-
மெளலவி மொஹமட், விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப், கலீலுர்ரஹுமான், அஸீஸ் நிசார்தீன் உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் உள்ளடக்கம்
-
இரு முக்கிய பணிகள் ஒப்படைப்பு; இறுதி அறிக்கை 2022 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு
(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பிரதான தொனிப் பொருளாக தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் எண்ணக் கருவை நடை முறைப்படுத்தும் முகமாக ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேரை உள்ளடக்கியதாக இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் வெளியிட்டுள்ள அதி விஷேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, காலி உலமா சபையின் தலைவர் மௌலவி மொஹமட், விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கலீலுர்ரஹுமான் மற்றும் அரசியல் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அஸீஸ் நிசார்தீன் உள்ளிட்டோரும் குறித்த செயலணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி திகதியிடப்பட்ட 2251/30 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
செயலணியின் தலைமை கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள அதே நேரம் செயலணியின் செயலராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் கீழ் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஜனாதிபதி செயலணியில் உள்ளடங்குவோரின் பெயர் விபரங்கள் வருமாறு:
- கலகொடஅத்தே ஞானசார தேரர் ( தலைவர்)
- பேராசிரியர் தயானந்த பண்டார
- பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க
- பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன
- என். ஜி. சுஜீவ பண்டிதரத்ன
- சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன
- சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே
- எரந்த நவரத்ன
- பாணி வேவல
- மௌலவி மொஹமட் (காலி உலமா சபை)
- விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப்
- கலீலுர் ரஹ்மான்
- அஸீஸ் நிசார்தீன்
நாட்டின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நீதி மற்றும் அதனை நடைமுறைப்படுத்துதலும் சட்டத்தின் பாதுகாப்பும் சர்வசாதாரணமாக அமைய வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டும், இந்த விடயத்தில் இனம், மதம், குலம் அல்லது வேறேதேனும் காரணியொன்றினை மையப்படுத்தி எந்த ஒரு நபரும் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படல் அல்லது விசேட கவனத்துக்கு ஆளாகக்கூடாது எனும் அடிப்படை உரிமைகளின் கீழ் காட்டுப்பட்டுள்ளதால் ஒரே நடு ஒரே சட்டம் எனும் எண்னக் கருவை செயற்படுத்த துணிந்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் கூறப்ப்ட்டுள்ளது.
அத்துடன் அவ்வாறு இந்த எண்ணக் கருவை செயற்படுத்துவதன் ஊடாக அது தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளத்தக்க மனித விழுமியங்களை அடையும் பொறிமுறையாக அமையும் எனவும், அனைத்து பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதை மேலும் உறுதி செய்வதாகவும் அமையும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செயலணி உறுப்பினர்களின் தெரிவானது, அவர்களது விவேகம், திறமை மற்றும் பற்றுறுதி என்பவற்றின்மீது ஜனாதிபதிக்கு உள்ள மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.
இந்த செயலணிக்கு பிரதானமாக இரு பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது.
- இலங்கையினுள் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரித்தல்.
- நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கபபட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதல். ஆகியனவே அந்த பணிகளாகும். அதன்படி ஒப்படைக்கப்படும் பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையானவாறு விடயங்களை விசாரிப்பதற்கும் ஆலோசனைகளை வழங்குவதற்கும் இந்த வர்த்தமானி ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், செயலணியின் உறுப்பினர்கள் குறைந்தபட்சம் மாதத்துக்கொருமுறை ஜனாதிபதிக்கு அறிக்கையளிக்க வேண்டும் எனவும், இறுதி அறிக்கையை 2022 பெப்ரவரி மாதம் 28 ஆந் திகதி அல்லது அதற்குமுன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட, , இச்செயலணியினால் ஆலோசனை வழங்கக்கூடிய அல்லது சேவைகளை வழங்குவதற்காக உதவியினைக் கோரக்கூடிய சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் ஏனைய நபர்களும் குறித்த செயற்பாடு தொடர்பில் அவற்றைப் பின்பற்றி அததகைய ஆலோசனைகளை, தகவல்களை, உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறும், அல்லது தாமதங்களை ஏற்படுத்துவோர் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு உடன் கொண்டுவருமாறும் செயலணி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“கடமையை நிறைவேற்றுவோம்’
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கொள்கையை அமுல்படுத்துவதற்காக அது தொடர்பில் ஆராய்ந்து சட்டவரைபை மேற்கொள்ள எனது தலைமையில் ஜனாதிபதி செயலணி நியமித்துள்ளார். எமது செயலணியின் கடமைகள், செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு முதலில் தெளிவுபடுத்துவோம் என ஞானசார தேரர் தெரிவித்தார்.
செயலணியில் முஸ்லிம் சமூகம் சார்பில் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அனைவரும் ஒன்றுபட்டே கடமையினை நிறைவேற்றுவோம் என்றும் கூறினார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற சட்ட வரைபு அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்று தயாரிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். நீதியமைச்சினால் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைபுகள் மற்றும் திருத்தங்களை ஆராய்ந்து தேவையான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும். – Vidivelli