மஹிந்தவின் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க மந்திரிகளுக்கு கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டது. விலையை அதிகரித்தமையே மஹிந்தவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போனது என்று கூறியதன் மூலம் தான் குற்றவாளி என்பதையும் ஒப்புக்கொண்டதுடன், மஹிந்த ராஜபக் ஷவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக்கொடுத்துவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். தமது குற்றங்களை இப்போதாவது ஒப்புக்கொண்டு மைத்திரியும் மஹிந்தவும் நல்லாட்சிக்கு இடமளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
எந்த அரசாங்கமாக இருந்தாலும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். இவ்வாறான நிலையில் தான் நாட்டின் பிரதான நபர் அரசியலமைப்பையும் மக்கள் ஆணையையும் மீறி செயற்பட்டு வருகின்றார். அரசியலமைப்பு 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. அப்படியென்றால் மக்களுக்கு ஏற்றால் போன்ற ஓர் அரசியலமைப்பினை 19 தடவைகள் திருத்தி மிகவும் சாதகமான அரசியலமைப்பொன்று மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை மீறி செயற்பட முடியாது. அன்று 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதி ஒன்று உள்ளது. அதாவது, நிறைவேற்று அதிகாரத்தை 100 நாட்களில் இல்லாது செய்ய எனக்கு அதிகாரத்தை தாருங்கள் என கேட்டுக்கொண்டார். மாதுலுவாவே சோபித தேரர் காலமாகும் முன்னர் இருந்து இந்த நிலைப்பாடு இருந்தது. அதேபோல் ஜனாதிபதி தேர்தல் காலத்திலிருந்து நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக கூறினார். இப்போது கதையை மாற்றிக் கூறுகின்றார். இப்போது உடனடியாக கொண்டுவரப்பட்ட திருத்தமென ஜனாதிபதி பொய் கூறுகின்றார். 19 ஆவது திருத்தம் முழுமையாக நல்ல திருத்தமென நாமும் கூறவில்லை. ஆனால் ஆரோக்கியமான திருத்தம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவரை செய்யப்பட்ட திருத்தங்களில் 19ஆவது திருத்தம் ஆரோக்கியமான ஒன்று. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே அதிகமாக இருந்தனர். அதேபோல் பாராளுமன்றத்தில் 223 பேர் வாக்களித்து ஏகமனதாக நிறைவற்றினர். அவர்கள்தான் இன்று இதனை தவறெனக் கூறுகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் 19 ஆவது திருத்தம் மிகச்சிறந்த திருத்தம் எனவும் என்னால் செய்து முடிக்கப்பட்ட சிறந்த நடவடிக்கை இதுவெனக் கூறினார். நாமும் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக ஆதரிக்கின்றோம். இதில் தவறான பக்கம் என ஒன்றும் இல்லை. 19 ஆவது திருத்தத்துக்கு அமைய ஜனாதிபதியினால் நான்கரை ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. ஆனால் கடந்த வாரம் ஜனாதிபதி கூறியது என்ன? ஒரு வாரத்தில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதாகக் கூறினார். ஆனால் இன்று அந்த வாரம் முடிகின்றது. இப்போது நீதிமன்ற தீர்ப்பு வரையில் காத்திருக்க வேண்டுமெனக் கூறுகின்றார். ஏன் இவர் நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறிப் பேசுகின்றார். ஒரு கருத்தில் அவர் உறுதியாக இருப்பதில்லை என்பதை சகல சந்தர்ப்பத்திலும் அவர் நிரூபித்துவிட்டார்.
அதேபோல் இன்று சபாநாயகர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால் சபாநாயகர் மீது எந்த தவறும் இல்லை. நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடப்பட வேண்டும் என்பது ஜனாதிபதியின் தீர்மானம். மாறாக, சபாநாயகர் தீர்மானம் அல்ல. பொய்யான காரணிகளை கூறி இவர்கள் அனைவரும் நாட்டினை நாசமாக்கி வருகின்றனர். அன்று நீதிமன்றத்தை நாடுங்கள் என சவால் விடுத்தவர்கள் இன்று நீதிமன்றத் தீர்ப்பையே ஏற்றுகொள்ள மறுக்கின்றனர். பாராளுமன்றத்தில் தீர்க்க வேண்டிய விடயத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளனர் என மஹிந்த ராஜபக் ஷ கூறுகின்றார். இதனை தான் நாம் ஆரம்பத்தில் செய்தோம். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து அமைதியாக தீர்த்துக்கொள்ள முயற்சித்தோம். இன்று இவர்கள் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அச்சம் கொள்கின்றனர். மைத்திரி தொடர்ச்சியாக அரசியலமைப்பினை மீறிவிட்டார். மேலும் ஜனாதிபதி தமது தவறுகளை அவராகவே ஏற்றுக்கொண்டுவிட்டார். தாம் பெரும்பான்மையை நிரூபிக்கப் பணம் கொடுக்க முயற்சித்தமையை ஏற்றுக்கொண்டு விட்டார். அதேபோல் உறுப்பினர்கள் தமது பெறுமதியை கூட்டிக்கொண்டனர். அதனால்தான் விலைகொடுத்து வாங்க முடியவில்லை என்பதை அவராகவே ஒப்புக்கொண்டு விட்டார். ஆகவே மஹிந்த ராஜபக் ஷவிற்கு பெரும்பான்மை காட்ட முடியாது போனமை உறுப்பினர்கள் பெறுமதியை கூட்டியதனால் என்பதை கூறி மஹிந்த ராஜபக் ஷவையும் காட்டிக்கொடுத்துவிட்டார். இன்று இவர்களின் சூழ்ச்சி, ஊழல், குற்றங்கள் அவர்களின் வாக்குமூலமாக வெளிவந்துவிட்டன.
தமது அதிகார மோகமும் குற்றவாளிகளை காப்பாற்றவும் ஜனாதிபதியும் அவரது கூட்டணியும் அரசியலமைப்பினை பல தடவைகள் மீறிவிட்டனர். அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ நீதிமன்றத்தை நாடியமையே நாட்டின் குழப்பத்துக்கு காரணமெனக் கூறியமையும் மிகவும் மோசமான கருத்தாகும். அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தேர்தல் ஒன்றுதான் தீர்வு என இவர்கள் இன்று கூறுகின்றனர். அவ்வாறு தேர்தல் தான் தீர்வு என்றால் ஏன் ஒக்டோபர் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்காது மஹிந்த ராஜபக் ஷவிற்கு அரசாங்கத்தை ஜனாதிபதி கொடுத்தார்? அன்றே பாராளுமன்றம் கலைகின்றது தேர்தல் நடக்கும் என அறிவித்திருக்க வேண்டுமே? தேர்தல் தான் தீர்வென்றால் ஏன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அரசாங்கத்தை அமைக்க முயற்சித்தனர்? அப்போதே தேர்தலை அறிவித்திருக்கும் வர்த்தமானியை விடுத்திருக்கலாமே. இன்று செய்வதறியாத நிலையில் தேர்தல்தான் எனக்கூறி தப்பித்துகொள்ள முயற்சிக்கின்றனர். ஆகவே இவர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இப்போதாவது மைத்திரியும் -மஹிந்தவும் தமது தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும். மேலும் மேலும் நாட்டினை குழப்பாது திருத்தி தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும். தான் செய்த தவறை இப்போதாவது உணர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டும். இப்போது தீர்வை வழங்க வேண்டும் என ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli