“அல்லாஹ்வையே அவதூறாகப் பேசியவரின் தலைமையில் செயலணி நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை ஒன்று கூடி கலந்துரையாடவுள்ளது என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் விடிவெள்ளிக்கு இதுதொடர்பில் விளக்கமளிக்கையில் செயலணியின் உறுப்பினர்களில் ஒருவராக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் காலி கிளையின் தலைவர் மெலளவி எம்.இஸட்.மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை சிபாரிசின் கீழ் நியமிக்கப்படவில்லை. அவரது பதவிக்காலம் காலவதியாகியுள்ளது. கொவிட் நிலைமை காரணமாக காலி கிளைக்கு புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய முடியாதுள்ளது.
நிலைமை சீராகி புதிய நிர்வாக சபை நியமிக்கப்படும் வரை அவர் தற்காலிகமாக தலைமை பதவி வகிப்பார்.
ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தின் கீழேயே இச் செயலணியை நியமித்துள்ளார். என்றாலும் முஸ்லிம் சமூகமும் நடுநிலை வகிக்கும் ஏனைய சமூகத்தினரும் வியப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்றார்.
இதேவேளை ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரான உலமா சபையின் காலி கிளையின் தலைவர் மெளலவி எம்.இஸட்,மொஹமட்டை விடிவெள்ளி தொடர்பு கொண்டு வினவியது. இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் “ஒரே நாடு ஒரே சட்டம்’’ தொடர்பிலான எமது சிபாரிசுகள் பல கலந்துரையாடல்களின் பின்பே தீர்மானிக்கப்படும் 13 பேர் அடங்கிய செயலணியில் முஸ்லிம் சமூகம் சார்பில் நால்வர் அங்கம் பெற்றுள்ளோம். எமது சமூகத்துக்கு பாதிப்பில்லாமல் சிபாரிசுகள் முன்வைக்கப்படும்.
நாம் விரைவில் ஜனாதிபதியைச் சந்தித்துப்பேசுவோம். அடுத்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்பு சட்ட வரைபை நாம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்றார்.- Vidivelli