இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக திகழும் கல் – எளிய

0 923

ரிஹ்மி ஹக்கீம்

“2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நேரம் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை மற்றும் நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் வன்முறைகள் நடாத்தப்பட்டன. அப்போது, தமது ஊர் மீதும் தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற அச்சத்தில் கல் – எளிய பிரதேச முஸ்லிம் வாலிபர்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புக்காக விழித்திருந்த நேரம், அவர்களுக்கு துணையாக எமது பிரதேசத்தை சேர்ந்த சிங்கள இளைஞர்களும் விழித்திருந்து ஒத்துழைப்பு வழங்கினார்கள்” என்று கல் – எளிய, ஹங்சகிரிய பிரதேசத்தை சேர்ந்த ரியாஸ் தெரிவித்தார்.

கல் – எளிய என்பது கம்பஹா மாவட்டத்தின் மீரிகமை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமம், கொழும்பு – கண்டி வீதியிலுள்ள பஸ்யாலை நகரிலிருந்து கிரிஉல்ல வீதி ஊடாக நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. முஸ்லிம்களை பெரும்பான்மையாக் கொண்ட இக்கிராமம் கல் – எளிய / பல்லேவெல, வெல்லவிலமுல்ல, ஹங்சகரிய, வேபடமுல்ல, மல்லஹவ உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்குவதோடு இக்கிராம சேவகர் பிரிவுகள் அனைத்திலும் சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றமை முக்கிய அம்சமாகும்.

2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மீரிகமை பிரதேச செயலாளர் பிரிவின்  மக்கள் தொகை 164,580. அதில் பௌத்தர்கள் 153 905, இந்துக்கள் 651, இஸ்லாமியர்கள் 7676, கத்தோலிக்கர்கள் 1794, ஏனைய கிறிஸ்தவர்கள் 534 மற்றும் ஏனையோர் 20 என்று தொகை மதிப்பு, புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் கல் – எளிய பிரதேசத்தின் சனத்தொகை சுமார் 10,000 ஆகும். அதில் சிங்களவர்களும் இஸ்லாமியர்களும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இஸ்லாமியர்களின் சனத்தொகை பௌத்தர்களின் சனத்தொகையை விட சிறிய அளவில் அதிகமாக இருப்பதாக பிரதேச அரசியல் செயற்பாட்டாளர் ரியாஸி சலாம் தெரிவித்தார்.

பிரதேசத்திலுள்ள கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி நாடளாவிய ரீதியில் பிரபல்யமான மகளிர் அரபுக் கல்லூரியாகும். குறித்த அரபுக்கல்லூரியானது இலங்கையின் முதலாவது மகளிர் அரபுக்கல்லூரி (1959) என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அலிகார் மகா வித்தியாலயமும் இங்கு அமைந்துள்ளது. அண்மையில் இப்பாடசாலை தேசிய பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் கல் எளிய கனிஷ்ட வித்தியாலயம் என்ற சிங்கள பாடசாலையும் இங்கு அமைந்துள்ளது.

படம் – மகளிர் அரபுக்கல்லூரியை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் (1958). இடமிருந்து வலமாக இரண்டாவதாக இருப்பவர் அல்ஹாஜ் H.L.M..அப்துல் காதர்
(Source – https://mlacsrilanka.org/)

(Source – https://mlacsrilanka.org/)

இங்குள்ள முஸ்லிம்களின் பெரிய பள்ளிவாசலாக அல் மஸ்ஜிதுஸ் ஸுப்ஹானி ஜும்ஆ பள்ளிவாசல் காணப்படுவதுடன் ஏனைய பள்ளிவாசல்களான கல் – எளிய நகர, சலீம்புர, மல்லஹவ, தம்பில்லாவ, ஹங்சகிரிய பிரதேச பள்ளிவாசல்கள் பெரிய பள்ளிவாசல் மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வேபடமுல்ல ஸ்ரீ சுதர்மாராம விகாரை இங்கு வாழும் பௌத்தர்களின் பிரதான வணக்கஸ்தலமாக காணப்படுகின்றது.

