17 நாட்களாக வெள்ளநீருக்குள் தத்தளிக்கும் ஆலங்குடா!
490 குடும்பங்கள் நிர்க்கதி; தொடர்ந்தும் இடம்பெயர்ந்திருக்கும் நிலை
முஹம்மட் ரிபாக்
தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால், புத்தளத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீர் வழிந்தோடியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது. எனினும் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா கிராம சேவகர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் இன்றும் வெள்ளநீர் தேங்கிக் கிடப்பதை காண முடிகின்றது.
கடும் மழை காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு கடும் வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு பல பகுதிகளிலும் தேங்கிக் கிடந்த வெள்ளநீர் வழிந்தோடியுள்ள போதிலும் ஆலங்குடா கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆலங்குடா பி முகாம், அல் ஹிஜ்ரா, ஜின்னாபுரம், அல் அஸாம், அல் மனார், அல் ஜின்னா, மசூர் நகர், மரவன்சேனை கொலனி ஆகிய பிரதேசங்களில் இன்றும் வெள்ளநீர் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால், சுமார் 490 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்று வரை பொது மண்டபங்களிலும், தங்களது உறவினர்களின் வீடுகளி லும் தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியுள்ள மக்களுக்கு பொது அமைப்புக்களின் நிதிப் பங்களிப்பில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதுடன், பிரதேச செயலகத்தினால் நாளாந்த உணவு தேவைக்காக நிதிகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 8 ஆம் திகதி பெய்த கடும் மழையினால் புத்தளம் மாவட்டம் வெள்ளத்தினால் மூழ்கியிருந்தது. எனினும், ஓரிரு நாட்களின் பின்னர் இவ்வாறு வெள்ளத்தினால் மூழ்கிய பகுதிகளில் வெள்ளம் வழிந்தோடியதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கட்டம் கட்டமாக வழமைக்குத் திரும்பியது.
எனினும், வெள்ளம் ஏற்பட்டு இரண்டு வார காலம் நிறைவடைந்த நிலையிலும் ஆலங்குடா பகுதியில் இன்றுவரை இவ்வாறு வெள்ளநீர் தேங்கியிருப்பது பெரும் வேதனையளிப்பதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன், வெள்ளத்தினால் மூழ்கியுள்ள தமது வீடுகளை அப்படியே விட்டுவிட்டு, உறவினர்களின் வீடுகளில் தாங்கள் தங்கியுள்ள போதிலும் தமது வீடுகள், வாகனங்கள், உள்ளிட்ட சொத்துக்களுக்கு எவ்விதமான பாதுகாப்பும் இல்லை எனவும், சில வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
ஆலங்குடா கிராம சேவகர் பிரிவில் வெள்ளத்தால் மூழ்கிய பகுதிகளை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன கடந்த வாரம் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், புத்தளம் மாவட்ட செயலாளரையும், கற்பிட்டி பிரதேச செயலாளரையும் , புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளையும் அழைத்து வந்து ஆலங்குடா பகுதியில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
எனினும், தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு இன்றுவரை எவ்வித காத்திரமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆலங்குடா ஒற்றுமை கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் மீரா சாஹிப் ரனீஸ் கூறுகின்றார்.
“பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வருகை தரும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மக்கள் முன் வாக்குறுதிகளை வழங்கிவிட்டுச் சென்று விடுகின்றனர்., அதன் பின்னர் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் யாவும் கிடப்பிலேயே காணப்படுகின்றன” என்றார்.
