(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘கூரகல – தப்தர் ஜெய்லானி பிரதேசமும், பள்ளிவாசலும் கதிர்காமம் மற்றும் சிவனொளிபாத மலை புனித ஸ்தலங்கள் போன்று இன நல்லுறவினை வளர்க்கும் மையமாக மாற வேண்டும். ஜெய்லானி வருடாந்த கொடியேற்று நிகழ்வில் கலந்து கொள்ளக் கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன்’ என நெல்லிகல வத்துரே கும்புர தம்மரதன தேரர் தெரிவித்தார்.
தம்மரதன தேரர் கடந்த 5 ஆம் திகதி ஜெய்லானி பள்ளிவாசலில் இடம்பெற்ற கொடி ஏற்றும் வைபவத்தில் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.
கொடியேற்றும் வைபவம் கடந்த 6 ஆம் திகதி நடைபெற இருந்தாலும் அன்றைய தினம் கூரகல பன்சலையில் ‘கட்டின பிங்கம’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பள்ளிவாசலின் நிகழ்வு கடந்த 5 ஆம் திகதிக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
அங்கு நெல்லிகல தேரர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் ‘ஜெய்லானியில் முஸ்லிம்களின் மதக்கிரியைகளுக்கு எவ்வித தடையுமில்லை எதிர்வரும் வருடங்களில் கொடி ஏற்றும் வைபவத்தை மேலும் சிறப்பாக ஒன்றிணைந்து முன்னெடுப்போம்’ என்றார். – Vidivelli