மேலும் இங்கு மற்றுமொரு பிரசித்தி பெற்ற இடமாக ஹங்சகிரிய சதர மகா தேவாலயத்தை குறிப்பிடலாம். அமானுஷ்ய சக்திகளை அடக்கும் நிலையமாக செயற்படும் இடமாக அது இருக்கிறது. எனினும் அங்கு நான்கு சமயங்களையும் பின்பற்றுபவர்களுக்குரிய அடையாள சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அங்கு கடந்த காலங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வந்த்தாகவும் வெசாக் தினங்களில் இன, மத பேதமின்றி தன்சல் வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் அதன் மூலம் நடைபெற்று வந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ்.கிங்ஸ்லி

அதனை நிர்வகித்து வரும் எஸ்.கிங்ஸ்லியை நாம் சந்தித்தோம்.

“நாம் அமானுஷ்ய சக்திகளை அடக்கும் வேலைகளை செய்து வந்தாலும் இன, மத பேதமின்றி சமூக பணிகளையும் செய்து வருகின்றோம். கற்றல் உபகரங்களை வழங்குதல், வீடு கட்ட உதவுதல் போன்ற சேவைகளையும் செய்திருக்கிறோம்” என்றார்.

இக்கிராமத்தின் ஆரம்ப வரலாறு மற்றும் அண்மைக்காலம் வரையில் இக்கிராமத்தில் நிலவும் பன்முகத்தன்மை தொடர்பில் கல் எளிய பிரதேசத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் எம்.வை.எம்.நஸீரிடம் வினவிய போது,

 

“சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் இக்கிராமம் ‘வெல்லவிலமுல்ல’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளது. 1650களில் இங்கு ஒல்லாந்தரால் இங்கு கறுவா செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக காடு துப்பரவாக்கப்பட்டிருப்பதனை கண்ட 2ம் இராஜசிங்க மன்னன் காடு அழிக்கப்பட்டுவிட்டது என்ற பொருளுடைய ‘கல எளிவெலா’ என்று அழைத்ததனால் அது பிற்காலத்தில் மருவி ‘கல் எளிய’ என்ற பெயர் உருவானதாக ஒரு தகவல் இருக்கிறது.

அதே போன்று 1325 ஆம் ஆண்டு இங்கு மறைந்திருந்த குருநாகல் இராஜதானி மன்னன் 5 ஆம் விஜயபாகு கண்டுபிடிக்கப்பட்ட போது, செய்தது வெளியானது என்ற பொருளுடைய ‘கலே எலிவெலா’ என்பது பிற்காலத்தில் மருவி ‘கல் எளிய’ என்ற பெயர் உருவானதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

இங்கு 1700 இற்கு அண்மித்த காலப்பகுதியில் முஸ்லிம் குடியேற்றங்கள் உருவாகியுள்ளன. சேகு கான், அவரது மனைவி ஒசனாச்சி, மீரா சேகு லெவ்வை ஆகியோர் ஆரம்பத்தில் குடியேறியுள்ளனர்.

1915 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் கலவரம் ஒன்று ஏற்பட்ட போது கூட இப்பிரதேசத்தில் வசிக்கும் எந்த தரப்பினருக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் அப்போதும் இங்குள்ள சிங்கள – முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும் நல்லுறவுடனுமே வாழ்ந்து வந்துள்ளனர்.

