அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் இருந்து படிப்பினை பெறுவோமா?

0 598

நாட்டில் கடந்த ஒரு வார காலத்திற்குள் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடைய பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடராக இடம்பெற்றுள்ளதை ஊடக அறிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்களால் உணர முடிந்திருக்கும்.

கடந்த வியாழக்கிழமை மஹாபாகே பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது 16 வயது மகன் படுகாயமடைந்து அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார். இந்த விபத்துக்குக் காரணமான வாகனத்தை செலுத்திச் சென்றவரும் 16 வயதுடைய சிறுவன் என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். 18 வயதுக்கு மேற்பட்ட, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களே சட்ட ரீதியாக வாகனங்களைச் செலுத்துவதற்கு அனுமதியிருக்கின்ற நிலையில் இவ்வாறு பொறுப்பற்ற விதமாக பாரிய வாகனமொன்றைத் தமது பிள்ளையைச் செலுத்த அனுமதித்த பெற்றோரே இதற்கு முழுப் பொறுப்புக் கூறவேண்டியவர்களாவர்.

அதேபோன்று கடந்த வாரம் அநுராதபுரம், கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரைப் பொலிசார் கைது செய்து அழைத்துச் செல்ல முயற்பட்ட போது, பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆண்களும் பெண்களும் இணைந்து நடந்து கொண்ட விதமானது முழு சமூகத்திற்கும் தலைகுனிவைத் தேடித் தந்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான பல சம்பவங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் நடந்துள்ள நிலையில், தொடர்ந்தும் இவ்வாறு சட்டத்தை மீறும் வகையில் நாம் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கதாகும்.

இவற்றுக்கு அப்பால், கடந்த இரு வார காலத்திற்குள் கொழும்பில் இரு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது சடலம் பயணப் பை ஒன்றில் இடப்பட்டு குப்பை மேட்டில் வீசப்பட்டுள்ளது. இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் சு+தாடுபவர்கள் என்றும் பிரதான சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதேபோன்று, கடந்த மாத இறுதியில் கொழும்பு, புதுக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இளைஞர் ஒருவர், அவரது நண்பர்களாலேயே கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் பணக் கொடுக்கல் வாங்கலே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் ஆண்களோடு ஆபாசமாகப் பேசி, அவர்களை தமது வலையில் சிக்க வைத்து பெருந்தொகைப் பணத்தை அபகரித்து வந்த மோசடிக் கும்பல் ஒன்றும் கடந்த வாரம் பொலிசாரின வலையில் சிக்கியுள்ளது. சமூகத்தில் முக்கிய அந்துஸ்துள்ள பலரும் இவர்களின் வலையில் சிக்கியுள்ளதாக அறிய முடிகிறது. இச் சம்பவம் அப் பகுதியில் பலத்த அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டிலும் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமே கொழும்பைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் சிறுமிகள் காணாமல் போன விவகாரமாகும். மறுநாள் இவர்கள் தமது வீட்டை வந்தடைந்துள்ள போதிலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றமைக்காக முன்வைக்கப்படும் காரணங்கள் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் இச் சிறுமிகளின் குடும்பத்தவர்களது நிலைப்பாடு இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. இச் சிறுமிகளின் நோக்கம் எதுவாக இருப்பினும், அவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி நெறிப்படுத்துவதே அவர்களது பெற்றோரிக் கடப்பாடாகும். அதேபோன்று சமூகமும் அவர்களை தொடர்ந்தும் தமது கல்வி உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறான பிரச்சினைகள் இன்று பொதுவாக எல்லா வீடுகளிலுமே நிகழ்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. கையடக்கத் தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் காரணமாக பிள்ளைகள் இன்று வழிதவறிச் செல்கின்றனர். கொவிட் 19 அனர்த்தம் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில், இணையவழிக் கல்வி என்ற போர்வையில் இன்று சிறார்கள் நவீன சாதனங்களுக்கு அடிமையாகியுள்ளனர். இது எல்லா சமூகங்களிலுமே இன்று பெரும் சவாலாக மாறியுள்ளது. இது குறித்து தேசிய ரீதியான வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்பதையே இவ்வாறான சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் குறித்து இவ்வார விடிவெள்ளியில் விரிவான விபரங்கள் பிரசுரமாகியுள்ளன. இவற்றிலிருந்து சமூகம் படிப்பினை பெற்றுக் கொள்வதுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவை பிரசுரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மிம்பர் மேடைகளிலும் ஏனைய பொதுத் தளங்களிலும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் குறித்தும் அவற்றுக்கான இஸ்லாமிய வழிகாட்டல்கள் குறித்தும் போதிய விழிப்புணர்வுகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் 19 பரவல் காரணமாக சமூகத்தை அறிவூட்டுகின்ற பல்வேறு கட்டமைப்புகள் செயலிழந்துள்ளன. இவற்றின் விளைவாகவும் மேற்படி சம்பவங்களைக் கருத முடியும். இவை குறித்து நாம் தீவிரமாக சிந்திப்பதுடன் நமது குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என அனைவரது நலன்கள் குறித்தும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.