற்றச்சாட்டுக்களும்
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் தொடர்புபட்ட சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியுடன் தொடர்புகளை பேணியதாக கூறி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சி.ஐ.டி. யினரால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டிருந்தார். அது முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை, பயங்கரவாத தடை சட்டத்தின் குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதற்கான தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியே, அக்குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரை மன்றில் ஆஜர் செய்ய சட்ட மா அதிபர் கடந்த பெப்ரவரி 17இல் ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதன்படி இக்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, ஹிஜாஸிடம் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொண்டு அதன் பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்த நிலையிலேயே முதன் முறையாக கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி ஹிஜாஸ் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அன்று முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே சட்ட மா அதிபர் கடந்த பெப்ரவரி 17 வழங்கிய ஆலோசனைக்கு அமைய ஹிஜாஸுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக கூறி, அல் சுஹைரியா மத்ரஸாவின் அதிபர் மொஹம்மட் சகீல் அன்றைய தினமே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே அவ்விருவருக்கும் எதிராக தற்போது புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை கண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போது குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின், சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 2022 ஜனவரி 28 ஆம் திகதி ஆரம்பிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்காக முதல் சாட்சியாளருக்கு சாட்சியம் வழங்க அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தலும் அனுப்பப்பட்டுள்ளது.
பிணை மறுக்க காரணம் என்ன?
இருவருக்குமாக கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை கோரி வாதங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.
ஹிஜாஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸ பிணை கோரி வாதங்களை முன் வைத்துள்ளார். அவர் சுமனசேன எதிர் சட்ட மா அதிபர் எனும் உயர் நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய வழக்குத் தீர்ப்பை முன் வைத்து பிணை கோரியுள்ளார்.
இதனையடுத்து சலீம் கான் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, பல உயர் நீதிமன்ற தீர்ப்புக்களை மன்றில் முன்னிறுத்தி, நீதிமன்றின் செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேறு நிறுவனங்களுக்குக்கு அதிகாரம் இல்லை எனவும், பிணையளிப்பது குறித்த செயற்பாடு நீதிமன்றின் செயற்பாடு என சுட்டிக்காட்டி பிணை கோரியுள்ளார்.
எவ்வாறாயினும் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொல்சிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, பயங்கரவாத தடை சட்டம் என்பது நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் எனவும், அதன் கீழ் குற்றம் சாட்டப்படும் ஒருவருக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றுக்கு நீதிமன்ற அதிகாரம் இல்லை எனவும் வாதிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே, இந்த பிணை கோரிக்கை தொடர்பிலான நீதிமன்றின் தீர்மானத்தை கடந்த 19 ஆம் திகதி நீதிபதி குமாரி அபேரத்ன அறிவித்தார்.
நீதிபதியின் தீர்ப்பு
‘முதலாம், இரண்டாம் பிரதிவாதிகளுக்கு ( ஹிஜாஸ், மெளலவி சலீம் கான்) பிணையளிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை முன் வைத்துள்ளனர். பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயத்தின் கீழ் பிரதிவாதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குடியகல்வு குடிவரவு சட்டத்தின் 48 (1) ஆம் பிரிவை ஒத்த நிலைமையை அச்சட்டப் பிரிவு கொண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 48 (1) ஆம் அத்தியாயமானது அரசியலமைப்பின் 13 (2) ஆம் உறுப்புரிமையை மீறுவதாக உயர் நீதிமன்றின் திலங்க சுமதிபால, குமாரதாச உள்ளிட்ட வழக்குளின் தீர்ப்புக்களுடன் ஒப்பீடு செய்து பிணை கோரி பிரதிவாதிகள் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, பிரதிவாதிகள் பயங்கரவாத தடை சட்டத்தின் 15 (2) ஆம் அத்தியாயத்தின் கீழேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் செல்லாது எனவும் வாதங்களை முன் வைத்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயமானது, ஒருவர் சந்தேக நபராக இருக்கும் சூழலில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிப்பதற்கான ஏற்பாடாகும். இவ்வழக்கில் பிரதிவாதிகளான இந்த இருவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் 15 (2) ஆம் பிரிவின் கீழேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவே வழக்குத் தொடுநரின் நிலைப்பாடாகும்.
இந்நிலையில், பிரதிவாதிகளுக்கு பிணையளிக்க இந்த நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என்பதால், அவர்களின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.’ என மேல் நீதிமன்ற நீதிபதி தனது பிணை குறித்த தீர்ப்பில் அறிவித்தார்.
வழக்கு விசாரணைக்கு திகதி
அதன்படி இந்த வழக்கானது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி சாட்சி விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைய தினம் வழக்கின் முதல் சாட்சியாளரை மன்றில் ஆஜராக நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது. அத்துடன் அன்றைய தினத்தில் பிரதிவாதிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவரையும் மன்றில் கண்டிப்பாக ஆஜர் செய்யுமாறு நீதிபதி குமாரி அபேரத்ன, நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சருக்கு விஷேட உத்தரவினைப் பிறப்பித்தார்.