எச்.எல்.எம்.அப்துல் காதர்

1957 ஆம் ஆண்டு இங்குள்ள துமுன்னகெதர விகாரைக்கு “பண மடுவ” எனப்படும் போதனைகள் நிகழ்த்துவதற்கான இடம் ஒன்று இல்லாமல் இருந்தது. அதற்காக குறித்த விகாரை சார்பில் பலரிடம்  காணி கோரிய போதிலும் அது கிடைக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் அல்ஹாஜ் எச்.எல்.எம்.ஏ.காதரிடம் கூறப்பட்ட போது அவர் உடனடியாக சட்டத்தரணியுடன் விகாரைக்கு சென்று அதன் பிக்குவுடன் கதைத்ததுடன், தன்னுடைய காணியை நொத்தாரிசிடம் கூறி எழுதி குறித்த விகாரைக்கு வழங்கியமை பிரதேசத்தில் இடம்பெற்ற இன நல்லுறவிற்கான மிக முக்கிய எடுத்துக்காட்டாகும். அதற்கான பதிவுக்கட்டணத்தையும் அவர்களே வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து அல்ஹாஜ் எச்.எல்.எம்.ஏ.காதர் மக்காவிற்கு சென்று ஊர் திரும்பும் போது குறித்த விகாரையின் பிரதம பிக்கு தோரணம் கட்டி அவர்களை வரவேற்றுள்ளார்.

1955 ஆம் ஆண்டுக்கு கிட்டிய பகுதியில் ஆசிரியர் ஐ.எம்.முஹ்ஸின் மரிக்கார், விவாக பதிவாளர் எம்.எம்.புகாரி, வர்த்தகர் ஏ.எல்.எம்.ரஸீம் மற்றும் ஜேமிஸ் மஹத்தயா, முதுகல மஹத்தயா, சைமன் மஹத்தயா, மகிலிஸ் அப்புஹாமி, கனிஹி ஆரச்சி வெதமஹத்தயா ஆகியோர் சேர்ந்து கிராம முன்னேற்ற சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து 1958 ஆம் ஆண்டு பொது கிணறு ஒன்றை கட்டியுள்ளனர். அத்துடன் இவர்கள் அந்நேரம் கூட்டுறவு கடை ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர்.

1965 ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பௌத்த – முஸ்லிம் சமுதிய என்ற சங்கம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வெசாக் தோரணங்களை அமைத்தல், தன்சல் வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு பிந்திய காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இனங்களுக்கிடையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்ட போதும் இங்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை.

மேலும் தற்போது வேபடமுல்ல ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் விகாராதிபதி சோரத்த நாயக்க தேரர் முஸ்லிம் மக்களுடன் தொடர்ச்சியாக நல்லிணக்கத்தை பேணி வருகிறார். விகாரை மற்றும் பள்ளிவாசலில் இரத்த தான நிகழ்வுகள் இடம்பெறும் போது இன, மத வேறுபாடுகள் இன்றி பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற பெரிய பள்ளிவாசலின் புதிய கட்டிட திறப்பு விழாவிலும் அவர் நல்லிணக்கத்தினை வலியுறுத்தி உரை நிகழ்த்தினார் என்றும் அவர் தெரிவித்தார்.

2019 இல் வேபடமுல்ல விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வில் முஸ்லிம் இளைஞர்கள் பங்குபற்றிய போது எடுக்கப்பட்ட படம்

மூத்த ஊடகவியலாளர் எம்.வை.எம்.நஸீர் தெரிவித்த கருத்துக்கள் கல் – எளிய பிரதேசத்தில் ஆரம்ப காலம் முதல் நிலவி வரும் இன நல்லுறவை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

அல்ஹாஜ் அப்துல் காதரினால் துமுன்னேகெதர விகாரைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் காணி தொடர்பில் நாம் மேலும் சிலரை வினவிய போது, அதுவொரு வாய் மொழி மூலம் வந்த தகவலாக இருப்பதாக கூறினர்.

இரு சமூகத்தவர்களினதும் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட கிராம முன்னேற்ற சங்கத்தினால் 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்பட்ட பொது கிணறானது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக அமைந்திருந்ததாகவும், பின்னர் அடிக்கடி மழை காலங்களில் சேற்று நீர், கிணற்று நீருடன் கலக்கும் சூழ்நிலை உருவானதனால் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் அக்கிணறு பின்பு மூடப்பட்டதாகவும் ஹங்சகிரிய பிரதேசத்தை சேர்ந்த எம்.எஸ்.எம்.அத்தாஸ் தெரிவித்தார்.

