எம்.எப்.எம்.பஸீர்
மஹபாகே பொலிஸ் பிரிவில் கடந்த 4 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனையும் அவனது தந்தையையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வத்தளை நீதிவான் ஹேஷான் டி மெல் இதற்கான உத்தரவை கடந்த 5 ஆம் திகதி பிறப்பித்தார்.
புனித மரியாள் வீதி, வெலிசறை – மஹபாகே முகவரியைச் சேர்ந்த 16 வயதான மொஹம்மட் ரக்ஷான் அப்துல்லாஹ் எனும் மாணவனும் 47 வயதான அவரது தந்தை பெஸ்டியன் நெஸ்பிரகே சுரஞ்சித் சந்ரலால் எனும் அப்துல்லாஹ் என்பவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
விபத்தை ஏற்படுத்திய 16 வயது மகனுக்கு எதிராக மஹபாகே பொலிஸார், சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, அபாயகரமாக வாகனம் செலுத்தியமை, விபத்தை ஏற்படுத்தி ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தி நால்வருக்கு காயம் ஏற்படுத்தியமை, விபத்தொன்றினை தடுக்காமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை சட்டக் கோவையின் 298,329,328 மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் 151(3),149(1),123(1) அ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அச் சிறுவனின் தந்தைக்கு எதிராக, தண்டனைச் சட்டக் கோவையின் 298,329,328 ஆம் அத்தியாயங்களின் கீழும், மோட்டார் வாகன சட்டத்தின் 298,123 (1) அ பிரிவின் கீழும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனம் செலுத்த சந்தர்ப்பம் அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் :
பொலிஸாரின் தகவல் பிரகாரம், இந்த விபத்துச் சம்பவம் வருமாறு : கடந்த 4 ஆம் திகதி காலை வேளையில், கொழும்பிலிருந்து நீர் கொழும்பு நோக்கி கறுப்பு நிற சொகுசு ஜீப் வண்டியொன்று பயணித்துள்ளது. இந்த ஜீப் வண்டியானது மஹபாகே பொலிஸ் பிரிவில் வைத்து, நீர் கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு கார், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களை மோதியுள்ளது. சாரதியால் ஜீப் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல், அது பாதையை விட்டு விலகி எதிர்த்திசையில் வந்த வாகனங்களை இவ்வாறு மோதியுள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து, உடனடியாக கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை என அறியப்படும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 51 வயதான மஹபாகே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகனான 16 வயதான சிறுவன் ஒருவன் மிக கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இலங்கையில் விபத்து :
இலங்கையில் நாளாந்தம் ஏற்படும் விபத்துக்களால் நாளொன்றுக்கு 10 முதல் 11 பேர் வரை உயிரிழப்பதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. வருடாந்தம் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் விபத்துக்கள் பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பதிவாகின்றன. எனினும் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையிலான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் பல விபத்துக்கள் பொலிஸ் நிலையம் வரை செல்லாது சமரசமாக முடித்துக்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்களுக்கான முக்கிய காரணம் :
நாளாந்தம் பதிவாகும் விபத்துக்களில் பல, சாரதிகளின் கவனயீனம், வேகக்கட்டுப்பாட்டை இழத்தல், அனுமதிப் பத்திரம் அற்ற சாரதிகளின் நடவடிக்கைகள், குடி போதையில் வாகனம் செலுத்தல், நிதானமின்மை, அவசரம், தூக்கம் போன்றவற்றால் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தைச் செலுத்தும் போது அதில் சாரதிகள் மட்டுமல்ல அவர்களை நம்பி ஒரு குழுவினரும் பயணிக்கின்றனர் என்பதையும் வீதிகளில் அதிகமான மக்கள் நடமாடுவதையும் சாரதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த வருடங்களில் வீதி விபத்துக்களினால் மரணித்தவர்களின் எண்ணிக்கையும், படுகாயமுற்றவர்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வீதி விபத்துக்களினால் ஒருவர் மரணமடையும்போது அந்த குடும்பத்தின் நிலை, படுகாயமடையும் நபரின் குடும்பத்தின் நிலை, அக்குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன மிகப் பெரும் பிரச்சினைகளாக உருவெடுப்பதுடன், சாரதிக்கு தண்டனை வழங்கும் பட்சத்தில் அக்குடும்பத்தின் நிலை தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.
