கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இதற்கு முன்னர் நான் வெளியிட்ட ஓரிரு கட்டுரைகளில் இந்த நாட்டின் அரசியலைப்பற்றி விமர்சிக்கின்றபோதெல்லாம் பாரதியாரின் ஒரு கவிதை வரியை மேற்கோள் காட்டி வந்தேன். அதனை மீண்டும் ஒருமுறை மேற்கோள்காட்ட வேண்டியுள்ளது. “பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்றான் அந்தப் புரட்சிக் கவிஞன். அது இலங்கையில் நாளாந்தம் நிஜமாகி வருவதை அரசியல் அவதானிகள் உணர்வர். அந்த நிஜத்தின் மிக அண்மையான வடிவத்தைத்தான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஒரே நாடு ஒரே சட்டச் செயலணி வெளிப்படுத்துகிறது. சட்டம் சார்ந்த ஒரு விடயத்துக்கு சிபார்சு வழங்க சட்டத்தையே அவமதித்த ஒருவரை தேர்ந்தெடுத்ததை எவ்வாறு நியாயமாக்கலாம்? அதைப்பற்றிய ஒரு கண்ணோட்டந்தான் இக்கட்டுரை.
ஒரே நாடு ஒரே சட்டத்தின் பின்னணி
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற இந்த மந்திரம் மிக அண்மையில் சோடிக்கப்பட்டதொன்று. அதன் தோற்றம் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதிக் காலத்திலேதான் இடம்பெற்றது. அதுவும் நமது முஸ்லிம் தலைவர்களின் மகத்தான கைங்கரியத்தினால் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அடையாளங்களை அழிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு மந்திரம். எனவே இதனை உருவாக்கியதில் முஸ்லிம்களுக்கும் பங்குண்டு என்பதை கவலையுடன் ஏற்க வேண்டியுள்ளது.
முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்களுள் ஒன்றுதான் அவர்களின் திருமணம் விவாகரத்து சம்பந்தமான சட்டக்கோவை. அந்தக் கோவைக்குள் காதி நீதிமன்றங்களும் அடங்கும். அந்தச் சட்டக்கோவை பிரித்தானியர் இலங்கையை ஆண்டபோது வடிவமைக்கப்பட்டு, இலங்கை சுதந்திரம் அடைந்தபின் 1951ஆம் ஆண்டு நாடாளுமன்ற மசோதாமூலம் சட்டமாக்கப்பட்டது. காலத்துக்குக்காலம் இச்சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை காலமாற்றங்களை உணர்ந்த திருத்தங்களாக அமையவில்லை. குறிப்பாக முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு அச்சட்டம் உரிய அந்தஸ்தை வழங்கத்தவறி விட்டது. முஸ்லிம் பெண்கள் கல்வியிலே உயராது வீடுகளுக்குள்ளேயே பொற்கூண்டுக் கிளிகளாகப் பறந்து திரிந்து பின்னர் திருமணம் என்ற பெயரில் கண்காணாத யாரோ ஒருவனுடைய பொறுப்பில் தள்ளப்பட்டு படுக்கை அறைக்குள் தாசியாகவும் சமையலறைக்குள் எஜமானியாகவும் வாழ்ந்த ஒரு காலத்தில் பெண்களின் உரிமைகளைப்பற்றி யாரும் பேசவுமில்லை அவற்றை ஒரு பொருட்டாக ஆண்கள் மதிக்கவுமில்லை. அந்த நிலை 1970க்குப் பின்னர் மிக வேகமாக மாற்றமடையலாயிற்று. முஸ்லிம் பெண்களிடையே ஏற்பட்ட துரிதமான கல்வி வளர்ச்சி முஸ்லிம் சமூகத்தில் ஒரு புரட்சியையே தோற்றுவித்தது எனலாம். அதைப்பற்றி இங்கே விபரிக்கத் தேவையில்லை.
