(எம்.எப்.எம்.பஸீர்)
‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால், பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான விசாரணைகள், முதற் தடவையாக எதிர்வரும் 15 ஆம் திகதி திங்களன்று புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/ 21 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் திகதி இந்த மனு உயர் நீதிமன்றில் நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட போதே, மேலதிக பரிசீலனைகள் இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டன. இதன்போது மனு மீதான பரிசீலினைகளில் இருந்து நீதியரசர் ஜனக் டி சில்வா விலகியதுடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் அங்கம் வகித்தமையை அவர் காரணமாக குறிப்பிட்டார்.
இதன்போதே முதற் தடவையாக, அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள விடயத்தை, மனுவில் பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி நரின் புள்ளே அறிவித்திருந்தார்.
கடந்த 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலிக்கப்பட்ட போது, அன்றைய தினம் மன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகரவுடன் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம். இல்லியாஸ், மூன்றாம் பிரதிவாதி ( ரி.ஐ.டி. பணிப்பாளர்) தாக்கல் செய்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளுக்கு எதிரான பதில் வாதங்களை சமர்ப்பித்தார்.
இந் நிலையிலேயே மனு மீதான மேலதிக பரிசீலனைகள் டிசம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. – Vidivelli