இதேவேளை, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மேற்படி கிராமங்களில் வாழ்வதாகவும், ஒரு சில உள்ளூர் அரசியல்வாதிகள் தங்களது சுயநல அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் அழுத்தங்களை பிரயோகித்து, ஆலங்குடா பகுதியில் தேங்கி காணப்படும் வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அத்துடன், தேர்தல் காலங்களில் இந்த மக்களின் வாக்குகளைப் பெற்ற உள்ளூர் பிரதேச சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த பகுதிகளை திரும்பிக் கூட பார்க்காமை , பார்த்தும் அலட்சியப் போக்குடன் செயற்படுவதும் தமக்கு வேதனையளிப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
முறையான வடிகாலமைப்பு வசதிகள் இன்மையே இவ்வாறு வெள்ளநீர் தேங்கி நிற்பதற்கு காரணமாகும் எனத் தெரிவிக்கின்ற பாதிக்கப்பட்ட மக்கள், தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆலங்குடாவின் நில அமைப்புதான் இவ்வாறு வெள்ளநீர் தேங்கி நிற்பதற்கு காரணமே தவிர, அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமல்ல என ஆலங்குடா கிராம உத்தியோகத்தர் முஹம்மது சனீர் கூறுகின்றார்.
“மாவட்ட செயலாளர், கற்பிட்டி பிரதேச செயலாளர் மற்றும் புத்தளம் மாவட்ட செயலக தொழிநுட்ப பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆலங்குடா பகுதிக்கு கள விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து, தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இரண்டு பக்கமும் மேட்டு நிலம் கணப்படுவதுடன், ஆலங்குடா கிராமம் நடுவில் உள்ளது. எனவேதான் வெள்ளநீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.
எவ்வாறாயினும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களின் ஆலோசனையின் படி ஆலங்குடாவில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்ற தென்மேற்குப் பகுதியான இளந்தையடி பகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் பாரிய வடிகான்கள் தோண்டப்பட்டு, நீரை கடலுக்குள் அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார் கிராம உத்தியோகத்தார்.
எனினும் எதிர்பார்த்த அளவு நீரின் ஓட்ட வேகம் இல்லாததன் காரணமாக ஆலங்குடா பகுதியில் இன்னமும் 4 அடிக்கு மேல் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தேங்கி நிற்கும் வெள்ளநீரை 10 இஞ்சி அளவுகொண்ட மோட்டர் மூலம் வெளியேற்ற மற்றுமொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனினும், குறித்த மோட்டாருக்கு தேவையான பட்டை கள் கிடைக்காமையினால் அந்த முயற்சிகளும் கிடப்பில்தான் இருக்கிறது.
அந்த மோட்டாருக்கு தேவையான பட்டைகள் புத்தளத்தில் கொள்வனவு செய்ய முடியாது. மட்டுமன்றி, அதற்கான செலவுகளும் அதிகமாகும். எனவே இதுதொடர்பாகவும் உயர்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகிறது.
இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்குவதில் சிரமம் காணப்படுவதல் உணவுக்கு பதிலாக பணம் வழங்கப்படுகிறது. குடும்பத்தில் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 250 ரூபா வீதம் வழங்கப்படுகிறது.
தொடர்ச்சியாக 17 நாட்களுக்கும் மேலாக வெள்ள நீர் ஊருக்குள் இருப்பதானது பல்வேறுவகையான பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம். மக்கள் வசிக்கும் இருப்பிடங்கள் நீரில் ஊறி உடைய வாய்ப்பிருக்கிறது. அத்தோடு, தொற்று நோய்கள் பரவும் அபாயமும் காணப்படுகின்றது.
வெள்ள அனர்த்தம் காரணமாக இரண்டரை வாரங்கள் இன்னுமோர் இடத்தில் இடம்பெயர்ந்து வாழ்வதால் பெரும் கஷ்டங்கள் மக்களுக்கு ஏற்படுகின்றன. அத்தோடு, சமூகப் பிரச்சினைகளும் உருவாகின்றன. இவ்விடயம் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தி தீர்வை பெற்றுக்கொடுப்பது புத்தளம் மாவட்ட செயலகம், கற்பிட்டி பிரதேச செயலாகம், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் என்பவற்றின் கடமையல்லவா. அத்தோடு, இது விடயமாக அழுத்தம் கொடுத்து மக்கள் பிரச்சினையை தீர்த்துவைக்கும் பொறுப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும்.-Vidivelli