எது எப்படியிருப்பினும் வீதியில் வாகனத்தைச் செலுத்தும் ஒவ்வொரு சாரதியும் நிதானத்துடனும், வீதி ஒழுங்கை சரிவர கடைப்பிடிக்கும் போதுமே இந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.
விபத்துக்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள் :
கடந்த 2014 ஆம் ஆண்டு 2404 பேர் விபத்துக்களால் மரணித்துள்ளனர், 2015 ஆண்டு 2722 பேர் மரணித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு 3003 பேர் மரணித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு 3101 பேர் மரணித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு 3097 பேரும், 2019 ஆம் ஆண்டு 2851 பேரும் மரணித்துள்ளனர்.
மஹபாகே விபத்தும் பாடங்களும் :
இவ்வாறான பின்னணியில் மஹபாகேயில் இடம்பெற்ற விபத்தின் பின்னர் அந்த விபத்தை மையப்படுத்திய பல தகவல்கள் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஊடாக பரவின.
அவை அனைத்தையும் வைத்து ஆராயும் போது, விபத்துக்கான முக்கிய காரணியாக, சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத ஒரு சிறுவனுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தமை, அம்மாணவனால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமை ஆகியன அவதானிக்கப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்து தனது சகோதரியுடன் குறித்த மாணவன் வாகனத்தில் செல்கிறார் என்றால், அது முதற் தடவையாக இருக்க முடியாது. ஏற்கனவே அச் சிறுவனுக்கு அந்த வாகனத்தைச் செலுத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருப்பதால் மட்டுமே, எந்த தயக்கமும் இன்றி அவன் வாகனத்தை எடுத்துச் சென்றிருக்க முடியும்.
இன்று, இலங்கையில் பல பகுதிகளிலும் பெற்றோர், சாரதி அனுமதிப் பத்திரம் பெறும் வயதைக் கூட எட்டாத தமது பிள்ளைகளுக்கு வாகனங்களைச் செலுத்த அனுமதிப்பதை நாம் காண்கிறோம். அது மோட்டார் சைக்கிள் முதல், கார் ஜீப் எதுவாகவும் இருக்கலாம். இந் நடவடிக்கை சட்டத்தை மீறும் செயல் மட்டுமன்றி, தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும், மூன்றாம் நபர் ஒருவரின் எதிர்காலத்தையும் கேள்விக்கு உட்படுத்தும் நடவடிக்கையாகும்.
எனவே இது தொடர்பில் ஒவ்வொரு பெற்றோரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தைச் செலுத்த அனுமதிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அது தொடர்பில் அவதானம் செலுத்தி நடந்து கொள்ள வேண்டும்.
மஹபாகே விபத்து தொடர்பில் நீதிவான் தெரிவித்தமை :
மஹபாகே விபத்து தொடர்பிலான வழக்கு தொடர்பில் வத்தளை நீதி மன்றில் விடயங்களை முன் வைத்த பொலிஸார், கைது செய்யப்பட்ட சிறுவன் கே.எஸ். 4893 எனும் இலக்கத்தை உடைய மென்டரோ ஸ்போர்ட்ஸ் – மிட்சுபிசி ரக சொகுசு ஜீப்பினை செலுத்திச் சென்ற நிலையில் அது கட்டுப்பாட்டை இழந்து விபத்து சம்பவித்துள்ளதாக சுட்டிக்காட்டினர். இதனால் மரணமடைந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது 16 வயது மகனும் படுகாயமடைந்து தற்போதும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.
இதன்போது மன்றில் இந்த விபத்து தொடர்பில் தீவிர அவதானம் செலுத்திய நீதிவான், இந்த விபத்தானது பொல்கஹவலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ரயில்- – பஸ் விபத்தினை ஒத்த விபத்தாக இதனை நினைவு கூர்ந்தார். அந்த அளவுக்கு பாரதூரமனதாக அவர் இந்த விபத்தை ஒப்பீடு செய்தார்.
இந் நிலையிலேயே தந்தை, மகன் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.- Vidivelli