அந்தப் புரட்சியினால் முஸ்லிம் பெண்களே நடைமுறையிலுள்ள திருமண, விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் வேண்டுமெனக் குரலெழுப்பினர். அந்தக் குரலின் விளைவாகத்தான் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் 2009ஆம் ஆண்டு ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு அக்குழுவுக்குள் முஸ்லிம் பெண்கள் சிலரும் உள்ளடக்கப்பட்டு பத்து வருடங்களின்பின் 2019இல் அக்குழு அதன் சிபாரிசுகளை நல்லாட்சி அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. அந்தச் சிபாரிசுகள் முஸ்லிம் பெண்களின் முழுக்கோரிக்கைகளையும் ஏற்காவிட்டாலும் சில வரவேற்கத்தக்க மாற்றங்களை உள்ளடக்கி இருந்தது. அந்த மாற்றங்களை முற்றாக எதிர்த்தது முற்று முழுதாக ஆண்களையே அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா. அதன் எதிர்ப்புக்கு ஆதரவாக இயங்கினர் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள். அவர்களின் ஆதரவுக்குக் காரணம் உலமாக்களின் ஆதரவில்லாமல் எதிர்வரும் தேர்தலில் அவர்கள் தோல்வியை எதிர்கொள்ள நேரிடும் என்ற பயம். அப்போதிருந்த நீதி அமைச்சரும் மிகவும் சாதுரியமாக மர்சூப் அறிக்கையின் தலைவிதியை முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையில் சுமத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டார். மர்சூப் அறிக்கையும் நீதி அமைச்சரின் அலுவலகத்தின் ஒரு மூலையிற் கிடந்து தூசு பிடிக்கலாயிற்று.
அந்த இடைவெளியைப் பயன்படுத்தித்தான் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அதுரலியே ரதன தேரர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மந்திரத்தை உச்சரித்து முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டுமென்ற ஒரு தனியார் மசோதாவை முன்மொழிந்தார். அதிலிருந்துதான் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மந்திரம் தேர்தலில் சூடுபிடிக்கத் தொடங்கிற்று. அந்த மந்திரத்தை தனது தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டே பிரசாரம் செய்து 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றியீட்டினார். அன்று அந்த இடைவெளி ஏற்படாவண்ணம் நீதியரசர் மர்சூப் வழங்கிய சிபாரிசுகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரே குழுவாக நின்று நிறைவேற்றி இருந்தால் அந்த மந்திரம் நாடாளுமன்றத்தில் உச்சரிக்கப்பட்டிருக்குமா? அது தேர்தல் பிரசாரத்தில் இடம் பெற்றிருக்குமா? எனவே முஸ்லிம் அரசியல்வாதிகளும் உலமாக்களும் சேர்ந்து உருவாக்கியதே இந்த மந்திரம் எனக் கூறுவேன். முஸ்லிம்களிடையே நாட்டின் போக்கினை உணர்ந்து தூரநோக்குடன் செயற்படும் தலைமைத்துவம் இல்லை என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளேன். அதற்கு ஒரே நாடு ஒரே சட்டம் சிறந்த உதாரணம்.
அதுரலிய ரதன தேரர் ஒரே நாடு ஒரே சட்டம் என்றதுடன் அந்த மந்திரத்தை நிறுத்திக்கொள்ள, ஞானசார தேரர் அதை இன்னும் நீட்டி ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே இனம் என்னும் அளவுக்குக் கொண்டு சென்றார். அது 2019 ஜூன் மாதம் ஏழாம் திகதி கண்டியில் நடைபெற்ற ஒரு பகிரங்கக் கூட்டத்தில் இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, மற்றைய இனங்களெல்லாம் சிங்களவர்களின் தயவில் வாழும் வாடகைக் குடிகளே என்று பேசியதால் உறுதியானது. இதுவரை ஜனாதிபதியோ பிரதமரோ மற்ற எந்தவொரு அமைச்சரோ ஞானசாரரின் கூற்றை நிராகரித்துப் பேசியதில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலும்
