(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என புத்தளம் மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. நேற்று இந்த தீர்மானம் அறிவிக்கப்படவிருந்த நிலையில், வழக்கு விசாரணை ஆரம்பத்திலேயே, அடுத்த தவணையில் தீர்மானத்தை அறிவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான வழக்கு விசாரணை நேற்று மீளவும் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் அதிபர் மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நேற்றும் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் இவ்வாறு ஆஜர் செய்யப்பட்டிருக்கவில்லை.
எனினும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான நளின் இந்ரதிஸ்ஸ, பர்மான் காசிம் ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன, சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவுடன் சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
வழக்கு பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்ட போது முதலில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸ, பிரதிவாதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக வாதங்களை முன் வைத்தார்.
‘நியாயமான வழக்கு விசாரணைகளை உறுதி செய்வதற்காக, பிரதிவாதிக்கு தன்பக்க நியாயங்களை முன் வைக்க தேவையான சான்றுகளை வழக்குத் தொடுநர் தரப்பிடமிருந்து நாம் எதிர்ப்பார்க்கிறோம். அவ்வாரு எமக்கு அவசியமான சான்று ஆவணங்களை நாம் பட்டியலிட்டு கையளித்திருந்த நிலையில், அவற்றில் சில கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் பல கிடைக்கவில்லை.
குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த சான்றுப் பட்டியலில் அடங்கியிருந்த புகைப்படத் தொகுப்பின் பிரதியையும் எமக்கு கையளிக்குமாறு கோருகின்றோம். அதே நேரம், சாட்சி கட்டளை சட்டத்தின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ள இலத்திரணியல் பொருட்கலை பரிசீலிக்க இடம், நேரம், திகதியை எமக்கு தறுமாரும் நாம் கோருகின்றோம்.’ என தெரிவித்தார். – Vidivelli