கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் ஆழ்ந்த அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த அனர்த்தம் தொடர்பில் இன, மத பேதமின்றி தமது அனுதாபங்களை வெளிப்படுத்தி வருகின்ற அதே நேரம் நாட்டில் இவ்வாறு அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் தமது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விபத்து இறைவனின் நாட்டம் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்ற அதேநேரம், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பின்பற்றியிருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இப் படகுப் பாதையானது தனியார் ஒருவரால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை கிண்ணியா நகர சபை தவிசாளர் வழங்கியுள்ளார். தவிசாளர் இந்த அனுமதியை தன்னிச்சையாகவே வழங்கியுள்ளதாகவும் இது குறித்து சபையில் கலந்துரையாடப்படவில்லை என்றும் சக நகர சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனினும் இந்த பாதுகாப்பற்ற படகுப் பாதை காரணமாக உயிராபத்துக்கள் ஏற்படலாம் என சம்பவத்திற்கு இரு வாரங்களுக்கு முன்னர் உள்ளூர் ஊடகம் ஒன்று ஆதாரபூர்வமாக வீடியோ தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளது. எனினும் எவரும் இதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இந் நிலையில் இது தொடர்பில் எந்தவித கரிசனையுமற்று செயற்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருமே இதற்குப் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளனர்.
குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணப் பணிகளில் தாமதம் ஏற்படுவது ஒருபுறமிக்க, தற்காலிகமாக முன்னெடுக்கப்பட்ட இந்த படகுப் பாதை சேவையை ஏன் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கடற்படையின் உதவியுடன் பாதுகாப்பான முறையில் முன்னெடுக்க முடியாமல் போனது என்ற கேள்விக்கு விடை காணப்பட வேண்டும். தற்போது இந்த படகுப் பாதைச் சேவையை இயக்கிய மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது கைதினால் மாத்திரம் இந்த விவகாரத்திற்கு தீர்வு கிடைத்துவிடப் போவதில்லை. மாறாக பொறுப்புக் கூற வேண்டிய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
கிண்ணியாவில் மாத்திரமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு பொது மக்கள் தினமும் தமது உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர். வெறும் கயிற்றில் நீர் நிலைகளைக் கடந்து செல்கின்ற அவல நிலைகளும் பின்தங்கிய கிராமப் புறங்களில் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. பல பாலங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன. எனினும் வருடாந்த நிதி ஒதுக்கீடுகளில் இவற்றுக்கு முன்னுரிமையளிக்கப்படுவதில்லை. இச் சம்பவம் நடந்து மறுநாள், அதாவது நேற்று மாலை கொழும்பில் புதிய களனிப் பாலம் வெகு விமர்சையாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தியும் தலைநகருக்கு அவசியமானதே என்கின்ற போதிலும், இவ்வாறான பின்தங்கிய கிராமங்களில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் அத்தியாவசிய அபிவிருத்திசார் குறைபாடுகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதையே கிண்ணியா சம்பவம் உணர்த்தி நிற்கிறது.
ஊழலும் மோசடியும் மலிந்துள்ள அரசியல் மற்றும் அரசாங்க சேவை இவ்வாறே தொடருமாயின் இதுமாத்திரமல்ல, இன்னும் பல ஆயிரக் கணக்கான உயிர்களை நாம் பலிகொடுக்க வேண்டி வரும். எவ்வாறு அரசாங்க உயர் மட்டத்தினர் மற்றும் பாதுகாப்புத்தரப்பினரின் அலட்சியம் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்க இடமளிக்கப்பட்டதோ அதேபோன்றதொரு அலட்சியம் காரணமாகவே கிண்ணியாவிலும் ஒரு விபத்து நடந்தேறியிருக்கிறது. இவ்வாறான அலட்சியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்காதவரை இவ்வாறான அவலங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.- Vidivelli