‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கையை நாட்டில் அமுல்படுத்தும் நோக்கில் விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 13 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட இக் குழுவில் நான்கு முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கையை முன்னிறுத்தியே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய பொது ஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதாவது நாட்டில் ஏலவே வழக்கில் உள்ள தனியார் சட்டங்களை ஒழிப்பதே இக் கொள்கையின் பிரதான நோக்கமாகும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டமே இது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
கடந்த பல வருடங்களாக இதனையே ஞானசார தேரரும் வலியுறுத்தி வருகிறார். அதனால்தான் கடும்போக்கு கொள்கை கொண்ட தேரரையே இந்த விசேட செயலணியின் தலைவராக ஜனாதிபதி நியமித்திருக்கிறார்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், நாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக இவ்வாறானதொரு செயலணியை ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமித்திருப்பதானது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
பொருட்களின் விலையேற்றம், நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்குத் தாரை வார்த்துள்ளமை, விவசாயிகள் எதிர்நோக்கும் உர நெருக்கடி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் போராட்டங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி, இனவாதத்தை தூண்டுகின்ற செயற்பாடாகவும் சிலர் இதனை நோக்குகின்றனர்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கை தேசத்தின் நலனை முன்னிறுத்தியதாக இருந்திருப்பின் நிச்சயமாக ஜனாதிபதி அரசியல் மற்றும் சட்ட விற்பன்னர்களைக் கொண்ட குழுவையே இதற்காக நியமித்திருப்பார். சகல மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த ஒருவரையே இச் செயலணியின் தலைவராக நியமித்திருப்பார். எனினும் தற்போது இந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் ஏற்கனவே நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர். நாட்டில் இன, மதவாதத்தை தூண்டி, அளுத்கம மற்றும் திகன உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்ப்பதற்கு காரணமாக இருந்தவர் என உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளால் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர். அதுமாத்திரமல்லாது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளிலும் குறித்த தேரர் செயலாளராக அங்கம் வகிக்கும் அமைப்பை தடை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஒருவரது தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இச் செயலணியின் தீர்மானங்கள் எவ்வாறு நீதியானதாக அமைய முடியும் என்ற கேள்வியை இன்று பெரும்பான்மை மக்களே எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே, இதே செயலணியில் நான்கு முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்கள் என்ன அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர் என இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. இது குறித்து முஸ்லிம் அரசியல், சிவில் தலைமைகளின் ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும் தெரியவில்லை. உலமா சபை கிளையொன்றின் தலைவர் இதன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என உலமா சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, தமிழ் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவில்லை. மாறாக, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தோரே இதில் உள்ளடங்கியுள்ளனர். இதுவும் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
இச் செயலணியில் உள்ளடங்கியுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் தமது சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல் கொடுப்பார்களா அல்லது அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காக சமூகத்தின் நலன்களை தாரைவார்க்கப் போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.- Vidivelli