வட மாகாணத்தின் பூர்வீக முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் நிராயுதபாணிகளாக பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வரலாற்றுத் துயரம் இடம்பெற்று தற்போது 31 வருடங்கள் கடந்துள்ளதை நினைவுகூரும் வகையில் முசலி வாசகர் வட்டம் அண்மையில் இணையவழி கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் உள்ள பூர்வீக முஸ்லிம்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகின்ற சமூக ஆர்வலர்கள் மிக முக்கியமான கருத்துக்களை முன்வைத்தார்கள். அதன் தொகுப்பு.
எம்.ஏ.எம். அஹ்ஸன்
வடக்கின் பூர்வீக முஸ்லிம்களின் இன்றைய நிலை
1990 ஆம் ஆண்டில் வடக்கிலுள்ள முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில் இலங்கையின் புத்தளம், வன்னி உட்பட பல்வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்து வசித்து வருகிறார்கள். தற்போது கட்டங் கட்டமாக தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறி வருகின்றார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியிருக்கின்ற முஸ்லிம்களுக்கு தமது முன்னாள் அண்டை வீட்டார்களான தமிழ் மக்களுடன் நல்லிணக்க உறவினை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது.
முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது தமிழர்களும் அவர்களுக்கு உதவி செய்ய முடியாத நிலைமையில் இருந்தார்கள் என்பதை இலங்கை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று மடு பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் சபா தனுஜன் தெரிவிக்கிறார். யாழ் மக்கள் ஒன்றியத்துடன் இணைந்து வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்ற முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நாளில் தமிழ் மக்கள் அனைவரும் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைத்து வருந்துவதாக சபா தனுஜன் தெரிவித்தார்.
1995 ஆம் ஆண்டில் இராணுவ அச்சுறுத்தலுக்குப் பயந்து அசையும் சொத்துக்களுடன் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தமது இருப்பிடத்தை விட்டு விலகிச் சென்றதை சபா தனுஜன் நினைவூட்டுகிறார். அதே நிலைமையே 1990 ஆம் ஆண்டில் வடக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது என்றபோதிலும் முஸ்லிம்கள் எந்தவித சொத்துக்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். வறுமையில் அனுதினமும் சிரமப்பட்டு கடுமையாக உழைத்து வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியிலேயே மீண்டும் முஸ்லிம்கள் குடியேறுகின்றார்கள். இந் நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழ் தேசியவாதம் தடையாக இருப்பதாக தெரிவிக்கும் சபா தனுஜன் முடிந்தவரை அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு
வடக்கிலுள்ள முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு என எழுத்தாளர் சிராஜ் மஷ்ஹுர் வரைவிலக்கணம் செய்கின்றார். அகதிகளாக்கப்பட்டவர்கள் என்றோ உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்தவர்கள் என்றோ அவர்களை அடையாளப்படுத்த முடியாது. முஸ்லிம்கள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு திட்டமிட்ட அடிப்படையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள் என்பதன் அடிப்படையில் குறித்த வரலாற்றுத் துயரத்தினை இனச்சுத்திகரிப்பு என்றே அடையாளப்படுத்த வேண்டியுள்ளது என சிராஜ் மஷ்ஹுர் தெரிவிக்கிறார்.
அவரது கருத்தின்படி இலங்கையில் முஸ்லிம்கள் வாழும் சூழலை செறிந்து வாழும் சூழல், தீர்மானிக்கும் அதிகாரத்திலுள்ள சூழல், குறைவான சனத்தொகை கொண்ட மற்றும் ஆகக்குறைந்த சனத்தொகை கொண்ட சூழல் என்று நான்கு வகையாக பிரிக்க முடியும். அதில் வடக்கில் மீள்குடியேறியிருக்கின்ற முஸ்லிம்கள் நான்காவது வகையாகும்.
முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்திற்கு தமிழர்களாக உள்ள பொதுமக்கள் காரணம் என்று நினைப்பது முட்டாள்தனமாகும். குறித்த காலப்பகுதியில் உத்தியோகபூர்வமாகவோ அல்லது முறையற்ற விதத்திலோ அதிகாரத்தில் இருந்தவர்கள்தான் இந்த வரலாற்றுத் துயரத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஆவர். இந்த சம்பவத்தை கிழக்கில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் முறையற்ற செயல் என்றோ அல்லது ஏனைய காரணங்களை முன்வைத்தோ நியாயப்படுத்த முடியாது என்று சிராஜ் மஷ்ஹுர் கருதுகின்றார். 1983 தமிழ் மக்களுக்கு ஒரு கறுப்பு ஆண்டு என்பதைப்போல 1990 முஸ்லிம்களுக்கு ஒரு கறுப்பு ஆண்டாகும். 30 வருட கால யுத்தத்தில் தமிழ் மக்கள் மாத்திரமல்லாது முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். இங்கே இருப்பது கூட்டுமனக்காயங்கள் என்பதை உணர்ந்து சமூக உணர்வை குழப்பாமல் இருக்க வேண்டும் என்பது சிராஜ் மஷ்ஹுரின் வேண்டுகோளாகும்.
புதிய தலைமுறை அறியாத பல துயரங்களை கடந்தே வடக்கின் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். பணம், நகை என சகல சொத்துக்களையும் சூறையாடி வெறுங்கையோடு அனுப்பப்பட்டார்கள். நடைப்பயணமாக வரும்போது வன விலங்குகளின் தாக்குதலுக்கு எத்தனையோ பேர் ஆளானார்கள். அரசாங்கம் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்ற சின்னஞ்சிறிய உலர் உணவுப்பொதியில் தங்கி வாழும் நிலைமைதான் அனைவருக்கும் இருந்தது. பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் என அனைவருமே வார்த்தை வடிவம் கொடுக்க முடியாத அளவுக்கு சிரமப்பட்டார்கள் என்பவற்றை மறக்கவே முடியாது. இனவாதம் சார்ந்து நாம் பழைய விடயங்களை பேசுவதற்கு மாற்றமாக ஒரு பகை மறப்பு தேவைப்படுகின்றது.
நடந்த விடயங்களை மறக்க முடியாதுதானே தவிர மன்னிக்க முடியாது என்றில்லை. அரசியல் ரீதியான தீர்க்கமான முடிவுகளுக்காக பகை மறப்பு தேவைப்படுகின்றது. நேச உணர்வினை அரசியல் மற்றும் இலக்கியம் போன்ற சாதனங்களின் ஊடாக வெளிக்கொண்டு வர முடியும். அரசியல் என்ற ஒன்றைத் தாண்டி வடக்கில் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிகளை இல்லாமலாக்கவும் நல்லிணக்கம் என்ற ஒன்று தேவைப்படுகின்றது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் பொதுப்புள்ளிகளை கண்டடைந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கிறது.
இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள்
1990 இல் வடக்கில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரியதொரு அநீதியாகவே அவர்களின் வெளியேற்றத்தை பார்க்க வேண்டியுள்ளதாக பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹேந்திரன் திருவாரங்கன் கருதுகின்றார். பன்மைத்துவம் மற்றும் சகவாழ்வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவாலாக இந்த பலவந்த வெளியேற்றம் இருக்கிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி பலவந்த வெளியேற்றம் இடம்பெற்று 31 ஆண்டுகள் கடந்த பிறகும் இன்னமும் குறித்த சமூகத்தினர் தனிப்பட்ட முறையில் அல்லது குடும்ப அமைப்பில் தம்மை கட்டியெழுப்ப வேண்டிய தேவையுடனே வாழ்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போது மீள்குடியேறுகின்ற முஸ்லிம்கள் மிதக்கும் சமூகமாகவே வாழ்கிறார்கள். அதாவது புத்தளத்தில் கொஞ்ச நாள் யாழ்ப்பாணத்தில் கொஞ்ச நாள் என்றே அவர்களுடைய வாழ்க்கை நகர்கிறது.
யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழ் மக்கள் நமது அண்டை வீட்டார்களை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தபோது தற்போது அதற்கான சூழல் அமைந்துள்ளது. மீள்குடியேறிய முஸ்லிம்கள் தமது தேவைகளுக்காக அரசாங்க அலுவலகங்களுக்கு செல்கின்றபோது அங்குள்ள அதிகாரிகளினால் வெறுப்புப்பேச்சுகளை சந்திப்பது வழமையான ஒன்றாக ஆகியுள்ளது. இப்படி அனுதினமும் சிரமத்துடன் வாழ்கிறார்கள் எனும்போது மீள்குடியேற்றம் அர்த்தமற்றதாக மாறிவிடும்.
வீடுகளை மீளக்கட்டி மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு வழங்குகின்ற திட்டங்களில் பாரிய பின்னடைவு இருக்கிறது. நிலத்துக்கான ஆவணங்கள் எதுவுமே கைவசம் இல்லாத நிலையில் அரசாங்கம் அவர்களிடம் ஆவணங்களை கோருவதும் திட்டங்களை இழுத்தடிப்பு செய்வதும் வேடிக்கையான ஒன்று என மஹேந்திரன் திருவாரங்கன் கருதுகின்றார்.
மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு நிலம் ஒரு பாரிய பிரச்சினை ஆகும். நிலங்களுக்கான பட்டயங்கள் இல்லாமையால் அங்கே நீருக்காக கிணறு தோண்டுதல், மின்சார வசதிகளை பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்களுக்கு பாரிய சிரமங்கள் இருக்கின்றன. மேலும் இராணுவமயமாக்கலால் காணிகளை தமிழர்கள் மாத்திரமின்றி முஸ்லிம்களும் இழந்துள்ளார்கள். ஆனால் இது தமிழ் மக்கள் மாத்திரம் எதிர்கொண்ட பிரச்சினையாகவே ஊடகங்களில் காட்டப்படுகின்றது. மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு மாற்றுக்காணிகளாக வழங்கப்பட்ட நிலங்கள் எந்தவித வளங்களும் இல்லாத வெற்று நிலங்கள் ஆகும்.
வரையறுக்கப்பட்ட நிலத்தில் விறகு வெட்டுதல், தேன் வளர்ப்பு, கால்நடை மேய்ச்சல், வலை பின்னுதல், நெசவு என பல்வேறு கைத்தொழில்களை மீள்குடியேறிய முஸ்லிம்கள் செய்து வந்தபோதிலும் வளங்கள் எதுவுமே இல்லாத நிலம் தமக்கு வழங்கப்பட்டதில் மேற்குறிப்பிட்ட அனைத்து கைத்தொழில்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்திய இழுவைப்படகுகளின் பிரச்சினை, மீன்பிடி எல்லைப் பிரச்சினை போன்ற விவகாரங்கள் தமிழர்களின் பிரச்சினை என்பது போல காட்டப்பட்ட போதிலும் இந்த சவால்களை முஸ்லிம்களும் எதிர்கொள்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. முஸ்லிம்களுக்கு வட்டி போன்ற விடயங்களுக்கு சமய ரீதியாக தடை உள்ள நிலையில் வட்டியற்ற கடன் திட்டங்களை தமிழ் மக்கள் மேற்கொள்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கது. ஆரம்பத்தில் சிலாவத்துறை போன்ற இடங்களில் வட்டி என்ற விடயத்தில் தொடர்புட்டு பல முஸ்லிம் பெண்கள் அதனை மீளச் செலுத்துவதில் வாழ்வாதாரத்தை இழந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் பல முஸ்லிம் ஆண்கள் இரும்பு சேகரித்து விற்பனை செய்கிறார்கள். அவ்வாறு இரும்பு சேகரிக்க வீடுகளுக்கு செல்லும்போது இனவாத வசைகளை எதிர்கொள்கிறார்கள். வியாபாரம் மேற்கொள்ளும்போதும் இந்த வசை தொடர்கிறது. சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கின்ற தமிழ் மக்கள் தமிழ் தேசியவாதத்தினை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் மக்களை எதிர்ப்பது ஆகுமானதல்ல. எனவே மாகாண சபை, பிரதேச செயலகம், பாடசாலைகள் போன்றவற்றில் உள்ள அதிகாரிகள் தமது அதிகாரத்தை முஸ்லிம்கள் மீது பிரயோகிக்காமல் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு திறவுகோளாக அவர்கள் செயற்பட வேண்டும் என்று மஹேந்திரன் திருவாரங்கன் வேண்டிக்கொள்கிறார்.
