(ஏ.ஆர்.ஏ.பரீல்)
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின்கீழ் ஜனாதிபதியினால் மூவர் கொண்ட ஆலோசனைச் சபையொன்று நிறுவப்பட்டுள்ளது.
எவரேனும் நபரொருவர் 1979 ஆம்ஆண்டின் 48 ஆம்இலக்க பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பின் அவரது பிரதிநிதி நிறுவப்பட்டுள்ள குறிப்பிட்ட ஆலோசனை சபைக்கு எழுத்து மூலமாக அல்லது வாய்மொழி சமர்ப்பணம் மூலமாக கருத்து தெரிவிக்கலாம் என ஆலோசனைச் சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது 1979 ஆம் நூற்றாண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நபர்சார்பிலும் பிரதிநிதி ஒருவர் தனது கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறு கருத்துகள் தெரிவிக்கப்படுவது தொடர்பில் ஆலோசனை சபையின் பதிவில் நடவடிக்கைகள் அச்சபையின் செயலாளரால் உரியவருக்கு அறிவிக்கப்படும் எனவும் ஆலோசனை சபை வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபையின் பதில் நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்கு இதற்காக விண்ணப்பிப்பவர்கள் முகவரி மற்றும் வேறு அனுப்பக்கூடியமுறைகள் என்பவற்றை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் வேண்டப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் இவ்விபரங்கள் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
இந்த ஆலோசனைச் சபையின் தலைவராக ஓய்வு நிலை பிரதம நீதியரசர் ஜே.என்.டி.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுகத கம்லத் மற்றும் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன் துடுவ என்போர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் 4 ஆம் இலக்க கட்டிடத்தில் 2 ஆம் மாடியில் 201 ஆம் இலக்க அறையில் ஆலோசனை சபையின் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களது பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை கீழ் குறிப்பிட்ட விலாசத்துக்கு எழுத்து மூலம் அல்லது வாய்மொழி மூலம் சமர்ப்பணம் செய்யலாம்.
செயலாளர்
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டுள்ள ஆலோசனை சபை,
கட்டிட இலக்கம்: 04.
அறை இலக்கம்:201
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம்
கொழும்பு 07
தொலைபேசி : 011 2691671
தொலைநகல்: 011 2691671
மின்னஞ்சல் : advisiryboardpta@gmail.com
-Vidivelli