முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்று சரியாக 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால் இந்த 2 வருடப் பூர்த்தியை கொண்டாடுகின்ற நிலையில் அவருக்கு வாக்களித்த மக்கள் இல்லை என்பதுதான் துரதிஷ்டமானது. 69 இலட்சம் மக்களின் வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, தனக்கு வாக்களித்த மக்களது குறைந்தபட்ச அபிலாஷைகளைக் கூட நிறைவேற்றத் தவறிவிட்டார் என்பதைவிட, ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் அதிருப்தியைச் சம்பாதித்துவிட்டார் என்பதே நிதர்சனமாகும்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி முன்னொரு போதும் எதிர்கொண்டிராத ஒன்றாகும். இன்று வீதிக்கு இறங்கினால் மக்கள் தமது அன்றாடத் தேவைகளுக்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலை வந்துள்ளது. எரிபொருளுக்காகவும் எரிவாயுவுக்காகவும் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் வரை பால்மாவுக்காக வரிசையில் நின்றார்கள். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்காக மக்கள் கால்கடுக்கக் காத்து நிற்கிறார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையிலேயே வளமான எதிர்காலத்துடன் வாழலாம் என கனவு கண்ட இளைஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறுவதையே முதன்மைத் தெரிவாகக் கொண்டுள்ளார்கள்.
அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லை. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. கடன் சுமையில் நாடு சிக்கித் தவிக்கிறது. முன்வைக்கப்பட்ட பட்ஜெட்டில் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் இல்லை. சகல பொருட்களுக்கும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு வருமானம் கிடைப்பதற்கான வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகிறார்கள். மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்கள் நிறைவில் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் கொண்டு வந்துள்ள மாற்றங்களே இவை.
“பொது ஜன பெரமுனவின் வெற்றியையடுத்து நாடெங்கும் சுவர்களின் சித்திரம் வரைந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இளைஞர்கள், இன்று நாட்டைவிட்டு வெளியேறுவது கவலைக்குரியது. அவர்களது மனக்குறைகள் தீர்க்கப்பட வேண்டும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் இடம்பெற்ற கட்சியின் 5ஆவது வருட பூர்த்தி நிகழ்வில் சுட்டிக்காட்டியிருந்தார். இதுவே யதார்த்தமாகும். ஆனால் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு செயற்படுவதாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் காண முடியவில்லை.
நாடு எதிர்நோக்கும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது குறித்துச் சிந்திப்பதற்குப் பதிலாக அரசாங்கம் இனவாதத்தை ஊட்டி வளர்ப்பதிலும் பொலிஸ் மற்றும் இராணுவ பலம் கொண்டு ஜனநாயக குரல்களை நசுக்குவதிலுமே குறியாக இருக்கிறது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் எதிர்நோக்கும் சமகால நெருக்கடிகளை முன்வைத்து கொழும்பில் ஏற்பாடு செய்த பாரிய ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. எனினும் இதில் பங்கேற்பதற்காக கொழும்புக்கு வெளியிலிருந்து வருகை தந்தவர்களை பொலிஸ் பலம் கொண்டு தடுத்து நிறுத்தியமை ஜனநாயக விரோத செயற்பாடாகும். ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்காக பொலிசார் நீதிமன்ற அனுமதியை கோரிய போதிலும், சுமார் 60க்கு மேற்பட்ட நீதிமன்றங்கள் அக் கோரிக்கையை நிராகரித்தமை சற்று ஆறுதல் தரும் நிகழ்வாகும். கொவிட் பரவல் காலத்தில் இவ்வாறானதொரு பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுவது குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், மக்களின் ஜனநாயக உரிமையை அதிகார பலம் கொண்டு அடக்க முனைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இன்னும் சில வாரங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்களை ஆட்கொண்டுள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு கைகொடுப்பதற்கு எந்தவொரு நாடும் தயாரில்லை என்பதே யதார்த்தமாகும். கடந்த காலங்களில் கைகொடுத்த அரபு நாடுகளும் இப்போது இலங்கைக்கு உதவுவதில் பின்னிற்கின்றன. இதற்கு கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் இந்த அரசாங்கம் நடந்து கொண்ட விதமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. “முஸ்லிம்களின் பெற்றோல் எங்களுக்குத் தேவையில்லை, சூரிய சக்தியில் வாகனங்களைச் செலுத்துவோம்” எனக் கூறி இனவாதத்தைக் கிளறிய தேரர்களை இன்று அரங்கில் காண முடியவில்லை.
இனவாதம் ஒருபோதும் கைகொடுக்காது என்பதனை இலங்கை மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியிலிருந்து நாம் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டு மீண்டெழ வேண்டும். அதுவே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli