(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஓட்டமாவடி மஜ்மா நகர் கொவிட் 19 மையவாடியின் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்வது மற்றும் மாற்றுக்காணியொன்றினை அடையாளம் காணுவது தொடர்பிலான இறுதிக்கலந்துரையாடலொன்று கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கும், இராணுவ தரப்பு கொவிட் செயலணி மற்றும் சுகாதார தரப்பினருக்குமிடையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக ஓட்டாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைதவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.
விடிவெள்ளிக்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடி 7 ஏக்கர் பரப்பளவினைக் கொண்டதாகும். அங்கு மேலும் 250 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முடியும். இங்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்பு மையவாடிக்கு மாற்றுக்காணி ஏற்பாடுகளை செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோரியிருக்கிறோம். அதற்கிணங்கவே கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை வரை 3182 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு நேற்று முன்தினம் 7 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன என்றும் அவர் கூறினார்.- Vidivelli