எம்.எச்.எம்.புஹாரி

கல் – எளிய, மல்லஹவ பிரதேசத்தை சேர்ந்தவரும் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் செயற்றிட்ட அதிகாரியுமான எம்.எச்.எம்.புஹாரி தெரிவிக்கையில்,

“மல்லஹவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்று காதர் லேன் என்ற பெயரில் இருந்தது. அக்காலத்தில் அல்ஹாஜ் அப்துல் காதரிடம் வேலை செய்த வண்டிக்காரர் ஒருவர் தன்னுடைய வண்டியை கொண்டு செல்ல வீதி இல்லை என்று கூறி உதவி கேட்ட நேரம், உங்களுக்கு எவ்வளவு அளவு தேவை என்று அளந்து கூறுமாறு ஒரு கம்பினை வழங்கினார். அப்போது அந்த வண்டிக்காரர் கேட்ட அளவை விட இருமடங்கு இடத்தை வீதிக்காக வழங்கினார். அது காலப்போக்கில் படிப்படியாக பெரிதாக்கப்பட்டு தற்போது பெரிய வாகனங்கள் போகக்கூடிய அளவு பெரிதாக காணப்படுகிறது. அந்த வீதியில் 100 வீதமான சிங்கள மக்கள் வசிக்கின்ற போதும் அந்த வீதி காதர் லேன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்ததுடன் நீண்ட காலமாக காதர் லேன் என்ற பெயர் பதாகையும் அங்கு காணப்பட்டது.

சிங்கள – முஸ்லிம் எகமுது (ஒற்றுமை) தன்சல இதுவரை காலமும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பெரிய பள்ளிவாசலால் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி சிங்களவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. நோன்பு காலத்தில் சிங்களவர்களும் பெரிய பள்ளிவாசலுக்கு வந்து கஞ்சி பெற்று செல்கின்றனர். வேபடமுல்ல விகாரையின் விகாராதிபதியும் நோன்பு காலங்களில் முஸ்லிம்களுக்கு கஞ்சி வழங்கினார்.

2019 ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் எமது பள்ளிவாசலில் ஜும்ஆ பிரசங்கம் நடைபெறும் போது அருகிலுள்ள விகாரைகளிலுள்ள பிக்குகள் பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டார்கள். ஜும்ஆ நிறைவடைந்ததன் பின்னர் அருகிலுள்ள போலான பிரதேச விகாரையின் தேரரும் உரையாற்றினார். அவர் உரையாற்றும் போது, அக்காலத்தில் விகாரையில் எந்தவொரு கட்டுமான வேலைகளுக்கும் கல் – எளியவிலுள்ள முஸ்லிம்களே வருவதாகவும், நல்ல திறமையுள்ள தொழிலாளர்கள் இருந்ததாகவும் கூறிய அவர் இன்று எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறி கவலைப்பட்டார்” என்றார்.

கல் – எளிய, அப்துல் காதர் மாவத்தையை சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான எம்.ஜி.எம்.அமீர் தெரிவிக்கையில்,

எம்.ஜி.எம்.அமீர்

“நான் மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் ஊடாக இன, மத பேதங்களின்றி மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட உதவிகள், தொழிற்பயிற்சி, பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், இன ஒற்றுமைக்கான நிகழ்ச்சிகள், சமூக சேவைகள் என பல்வேறு பணிகளை இப்பிரதேசத்தில் ஆற்றியிருக்கிறேன்.

2000 இன் ஆரம்பத்தில் கல் – எளிய பிரதேசத்திற்கு நீண்ட கால தேவையாக இருந்த தொலைபேசிய இணைப்பை பெற்றுக்கொள்வதற்காக உடவெல விகாரையின் பிக்குவுடன் நானும் சமாதான நீதவான் ஏ.ஏ.ஹம்சாவும் கலந்துரையாடி விகாரையின் காணியில் தொலைபேசி Exchange இனை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தோம்” என்றார்.

