பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் கைது: முஸ்லிம் எம்.பி.க்கள் வாய்திறப்பதில்லை
குற்றம் செய்யாதவர்களை விடுவியுங்கள்: சாணக்கியன் எம்.பி.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற
குற்றச்சாட்டின் கீழ் 300 இளைஞர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலர் சிறு குற்றச்செயல்கள் புரிந்தவர்கள். இவர்கள்பற்றி எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் பேசுவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வில் “ஒரே நாடு ஒரே சட்டம்’’ நியமனம் தொடர்பில் நேற்றுமுன்தினம் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: நாட்டின் தலைவர் இன்று ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பாக செயலணியொன்றினை நியமித்துள்ளார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவைப்பற்றி கூறியபோது அனைவருக்கும் சட்டம் சமமாக அமுல்படுத்தப்படுமென்றே நாட்டு மக்கள் நிலைத்தார்கள்.
ஏறாவூர் பொலிஸ் சம்பமொன்றினை நான் கண்டேன்.ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கியது பற்றி நான் அமைச்சர் சரத் வீரசேகரவிடம் முறையிட்டேன். உடனே அமைச்சர் அந்த பொலிஸ் உத்தியோகத்தரை பதவி விலக்கி விசாரணைகளை ஆரம்பித்தார்.
இதேபோன்று மூன்றுதினங்களுக்குப் பின்பு கேகாலையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் தாக்குதல் நடத்தியிருந்தார். ஆனால் அவருக்கு இடமாற்றம் மாத்திரமே வழங்கப்பட்டது பொதுவாக ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக சட்டம் அமுல்நடத்தப்படும் என நாம் எதிர்பார்த்தோம். இங்கு என்ன நடந்திருக்கிறதென்றால் பணமுள்ளவருக்கு ஒரு சட்டம். பணம் இல்லாதவருக்கு ஒரு சட்டம். உயர்பதவியிலுள்ளவருக்கு ஒரு சட்டம். கீழ் பதவியிலுள்ளவருக்கு ஒரு சட்டம். ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலோ அல்லது செயலணிக்கு தமிழ் உறுப்பினர் நியமிக்கப்படாமை பற்றியோ நாங்கள் குழப்பமடையவில்லை. இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களும், தமிழர்களும் தேவையில்லை என்ற கொள்கையையே அரசாங்கத்தின் கொள்கையாகவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வகையில் பிரிவினையற்ற ஒரே நாட்டினுள் அனைவரதும் அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தாருங்கள் என்றே நாம் கோருகிறோம். ஆனால் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு தமிழர் ஒருவரையேனும் நியமிக்காதது நியாயமற்றது. அதன் தலைவர் நாட்டின் சட்டத்தை மீறிய குற்றம் புரிந்து சிறை சென்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானவர்.
உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவரையே ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஜனாதிபதி நியமித்துள்ளார். நாங்கள் ஒன்றிணைந்து வாழும்போது வேண்டாம் நீங்கள் போங்கள் என்று விரட்டுவது போன்றுள்ளது என்றே எம்மால் தெரிவிக்க முடிகிறது.
அரசாங்கத்துக்கும் இவை தேவையாக உள்ளது. எம்மை வேண்டாம் என்று அரசாங்கம் கூறுகிறது என்பதே எனது நிலைப்பாடு. தொடர்ந்தும் எம்மை தள்ளுகிறீர்கள். நாம் எங்கு போவது எங்களுக்குப் போவதற்கு இடமில்லை.
இதேவேளை ஒரே நாடு ஒரே சட்டத்தின் கீழ் சிங்களவர், தமிழர், கத்தோலிக்கர், முஸ்லிம்கள் ஒன்றாக இருப்பது என்பது பகற்கனவு மாத்திரமே.
நான் ஜனாதிபதியிடமிருந்து அதனைவிட வேறெதையும் எதிர்பார்க்கவில்லை. நான் அவருக்கு வாக்களிக்கவில்லை. பிரசாரம் செய்யவில்லை. ஜனாதிபதி இவ்வாறு செய்வார் என நாம் அறிந்திருந்தோம் என்றாலும் 69 இலட்சம் மக்கள் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்.
ஜனாதிபதி சிறுபான்மையினரின் உரிமைகளை வழங்கமாட்டார் என நாம் அறிந்திருந்தோம். ஆனால் ஒன்றினைக் கூறவேண்டும்.மத்திய வங்கி ஊழல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இன்றுவரை என்ன நடந்துள்ளது. மத்தியவங்கியின் கொள்ளையர்களில் ஒருவரையாவது பிடித்தார்களா? மத்திய வங்கி பற்றி இப்போது பேசப்படுகிறதா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கழுத்தைப்பிடித்து இழுப்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. ஆயர் சிறில் காமினியை சி.ஐ.டிக்கு அழைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதைக் கண்டோம். இது மாறான செயற்பாடாகும்.
பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். முக நூலில் இட்ட பதிவுகளுக்காகவே இவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் 300 இளைஞர்கள் சிறையில் இருக்கிறார்கள்.
முஸ்லிம் இளைஞர்கள் ஏன் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை ஆராய்ந்தால் அவர்கள் சிறு குற்றச்செயலில் ஈடுபட்டவர்களே. இதுபற்றி எந்தவோர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராவது பேசுவதில்லை. நாங்கள் என்றால் தமிழ் இளைஞர்கள் பற்றி பேசுகிறோம். யாராவது குற்றம் செய்திருந்தால் தண்டனை வழங்குங்கள். இன்றேல் விடுதலை செய்யுங்கள்.
உங்களால் தமிழ், முஸ்லிம் இளைஞர்களை சிறையில் வைத்திருக்க முடியும். ஆனால் இன்று போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நாட்டில் தொடரும்போது ஆசிரியர்கள் பாதையில் இறங்கியுள்ளார்கள்.இந்நிலை தொடர்ந்தால் மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தையும் தாமரை மொட்டு கும்பலையும் கழுத்தைப்பிடித்து இழுத்து வெளியேற்றுவார்கள்.
20க்கு வாக்களித்தவர்களுக்கும் விரைவில் இதே நிலைமையே ஏற்படும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.- Vidivelli