முஸ்லிம்கள் பழிவாங்கப்படுதலும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சஹ்ரான் தலைமையின்கீழ் தேசிய தௌஹீத் ஜமாஅத் கும்பலால் நிறைவேற்றப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அந்தப் படுபாதகச் செயலுக்குப் பின்னால் ஒரு முக்கியமான சூத்திரதாரி உண்டு என்பதை கத்தோலிக்கப் பேராயர் மல்கம் ரஞ்ஜித் அவர்கள் வலியுறுத்திக்கொண்டே வருகிறார். இவர் ஜனாதிபதி கோத்தாபயவினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் 22 பாகங்களைக்கொண்ட அறிக்கையின் பிரதிகளை வாசித்தபின்னரே இவ்வாறு வலியுறுத்துகிறார் என்பதை மறத்தலாகாது. அத்துடன், பேராயர் அந்தச் சூத்திரதாரியின் விபரங்கள் ஜனாதிபதியினால் வேண்டுமென்றே அரசியல் இலாபம் கருதி மறைக்கப்படுகின்றதென்றும், விசாரணைக்குழுவின் அனைத்து சிபாரிசுகளையும் அவர் அமுல்படுத்த மறுக்கிறார் என்றும் மேலும் குற்றம் சாட்டுகிறார். உதாரணமாக, ஞானசார தேரரின் பொது பல சேனா இயக்கத்தையும் சில முஸ்லிம் இயக்கங்களையும் தடைசெய்யுமாறு அக்குழு சிபாரிசுசெய்ய முஸ்லிம் இயக்கங்களைமட்டும் தடைசெய்து பொது பல சேனாவை சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளதன் அந்தரங்கம் என்னவோ? அதேபோன்று விசாரணைக்குழு சில உளவுத்துறை அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்க அதையிட்டு ஜனாதிபதி எந்தக் கரிசனையுமின்றி ஊமையாக இருப்பதன் காரணந்தான் என்னவோ? இவையெல்லாம் போராயரின் குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுவூட்டுகின்றன என்பதை மறுக்கலாமா? பேராயரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றால் ஏன் அந்த விசாரணை அறிக்கையை எந்தத் தணிக்கையும் செய்யாது மக்கள் பார்வைக்காக வெளிப்படுத்த முடியாது? எனினும் சஹ்ரான் கும்பலின் கொலைச் செயலுக்குப் பரிகாரமாக முழு முஸ்லிம் இனத்தையே இன்று பழிவாங்கிக் கொண்டிருக்கிறார் ஜனாதிபதி.
இதுவரை சுமார் முந்நூறுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வெறும் சந்தேகத்தின் பேரிலும் அற்ப காரணங்களுக்காகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு பாதுகாப்புத் துறையினரின் பலவகையான இம்சைகளுக்கும் ஆளாகி சிறைகளுக்குள் வாடிக்கொண்டிருக்கின்றனரெனத் தகவல்கள் கசிந்துள்ளன. அவர்களுள் மனித உரிமைச் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இளம் கவிஞன் அஹ்னாப் ஜசீம், சமயப் பிரசாரகர் ஹஜ்ஜுல் அக்பர், முன்னைய மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி, நாடாளுமன்ற அங்கத்தவர் றிஷாத் பதியுதீன் (அவர் இப்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்) ஆகியோரும் அடங்குவர்.
சிறைகளுக்குள் வாடும் முஸ்லிம்கள் ஒருபுறமிருக்க சிறைகளுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கஷ்டங்களோ அனந்தம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குர்ஆன், இஸ்லாம் சம்பந்தமான நூல்கள், மத்ரஸாக்கள், முஸ்லிம்களின் ஆடைகள் பற்றிய கட்டுப்பாடுகளும் தடைகளும், பௌத்தத்தின் பெயரால் மாட்டிறைச்சி உண்பதைத் தடைசெய்யாமல் மாடுகளை அறுப்பதற்கு மட்டுமான தடை, முஸ்லிம்கள் சுதந்திரமாக வியாபாரம் செய்வதற்கான இடையூறுகள், அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் முஸ்லிம்களின் காணிகளைப் பறிப்பதற்கான முயற்சி, பள்ளிவாசல்களுக்கெதிரான தடைகள், ஒரு வருடத்துக்கும் மேலாக உலக மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு முஸ்லிம்களின் கொவிட் ஜனாசாக்களை அடக்கவிடாமல் எரித்தமை ஆகியனவெல்லாம் முஸ்லிம் இனத்தையே பழிவாங்கும் நோக்கம் என்பதை மறுக்க முடியுமா?
