(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பி.எம்.அம்சா நாளை வெள்ளிக்கிழமை தனது தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பதற்காக சவூதி அரேபியா நோக்கி பயணமாகவுள்ளார்.
பல்வேறு நாடுகளின் தூதுவராகவும் பிரதி தூதுவராகவும் செயலாளராகவும் இராஜதந்திரியாகவும் கடமையாற்றிய பி.எம்.அம்சா சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடியைச் சேர்ந்த பி.எம்.எம்.அம்சா தனது ஆரம்பக்கல்வியை காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்திலும் உயர் கல்வியை காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையிலும் கற்றார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி கல்வி நிருவாக சேவையை முடித்து ஒரு கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தராக தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு, லண்டன் மற்றும் அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று அங்கு உயர் கற்கைநெறிகளை மேற் கொண்டார்.
1994 ஆம் ஆண்டு இலங்கை வெளிவிகார அமைச்சின் உதவிப் பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்டார் அங்கு கடமையாற்றிய பின்னர் 1995 முதல் 1999 ஆம் ஆண்டு வரை எகிப்த் நாட்டில் மூன்றாவது செயலாளராகவும் அதற்கு பிறகு இரண்டாவது செயலாளராகவும் கடமையாற்றியதுடன் இலங்கை திரும்பிய இவர் வெளிவிவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றினார்
2003 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் நாட்டில் முதல் செயலாளராகவும் கவுன்சிலராகவும் கடமையாற்றியுள்ளார். பின்னர் இலங்கை திரும்பிய இவர் இரண்டரை வருடங்கள் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஜுன் மாதம் வரை வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றினார்.
2006ம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டு அங்கு சென்று பணி புரிந்தார். இதை நிறைவு செய்த பின்னர் 2009 ஆம் ஆண்டு இலண்டனுக்கும் பேர்லின் நாட்டுக்கும் பிரதி தூதுவராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பெல்ஜியத்துக்கும் தூதுவராக நியமிக்கப்பட்டார். இங்கு இரண்டு வருடங்கள் கடமையாற்றியதன் பின்னர் இலங்கை வந்து பொருளாதாரத்துக்கு பொறுப்பான பணிப்பாளராக கடமை புரிந்தார். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரைக்கும் துருக்கி நாட்டு தூதுவராக கடமையாற்றினார். இந்தக் காலப்பகுதியில் உக்ரைன், டார்ஜியாவுக்குமான தூதுவராகவும் கடமையாற்றி இலங்கை திரும்பிய இவர் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து பொருளாதார பிரிவுக்கான மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்தார். இந்த நிலையில் தற்போது இவர் சவூதி அரேபியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli