200 கிலோ கிராம் தங்கம், 2,000 கிலோ அலுமினியம், மாணிக்கக் கற்கள் மூலம் உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதியை உருவாக்கும் பாகிஸ்தான் கலைஞர்கள்
உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதி ஒன்றை பாகிஸ்தான் கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர்.
புகழ்பெற்ற பாகிஸ்தானிய கலைஞரான ஷாஹித் ரஸ்ஸாம் தலைமையில் சுமார் 200 கலைஞர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உலகின் மிகப் பெரிய குர்ஆன் பிரதியைத் தயாரிக்கும் இந்தத் திட்டம் 2026 ஆம் ஆண்டு பூர்த்தியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள கலைகளுக்கான கவுன்சில் அலுவலகத்தில் இந்தப் பணி நடந்து வருகிறது. குர்ஆனின் எழுத்துக்கள் அலுமினியத்தில் வெட்டப்பட்டு, அதன் மேல் தங்க முலாம் பூசப்பட்டு பரந்த துணியில் பொறிக்கப்படுகிறது.
இந்த அரிய கலைப்படைப்பு 8.5 அடி நீளமும் 6.5 அடி அகலமும் கொண்டது. இந்த பாரிய குர்ஆன் மொத்தமாக 550 பக்கங்களைக் கொண்டிருக்கும். சுமார் 200 கிலோ கிராம் தங்கம், 2,000 கிலோ அலுமினியம், மற்றும் 600 ரோல் துணி என்பன மூலம் குர்ஆனிலுள்ள 77430 வார்த்தைகளை இது உள்ளடக்கியிருக்கும். அது மட்டுமன்றி, பல்வேறு வகையிலான விலைமதிப்பற்ற மாணிக்க கற்களும் இந்த குர்ஆனின் வடிவமைப்பை மெருகூட்ட பயன்படுத்தப்படவுள்ளன.
இத்தாலியில் தற்போது கையாளப்படும் விசேட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்தக் குர்ஆன் சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக அழியாதிருக்கும் என ரஸ்ஸாம் கூறுகிறார்.
இந்த திட்டத்திற்காக தினமும் சராசரியாக 10 மணித்தியாலங்கள் தாம் வேலை செய்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.
2017 இல் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட குர்ஆனே இதுவரை உலகின் மிகப் பெரிய குர்ஆன் என கருதப்பட்டு வந்தது. அது 6.5 நீளமும் மற்றும் 4.5 அடி அகலமும் கொண்டதாகும். இக் குர்ஆன் பிரதி தற்போது ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள குல் ஷெரீப் பள்ளிவாசலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக குர்ஆனின் பிரதிகள் மரம், காகிதம், விலங்குகளின் தோல்கள் மற்றும் துணி போன்ற பொருட்களைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், அலுமினியம் தகடுகளால் குர்ஆனின் ஒவ்வொரு எழுத்தும் வெட்டப்பட்டு தயாரிக்கப்படுவது 1,400 ஆண்டுகளுக்கும் மேலான இஸ்லாமிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என ரஸ்ஸான் குறிப்பிடுகிறார்.
“இந்த திட்டம் மிகவும் சவாலானது, ஏனெனில் இது குர்ஆனின் புனிதத்தோடு தொடர்புடையது, ஒரு சிறிய தவறு நடந்தாலும் அது அனைத்து முயற்சிகளையும் பாழாக்கிவிடும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ‘சூரா அர் ரஹ்மான்’ ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமாகியுள்ள ‘டுபாய் எக்ஸ்போ 2020’ கண்காட்சியில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கிய, அரபு மற்றும் ஈரானிய கலை வடிவமைப்புகளை ஆழமாகக் கற்ற பின்னர் தமது குழு இந்தக் குர்ஆன் பிரதியைத் தயாரிப்பதற்கென தங்கள் சொந்த வடிவமைப்பை உருவாக்கியதாக ரஸ்ஸாம் கூறினார்.
தனது சொந்த நிதியைப் பயன்படுத்தியே திட்டத்தை தொடங்கியதாக கூறும் கலைஞர் ஷாஹித் ரஸ்ஸாம், பாகிஸ்தான் அரசாங்கத்தினதோ அல்லது வேறு எந்த நிறுவனத்தினதோ நிதி உதவிகள் தமக்கு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். இருப்பினும், இந்தத்திட்டத்தில் பங்கேற்க பல வெளிநாட்டு அரசாங்கங்கள் தன்னை அணுகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
தனது இந்தப் பணி இஸ்லாமியர்களுக்காக மட்டுமன்றி இஸ்லாமிய கலை மற்றும் கலாசாரத்தின்பால் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை ஈர்க்கும் நோக்கம் கொண்டது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.- Vidivelli