ஜனாதிபதியின் தொடர் நாடகத்தின் ஒரு உப கதை
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக கோத்தாபயவை ஒதுக்கினர் என்பது உண்மை. எல்லா சிறுபான்மை இனங்களுமே அவரை ஒதுக்கினாலும்கூட சிங்கள மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பகிஷ்கரிப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆதலால் தனிப்பட்ட குரோதம் முஸ்லிம்களின்மேல் அவருக்கு உண்டு. எனினும் அந்தக் குரோதத்தை சாதுரியமாக நடத்திக்காட்ட அவரின் நெருங்கிய நண்பரான அலி சப்ரியை பின்கதவால் அமைச்சரவைக்குள் நுழைத்துவிட்டு முஸ்லிம்களை அவரை வைத்துக்கொண்டே நசுக்கும் ஒரு நாடகத்தை ஜனாதிபதி அரங்கேற்றி வருகிறார். தான் பௌத்த சிங்களவரின் வாக்குகளாலேயே வெற்றியடைந்தவன் என்றாலும் எல்லா இனங்களுக்குமே நான் ஜனாதிபதி என்று அவர் வெற்றிவாகை சூடியபின் கூறினாலும் கடந்த இரண்டு வருடகால வரலாறு அவர் பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமேதான் ஜனாதிபதியாக இயங்குகிறார் என்பதையே உணர்த்துகிறது. இதுவரை முஸ்லிம்களின் குறைகளுள் எதையாவது அவர் தலையிட்டுத் தீர்த்துவைத்துள்ளாரா? இல்லவே இல்லையே.
அவருடைய தொடர் நாடகத்தின் ஓர் உபகதையாகவே ஞானசாரரின் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டத்தின் செயலணியைக் கருதவேண்டும். ஆனால் நாடகம் தொடரும். இந்தக்கதையின் முக்கிய கதாபாத்திரம் ஞானசாரர். இவரைப்பொறுத்தவரை சூபித்துவத்தைத்தவிர மற்ற எல்லா முஸ்லிம் மதக்கொள்கைகளுமே அடிப்படைவாதத்தை போதிப்பன. அவற்றிலிருந்துதான் முஸ்லிம் தீவிரவாதிகள் பெருகுகின்றனர் என்பது இவரின் புதுமைச் சித்தாந்தம். எனவே முஸ்லிம்களை மூளைச்சலவை செய்யவேண்டும் எனவும் இவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, இவரும் இவரது பொது பல சேனாவும் கடந்த சில வருடங்களாக அடுக்கடுக்காக நடைபெற்ற முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களுக்கும் வன்முறைகளுக்கும் தூண்டுகோலாகச் செயற்பட்டவர்கள். இவர் நீதிமன்றத்தின் கட்டளைகளை அவமதித்ததற்காக ஆறுவருடச் சிறைத்தண்டனைக்கு ஆளானவர். முன்னைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, தனக்கு அரசியல் இலாபம் கிடைக்கும் எனக்கருதி இவரை அன்று மன்னித்து விடுதலை செய்திருக்காவிட்டால் இவர் இன்றுவரை சிறைக்குள்ளேதான் இருந்திருப்பார். இப்போதுள்ள புதிய ஜனாதிபதியோ இவரையே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மந்திரத்தை நடைமுறையில் அமுலாக்க விரும்பியது இவரின் அறிவை உணர்ந்தா அல்லது இவரால் இன்னுமொரு நாடகத்துக்குக் கதை எழுதவா என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் இந்த வில்லனின் அர்த்தமற்ற வாதங்களுக்கு ஆமா போடுவதற்காக நான்கு முஸ்லிம்களையும் இந்தச் செயலணிக்குள் ஜனாதிபதி நுழைத்துள்ளார்.
செயலணியின் அந்தரங்க நோக்கம்
ஏற்கனவே கூறியதுபோன்று முஸ்லிம்களின் திருமண விவாகரத்துச் சட்டத்தை காதிமன்றங்களுடன் சேர்த்து முற்றாக நீக்குவதே இந்தச்செயலணியின் நோக்கம். ஆனால் அது சட்டம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம். அதனைச் சீராக ஆராய்ந்து செயற்படுத்துவதற்கு சட்டம் தெரிந்த ஒருவரிடம் இப்பொறுப்பு சுமத்தப்பட வேண்டும். அந்தப் பொறுப்பைத் தாங்க நீதி அமைச்சர் அலி சப்ரியைவிட வேறு யாரும் மந்திரி சபையில் இல்லை. அலி சப்ரி அச்சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த முனையும் அதே வேளை அதை முற்றாக நீக்குவதற்குத் தயங்குவது ஜனாதிபதிக்குத் தெரியும். எனவேதான் இந்த அமைச்சரை ஒதுக்கிவிட்டு ஞானசாரரை அவர் நியமித்துள்ளார். ஜனாதிபதியின் இன்னுமொரு அந்தரங்க நோக்கும் இதற்குள் அடங்கும்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பொருளாதாரச் செழிப்பை உருவாக்கி ஒரு மகோன்னத இலங்கையை உருவாக்குவேன் என்று கூறிக்கொண்டு பதவியைக் கைப்பற்றி அதன் அதிகாரங்களையும் பலப்படுத்திக்கொண்ட ஜனாதிபதி கோத்தாபய கடந்த இரண்டு வருடங்களாகக் கண்டதெல்லாம் தோல்விதான். நாட்டை இராணுவமயமாக்கியது மட்டுமே அவர்கண்ட சாதனை. அது அவருக்கு சாதனையாகத் தெரிந்தாலும் மக்களைப் பொறுத்தவரை அது ஒரு வேதனை. அவரின் தோல்விகளுக்கு கோவிட் நோயையே காரணம் கூறுவதை ஏற்க முடியாது. அவருடைய மாபெரும் தோல்வி பொருளாதாரத் துறையில் என்பதை அவதானிகள் உணர்வர். பொருத்தமான கொள்கைகளை வகுத்து சீராக அவற்றை அமுல்படுத்தத் தவறியதன் விளைவாக விவசாயிகள் தொடக்கம் ஏழைத் தொழிலாளிகள் வரை நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் உற்பத்தியாளர்களும் உணவின்றித் தவிக்கும் கோடானுகோடி குடியானவர்களும் இன்று வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டங்களில் குதிக்கத் தொடங்கிவிட்டனர். ஜனாதிபதிக்கு வாக்களித்த பௌத்த சிங்கள மக்களே இன்று அவர்களின் தவறை உணர்ந்து ஆட்சியிலே மாற்றம் காணத் துடிக்கின்றனர். இதை உணர்ந்த ஜனாதிபதி சில தினங்களின்முன் பகிரங்கமாகவே தமது ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கோரினார். ஆனாலும் மக்கள் மன்னிக்கும் மனப்பாங்கில் இன்றில்லை.
இந்த நிலையில் ராஜபக்ச ஆட்சியின் வெளிநாட்டுக் கொள்கை சில புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. அவற்றுள் ஒன்று தமிழினத்தின் நிலைமை பற்றியது. அதற்கு ஒரு தீர்வுகாணும் முகமாக மாகாணத் தேர்தலையாவது நடத்துமாறு இந்தியாவும் அதற்கு ஆதரவான மேற்கு நாடுகளும் அழுத்தம் கொடுக்கின்றன. இந்தச் சூழலில் தேர்தல் என்பது ஆட்சியினரின் தற்கொலைக்குச் சமன். அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி. எனவே எந்த ஒரு தேர்தலையும் நடத்தமுடியாத அமைதியற்ற ஒரு நிலைக்கு நாட்டை மாற்ற முடியுமானால் அமைதியின்மையைச் சாட்டாக வைத்து இராணுவ ஆதரவுடன் ஆட்சியை நீடிக்கலாம். அந்த நிலைமையை எப்படி ஏற்படுத்துவது?
முஸ்லிம் சமூகத்தையே நாட்டின் எதிரிகளெனப் படம்பிடித்துக்காட்டுபவர்கள் ஞானசாரரும் அவரின் பொது பலசேனா பரிவாரங்களும். கோத்தாபயவும் அவர்களின் சேவையை இப்போது நாடிநிற்கிறார். ஆகவேதான் அவர் அந்த இயக்கத்தைத் தடை செய்யவில்லை. முஸ்லிம்களின் கலாசார அடையாளங்களுள் ஒன்றாகிய திருமண விவாகரத்துச் சட்டத்தை முற்றாக நீக்குகையில் அது முஸ்லிம்களிடையே ஏமாற்றத்தையும் ஆட்சியின்மேல் வெறுப்பையும் உண்டுபண்ணும் என்பது திண்ணம். ஆனால் அந்த வெறுப்பு சில பொறுப்பற்ற நபர்களின் நடவடிக்கைகளால் அசம்பாவிதங்களை ஏற்படுத்துமாயின் அதனைத் துரும்பாகப் பாவித்தே ஞானசாரர் அவரின் பொது பலசேனாவை தூண்டிவிட்டு இன்னுமொரு கலவரத்தை உண்டு பண்ணுவார். அதுவே போதும் ஜனாதிபதிக்கு. அந்த அமைதியின்மையை காரணம்காட்டி தேர்தல்களே இல்லாமல் ஆட்சியை இராணுவத்தின் ஆதரவோடு நீடிக்கச் செய்யலாம். இதுவே அவரது நாடகத்தின் இன்னுமொரு நோக்கம்.
