(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நான் குருமார்களை கெளரவிப்பவன். என்றாலும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணிக்கு சிறைத்தண்டனை அனுபவித்த தேரர் ஒருவர் நியமிக்கப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை எதிர்ப்பதற்காகவே தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்திலிருந்து (ONUR) எனது பதவியை இராஜினாமா செய்தேன் என அச்செயலகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் பேராசிரியர் ரிஸ்வி ஹஸன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பிரிந்து வாழக்கூடாது. அவர்கள் ஒற்றுமைப்பட்டு வாழவேண்டும். இதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்கவேண்டும். இதற்கு அரச தலைவர் ஒத்துழைக்க வேண்டும்.
ஆனால் இன்றைய சூழலில் ஜனாதிபதி செயலணியொன்று பொருத்தமற்ற ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான வாய்ப்பு இல்லாமற் போயுள்ளது. அதனால் எனது பணியினைத் தொடர்ந்தும் முன்னெடுக்க இயலாத நிலையில் உள்ளேன். இதனாலேயே எனது பதவியை இராஜினாமா செய்தேன்.
நீதியமைச்சர் அலிசப்ரி 2021 ஜனவரி மாதம் என்னை இப்பதவிக்கு நியமித்தார். ‘எனது இராஜினாமா கடிதத்தை நீதியமைச்சருக்கும், செயலகத்தின் தலைவருக்கும் அனுப்பிவைத்துள்ளேன்’ என்றார்.- Vidivelli