இலங்கை முஸ்லிம்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்ற தந்திரோபாயத்தையே ஜனாதிபதியும் அவர் சார்ந்த கட்சியினரும் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர் என்பதையே அண்மைக் கால நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.
எவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்தியும் அதன் பின்னர் கட்டவிழ்க்கப்பட்ட இனவாதப் பிரசாரங்களையும் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார்களோ அதேபோன்று தற்போது நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போராட்டங்களிலிருந்தும் மக்களினதும் ஊடகங்களினதும் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் தினம் தினம் புதிய புதிய விவகாரங்கள் அவிழ்த்துவிடப்படுகின்றன.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியும் இந்தப் பின்னணிலேயே நிறுவப்பட்டுள்ளதாக பலரும் சந்தேகிக்கின்றனர். இந்த சட்ட விவகாரம் குறித்து ஏலவே நீதியமைச்சர் உரிய சட்டத்துறை நிபுணர்கள் மூலமாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அதற்குப் புறம்பாக பொருத்தமற்ற, சட்டத்தை மதிக்காத நபர் ஒருவரின் தலைமையில் செயலணி ஒன்றை நிறுவியிருப்பதானது ஜனாதிபதியின் உள்நோக்கத்தை தெளிவுபடுத்துவதாக உள்ளது.
இதற்கப்பால் விரைவில் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம், மாடறுப்புத் தடை போன்ற சிங்கள மக்களின் கவனத்தை ஈர்க்கின்ற அதேநேரம் முஸ்லிம்களைப் பாதிக்கின்ற பல்வேறு சூடான விவகாரங்கள் களத்துக்கு வரவுள்ளன. இவற்றின் மூலமாக நாட்டில் மேலும் இனவாதம் வளர்க்கப்பட்டு அதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் வாக்குகளைச் சம்பாதிக்கலாம் என்பதற்கான திட்டங்கள் எப்போதோ தீட்டப்பட்டுவிட்டன.
துரதிஷ்டவசமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து அரசியல், சிவில் மற்றும் மார்க்க ரீதியாக எமது தலைமைத்துவங்கள் பலவீனப்பட்டுள்ளமையானது இவ்வாறான சவால்களை துணிந்து எதிர்கொள்ள முடியாத நிலைக்கு சமூகத்தைத் தள்ளிவிட்டுள்ளது.
அமைச்சரவையில் கூட ஒரேயொரு முஸ்லிம் பிரதிநிதியே உள்ளார். அவர் ஜனாதிபதிக்கு மிக நெருக்கமானவராக இருந்தும் கூட சமூக விவகாரங்கள் தொடர்பில் அவரால் எதையும் சாதிக்க முடியாத நிலையே உள்ளது. தான் தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்டவர் என்ற வகையில் தன்னால் எல்லா விடயங்களிலும் எதிர்த்து நிற்க முடியாது என்ற காரணத்தை நீதியமைச்சர் அலி சப்ரி அடிக்கடி முன்வைத்து வருகிறார். ஞானசார தேரர் தலைமையிலான செயலணி விடயத்தில் கூட விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி தன்னை கலந்தோலோசிக்காமை தன்னை கவலைக்குள்ளாக்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். இதனால் தான் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சர் இவ்வாறு பதவியை இராஜினாமாச் செய்வது ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வினைத் தரப் போவதில்லை. முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்காது அதில் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு அவருக்கு உள்ளது. ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கையில் உள்ள சிபாரிசுகள் சட்டத்திருத்தங்களாக உள்வாங்கப்பட வேண்டும். மாறாக தனியார் சட்டம் இல்லாதொழிக்கப்படக் கூடாது.
தற்போதைய செயலணி பொருத்தமற்றது எனின் அதனை அரசாங்கத்திற்கும் அமைச்சரவைக்கும் உள்ளிருந்து எதிர்ப்பதே சமயோசிதமானதாகும். அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்த பிறகு அலி சப்ரியின் கருத்துக்கள் செவிமடுக்கப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
அமைச்சர் அலி சப்ரியின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் உள்ள போதிலும் அவர் சமூகத்தின் நலன்களுக்கு எதிராக தீர்மானங்களை எடுக்கமாட்டார் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது. அந்த வகையில் தற்போது அவர் எதிர்கொண்டுள்ள நெருக்கடியானது மிகவும் நிதானமாக கையாளப்பட வேண்டியதாகும். இனவாத சக்திகளை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரங்களையும் கைவிடுவது நல்லதல்ல. நீதியமைச்சர் என்ற வகையில் அவர் முன்னெடுத்துவரும் சட்டத்துறைசார்ந்த வேலைத்திட்டங்கள் முன்னேற்றகரமானவையாக நோக்கப்படுகின்றன. அவை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கிறார் என்பதும் அவர் இராணுவ பாணியில் நாட்டை வழிநடாத்த முற்படுகிறார் என்பதும் அவரது அண்மைக்கால தீர்மானங்களில் இருந்து நன்கு புலனாகிறது. முஸ்லிம்களின் விவகாரத்தில் மாத்திரமன்றி நாட்டின் தேசிய விவகாரங்களிலும் ஜனாதிபதி தவறான பாதையில் செல்கிறார் என்பதை அவருக்கு மிக நெருக்கமானவர் என்றவகையில் உணர்த்த வேண்டிய கடப்பாடு அலி சப்ரிக்கு உள்ளது. அதனை அவர் சரிவரச் செய்வார் என நம்புகிறோம்.- Vidivelli