அரசியல் தவறுகள் மற்றும் பெண்களின் பிரச்சினைகள்
முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்படும்போது அப்போதிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என்று மனித உரிமைகள் ஆர்வலர் ஷ்ரீன் ஸரூர் குற்றம் சாட்டுகின்றார். தற்போது கூட வடக்கிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக யாரும் கண்டுகொள்வதில்லை என தெரிவிக்கிறார். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எவ்வாறு மறைக்கப்பட்டதோ அதேபோல முஸ்லிம்களின் பிரச்சினைகள் மறைக்கப்பட்டுள்ளன என்றே சொல்ல வேண்டும். இன்றும் மீள்குடியேற்றம் என்பது ஒரு சலுகையாக பார்க்கப்படுகின்றதே தவிர அது ஒரு உரிமையாக பார்க்கப்படுவதில்லை.
காணிகளின் உரிமை தொடர்பாக உள்ள சிக்கல் காரணமாக புத்தளத்தில் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்காக ஒரு அலுவலகத்தை தாபிக்க சுமார் பத்து வருடங்கள் ஆகியது. உரிமை சார்ந்த விடயங்கள் எதுவுமே கிடைக்காத நிலைமையே தற்போது வரை இருக்கிறது. 5000 இந்திய வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் கடுமையான வரையறைகள் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளவில்லை.
ஜனநாயக உரிமைகளுக்கும் தீங்குகள் விளைவிக்கப்பட்டன. 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிக்கச் சென்ற வடக்கு முஸ்லிம்களின் பஸ் வண்டி மீது 2019 நவம்பர் 16 ஆம் திகதி அதிகாலை தந்திரிமலையில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மதவாச்சியில் கும்பல்களின் தாக்குதலில் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்தனர் ஆனால் இன்றுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை (ஒரு விசாரணை அறிக்கை கூட தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவில்லை).
அன்று மாலை, பெண்களும் குழந்தைகளும் புத்தளத்திற்குத் திரும்பிச் சென்றபோது, அவர்கள் மீண்டும் தாக்கப்பட்டனர். காயம்பட்ட வாக்காளர்கள் பழிவாங்கலுக்கு பயந்து மருத்துவ சிகிச்சையைக் கூட பெறவில்லை. இந்த வன்முறையின் அடிப்படையில், 2020 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் இந்த வாக்காளர்கள் பங்கேற்றபோது, புத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது. இடம்பெயர்ந்த அல்லது மீள்குடியேறிய முஸ்லிம்கள் மிதக்கும் வாக்காளர்களாக இருக்கிறார்கள். இதனால் பாரிய சவால்கள் நிலவுகின்றன.
இளம் வயது திருமணங்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகுதல் போன்ற விடயங்கள் தற்போது மலிந்து விட்டன. இந்த விவகாரத்தை கண்காணிக்க பாடசாலைச் சூழல் முன் வர வேண்டும். எங்களுடைய சமூகத்திற்கான காப்பு கல்விதான். கல்விச் சூழலை சிறந்த முறையில் பேணுவது மீள்குடியேற்ற முஸ்லிம்களுக்கு கட்டாயமான ஒன்றாகும் என ஷ்ரீன் சரூர் மேலும் வலியுறுத்தினார்.- Vidivelli