(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஓட்டமாவடி – மஜ்மா நகர் கொவிட் மையவாடியின் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருதல் தொடர்பான தீர்மானம் இன்று நடைபெறவுள்ள பிரதேசசபை அமர்வில் மேற்கொள்ளப்படும் என ஓட்டமாவடி கோறளைபற்று மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எம். நெளபர் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை மையவாடியின் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளவுள்ளதாகவும், அதனால் மையவாடிக்கான மாற்றுக்காணியொன்றினை இனங்கண்டு ஏற்பாடு செய்யுமாறும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை கொவிட் செயலணியையும், சுகாதார அமைச்சையும் மூன்று வாரங்களுக்கு முன்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடிதம் மூலம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுகாதார அமைச்சிடமிருந்து இதுவரை பதில் ஏதும் கிடைக்கப் பெறாத நிலையிலே இன்றைய பிரதேச சபை அமர்வில் இது தொடர்பான இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் மஜ்மாநகர் மையவாடியில் மேலும் சுமார் 300 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முடியும். தற்போது தினம் 4 அல்லது 5 ஜனாஸாக்களே நல்லடக்கத்துக்காக எடுத்துவரப்படுகின்றன. என்றாலும் மையவாடி செயற்பாடுகளை நிறுத்திக் கொள்வது தொடர்பில் பிரதேசசபை இறுதித்தீர்மானம் மேற்கொள்ளும் என்றார்.- Vidivelli