மீள வழி
இது முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு சோதனைக் காலம். ஆனால் அவர்களின் முக்கிய பிரச்சினை தரமான தலைமைத்துவம் இல்லாமையே. கத்தோலிக்க மக்களுக்கு நீதிகேட்டு பேராயர் துணிந்து போராடுவதுபோல் முஸ்லிமகளுக்காகப் போராட யாரும் இல்லை. ஜம் இய்யத்துல் உலமாவுக்குத் தெரிந்ததெல்லாம் இறைவனிடம் கையேந்துவதே. இருக்கின்ற அரசியல் தலைவர்களோ சாத்தானுடனாவது பேரம்பேசி தங்களது நலன்களையே உயர்த்தப்பார்க்கின்றனர். இல்லாவிட்டால் 20ஆம் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்திருப்பார்களா? அவர்கள் செய்த கைங்கரியத்தால் முழுச்சமூகமுமே இன்று நட்டாற்றில் தள்ளப்பட்டுள்ளது. இப்பொழுது கத்தோலிக்க மக்களின் பிரச்சினை பாப்பாண்டவரின் செவிகளையும் எட்டியுள்ளதை அவர் பேராயருக்கு அனுப்பிய மடலிலிருந்து தெரிகிறது. பாப்பாண்டவரின் ராஜதந்திரம் எப்படி ராஜபக்ச அரசைப் பாதிக்கும் என்பதை காலம்தான் உணர்த்தும். ஆனால் முஸ்லிம்களுக்கோ ஒரு பாப்பாண்டவரில்லை.
அவர்களுக்குள்ள ஒரேயொரு வெளி அரங்கு உலக முஸ்லிம் நாடுகளின் கூட்டுறவுத்தாபனம் மட்டுமே. அதனுடைய செல்வாக்கோ மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. அண்மையில் பல புலம்பெயர் முஸ்லிம்களின் அயரா முயற்சியால் இலங்கை அரசுக்கெதிராக ஒரு பிரேரணையை அந்தத் தாபனம் வெற்றியுடன் நிறைவேற்றியது. அதற்குமேல் அது ஏதாவது செய்யுமா என்பது நிச்சயமில்லை. இருந்தபோதும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை இலங்கைக்குள்ளேயேதான் தேடவேண்டியுள்ளது.
அதற்கு அடிப்படைத் தேவை புதிய ஒரு தலைமைத்துவம். அந்தத் தலைமைத்துவம் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அது பௌத்தமாகவோ கிறித்தவமாகவோ சைவமாகவோ முஸ்லிமாகவோ நாத்திகமாகவோ இருக்கலாம். அதன் வெளிவடிவமல்ல முக்கியம், உள்நோக்கமும் கொள்கைகளுமே. முஸ்லிம்கள் இந்நாட்டின் இன்றியமையாத ஒரு சமூகம், அச்சமூக மக்களுக்கு எல்லாப் பிரஜைகளுக்குமுள்ள உரிமைகளும் கடமைகளும் உண்டு, நாட்டின் ஜனநாயக வளர்ச்சிப் போராட்டத்தில் அவர்களின் பங்கைத் தவிர்க்க முடியாது என்ற மனப்பாங்கில் எந்த தலைமைத்துவம் உருவாகின்றதோ அதன் பின்னாலேதான் முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும். அவ்வாறான ஒரு தலைமைத்துவத்தை நாடே இன்று வேண்டி நிற்கின்றது.
அது உருவாகுவதற்கான சாயல்கள் தென்படுகின்றன. பல சிவில் அமைப்புகள் அதற்காகப் பாடுபடுகின்றன. அவற்றை இனங்கண்டு அணுகி முஸ்லிம் சமூகத்தை அவைபால் வழிப்படுத்தல் முஸ்லிம் ஆண் பெண் புத்தி ஜீவிகளின் இன்றைய கடமை. அதுவே இன்றுள்ள நிலைமையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி.
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளைப்பற்றி அலசவும் தீர்வுக்கு வழிதேடவும் இலங்கைக்கு வெளியே இருந்து இணையவழி மகாநாடுகள் நடைபெறும் இவ்வேளையில் இலங்கைக்குள்ளிருந்து எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதை என்னென்று விளக்குவதோ?-Vidivelli