பிரதேசத்தில் நீண்ட காலமாக விவசாயம் செய்து வரும் பாலித்த என்பவர் முஸ்லிம் மக்களுடன் சிறுவயது முதல் இன்று வரை நல்லுறவை பேணி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். அது பற்றி அறிந்து கொள்வதற்காக நாம் அவரிடம் சென்ற போது,

“நான் சிறுவயது முதல் இன்று வரை முஸ்லிம் மக்களுடன் எவ்வித பேதங்களும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறேன். நான், சல்மன் ஐயா மற்றும் சுனில் ஆகியோரும் அன்று முதல் முஸ்லிம்களுடன் நெருங்கிய உறவை பேணி வருகிறோம். சிறு வயதில் அதிகமாக அவர்களுடன் தான்  விளையாடுவதுடன், அவர்களது வீட்டில் சாப்பிட்டு இருக்கிறோம். எமது உறவு இவ்வாறு இருக்கிறது (என்று கூறி இரு விரல்களை இணைத்து காட்டினார்). எனக்கு தமிழும் பேச முடிகிறது. அந்தளவு நல்லுறவு எம்மிடம் இருந்து வருகிறது. இப்போதும் பெருநாள் உள்ளிட்ட நாட்களில் உணவுகளை பரிமாறிக்கொள்வோம். எனக்கு சிங்கள நண்பர்கள் இருந்தாலும் அவர்களை விட முஸ்லிம் நண்பர்களுடனே அதிகமாக நட்பை பேணி வருகிறேன். அது இறுதி வரை தொடரும்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

கல் – எளிய நகரத்தில் வசித்து வருபவரும் கல் – எளிய முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பணிபுரிபவருமான ஷீலா லால் என்பவர் தெரிவிக்கையில்,

“நாம் இங்குள்ள முஸ்லிம்களுடன் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். நான் பணி புரிவதும் முஸ்லிம்களுடன் என்பதால் அதிக முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களின் வீடுகளுக்கும் அவர்கள் எமது வீடுகளுக்கும் சென்று வருகிறார்கள். (உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக) அப்போது இன பேதம் ஒன்று ஏற்பட்டிருந்தாலும் தற்போது எவ்வித பயங்களும் இன்றி அவர்களது வியாபார நிலையங்களுக்கும் செல்கிறோம்” என்றார்.

2019.04.21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் மீதான வெறுப்புணர்வு நாடு தழுவிய ரீதியில் அதிகரித்திருந்தது. எனினும், தாக்குதல் இடம்பெற்று சுமார் இரண்டு மாதங்களில் 2019.06.30 அன்று, மீரிகமை, மஹகம, ஹல்பே ஶ்ரீ சுதர்மாராமய விகாரையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கம்பஹா கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் கல் – எளிய நலன்புரி சங்கம் சார்பாக பெரிய பள்ளிவாசல் கதீப் மற்றும் பிரதேச முஸ்லிம் வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வு “விமர்சனங்களைப் புறந்தள்ளி நம்பிக்கையை முன்நகர்த்தி நாட்டை முன் நகர்த்துவோம்” என்ற தொனிப்பொருளில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தவிர கல் – எளிய நலன்புரி சங்கத்தினால் பிரதேச மட்டத்தில் இன, மத பேதமின்றி பல்வேறு சமூக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு இன, சமய குழுக்கள் வாழும் இலங்கை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரு அல்லது பல குழுக்கள் இணைந்து வாழ்கின்றனர். அவர்கள் தமக்கிடையில் வேறுபாடுகளை மறந்து இவ்வாறு தொடர்ச்சியாக நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டு வந்தால் அது எம்முடைய நாட்டின் எதிர்காலம் சுபீட்சமாக அமைவதற்கு வழிவகுக்கும் என்பது திண்ணமே.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.