சான்றாவணங்களை கோரும் ஹிஜாசும் மறுக்கும் சட்ட மா அதிபரும்
நியாயமான வழக்கு விசாரணைகளுக்காக, தம் பக்க நியாயங்களை முன் வைக்க தேவையான சான்றாவணங்களைப் பெற்றுக்கொள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் உள்ளிட்ட இருவர் சார்பிலும் பல ஆவணங்கள் வழக்குத் தொடுநரிடம் கோரப்பட்டுள்ளன. எனினும் அவற்றில் பலதை வழங்கியுள்ள வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பு, சில ஆவணங்களை வழங்க முடியாது என மறுத்து வருகிறது.
இந் நிலையில் அவ்வாறான ஆவணங்களை பெற்றுக்கொள்ள நீதிமன்றின் உத்தரவினைப் பெறும் நோக்கில் , கடந்த நவம்பர் 19 ஆம் திகதி பிரதிவாதிகளுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள வாதங்களை முன் வைத்திருந்தார்.
அதற்கு பதில் வாதங்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா முன் வைத்தார்.
இந் நிலையில் இருபக்க வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி , பிரதிவாதிகள் கோரும் சான்றாவணங்களை வழங்க நீதிமன்ற உத்தரவை பிறப்பிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை எதிர்வரும் 2022 ஜனவரி 7 ஆம் திகதி வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தது.
இதனைவிட, இரு தரப்பும் இணைந்து ஒன்றிணைந்த நகர்த்தல் பத்திரம் ஊடாக, வழக்குத் தொடுநரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற சான்றாவணங்கள், மேலும் எதிர்பார்க்கப்படும் ஆவணங்கள் தொடர்பிலான பூரண விடயங்களை உள்ளடக்கிய விபர அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இரு தரப்புக்கும் அறிவித்துள்ளது.
விசாரணை துரிதப்படுத்தப்படும்
கடந்த 19ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைகளிடையே திறந்த மன்றில் கருத்து வெளியிட்ட நீதிபதி குமாரி அபேரத்ன, இந்த வழக்கை நான் இழுத்துச் செல்ல விரும்பவில்லை. இவ்வழக்கை எதிர்வரும் ஜனவரி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்து முடிக்கவே நான் எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்திருந்தார்.
புனையப்பட்ட வழக்கு
ஹிஜாஸ், மெளலவி சலீம் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டியமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் கீழான வழக்கானது முற்றிலும் புனையப்பட்ட ஒன்று என அவ்விருவர் சார்பிலும் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அதுவே தமது நிலைப்பாடு என சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள நீதிமன்றுக்கு தெரிவித்தார்.
அதனை மன்றுக்கு நிரூபிப்பதற்காக தாம் கோரும் ஆவணங்களையே வழக்குத் தொடுநர் தரப்பு வழங்க மறுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வழக்கின் சில சாட்சியாளர்களிடம் குறித்த திகதியில், சி.ஐ.டி.யில் வைத்து வாக்கு மூலம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்களிடம் சி.ஐ.டி.க்கு வெளியே தடுத்து வைத்து வாக்கு மூலங்கள் பெற்றுக்கொண்டமைக்கான தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும், தம் பக்க நியாயங்களை முன் வைக்கும் போது அவற்றை மன்றில் வெளிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவற்றை உறுதிப்படுத்த, சி.ஐ.டி.யின் பொறுப்பில் உள்ள சில ஆவணங்களையும், அறிவியல் சார் ஆவணங்களையும் தான் கோருவதாக சுட்டிக்காட்டிய அவர், கொட்டகெத்தன தொடர் பெண் கொலைகள், சிறுமி சேயா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் விடுதலையாகவும், உண்மைக் குற்றவாளி கைது செய்யப்படவும் அறிவியல் ரீதியிலான தடய ஆவணங்களே வழி கோலியதாக சுட்டிக்காட்டினார்.
எனினும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, சில ஆவணங்களை வழங்க முடியாது என்பதில் உறுதியாக இருந்ததுடன் அறிவியல் ரீதியிலான சான்றுகளாக கருதப்படும் தொலைபேசி அழைப்பு விபரங்கள் அடங்கிய அறிக்கையை தற்போது நீதிமன்ற தலையீட்டுடன் தொலைபேசி சேவை வழங்குநர்களிடம் இருந்து பெற்று விசாரணை நிலைமை ஒன்றின் போதான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்ப்பு வெளியிட்டார்.
இவ்வாறான நிலையிலேயே இது தொடர்பில் நீதிமன்றம் எதிர்வரும் 2022 ஜனவரி 7 ஆம் திகதி தனது தீர்மானத்தை அறிவிக்க உள்ளது.- Vidivelli