மர்சூக் அகமட் லெவ்வை
“மாண்டவர் புகழ் பாடினால் வாழ்பவர் பிரச்சினை தீருமோ?” என்ற தலையங்கத்தில் கலாநிதி அமீர் அலி சென்ற 07.10.2021 விடிவெள்ளியில் எழுதிய கட்டுரைக்கு ஒரு பதில் கட்டுரையாக இதை எழுதலாம் என நினைக்கின்றேன்.
முஸ்லிம்களுக்குத் தனிக்கட்சி உருவாக வேண்டும் என்பதில் முன்னாள் காத்தான்குடி பட்டினாட்சி மன்றத் தலைவர் அஷ் ஷஹீத் அகமது லெப்பை உடைய பங்களிப்புகளை பற்றி கலாநிதி அமீர் அலி குறிப்பிட தவறிவிட்டார். 1970களின் பிற்பகுதியில் முஸ்லிம்களுக்குத் தனிக்கட்சி வேண்டும் என்ற ரீதியில் அஷ் ஷஹீத் அகமது லெவ்வை பல கட்டுரைகளை தினபதி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் எழுதினார். கட்டுரைகள் எழுதுவதோடு மாத்திரம் அவர் நின்றுவிடவில்லை. காத்தான்குடியிலே தான் அதற்கான விதையும் நடப்பட்டது. காத்தான்குடியில் அஹமட் லெவ்வையின் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது என்று முஸ்லிம் காங்கிரஸ் யாப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மறைந்த மாமனிதர் அஷ்ரபுக்கு ஒரு முன்னோடி தலைவராக அஷ் ஷஹீத் அகமது லெவ்வை திகழ்ந்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கர்த்தாக்களான ஹசன் அலி, சட்டத்தரணி கபூர் போன்றோர் “முஸ்லிம் காங்கிரஸை அமைப்பதற்கு நாங்கள் அஷ்ரபோடு சேர்ந்து எத்தனை முறை அஹமது லெவ்வையின் இளம்பிறை அச்சகத்திற்கு ஏறி இறங்கி இருக்கிறோம் தெரியுமா?” என்று இப்போதும் கேட்பார்கள். அஹமது லெவ்வையின் தம்பி சட்டத்தரணி அப்துல் ஜவாத் தான் “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்” என்ற பெயரை முன்மொழிந்தார். கலாநிதி அமீர் அலியின் தந்தை கவிஞர் அப்துல் காதர் லெவ்வையும் எனது தந்தை அகமது லெவ்வையும் நெருங்கிய நண்பர்கள். கவிஞர் அப்துல் காதர் லெவ்வையும் காத்தான்குடியைச் சேர்ந்தவர் தான். கவிஞர் அப்துல் காதர் லெவ்வை மரணித்தபின் அவரது “பாத்தும்மா சரிதை” என்ற ஆக்கத்தை புத்தகமாக அச்சிட்டு, வெளியிட்டும் வைத்தார் அஹமது லெவ்வை. ” பாத்தும்மா என்பது அமீரலியின் தாயாரின் பெயர். அஹமட் லெவ்வை மரணிப்பதற்கு முதல் இறுதியாக வெளியிட்ட நூல் தான் “பாத்தும்மா சரிதை”. முஸ்லிம் காங்கிரசின் வரலாறு எழுதும் போது காத்தான்குடியையும், அஹமது லெவ்வையையும், இளம் பிறை அச்சகத்தையும் விட்டுவிட்டு எழுதவே முடியாது.
வடகிழக்கிலே முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்தாலும் வடகிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள், அதாவது தென்னிலங்கையிலே வாழுகின்ற முஸ்லிம்கள் சிதறி வாழ்வதால் வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு உருவாகின்ற தலைமைத்துவத்தினால் சிதறி வாழும் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் முஸ்லிம் தனிக் கட்சிக்கு தான் எதிர்ப்பு வெளியிட்டதாக கலாநிதி அமீர் அலி தனது கட்டுரையிலே குறிப்பிடுகின்றார். இதற்கும் அகமது லெவ்வையிடம் தீர்வு இருந்தது. அதாவது மாமனிதர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை கட்சியாக பிரகடனப்படுத்தி, அதன்பின் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று கட்சியை வளர்ப்பதற்கான பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் அஹமது லெவ்வை அஷ்ரபிடம் “இக்கட்சியை வடகிழக்கிற்கு வெளியே எடுத்து செல்ல வேண்டாம். வடக்கிலேயே வைத்துக்கொள்ளுங்கள். காரணம் தமிழ் கூட்டமைப்பு தங்களது அரசியல் நடவடிக்கைகளை வடகிழக்கினுள் மாத்திரம் மட்டுப்படுத்தி இருப்பதால் முஸ்லிம்களும் தனது கட்சியை வடகிழக்கோடு நிறுத்திக் கொள்வதுதான் தென் இலங்கையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்” என்று கூறினார். இந்த விடயத்தில் அஷ்ரபும் அகமது லெவ்வையும் முரண்பட்டுக் கொண்டனர்.
அமீரலி தனது தந்தையான கவிஞர் அப்துல் காதர் லெவ்வைக்கு “முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி தேவையில்லை, இது முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்தானது” என்று கடிதம் எழுதியதாக குறிப்பிடுகின்றார். இவ்வாறான ஆபத்தான விடயத்தை தந்தைக்கு கடிதம் எழுதி, தந்தை மறுத்ததுடன் தனது கடமை முடிந்துவிட்டதாக அமீரலி கருதினாரா? இந்த விடயத்தை மக்கள் மத்தியில் மேடை போட்டு ஏன் எதிர்ப் பிரச்சாரம் செய்யவில்லை. அமீரலி தான் ஒரு கல்விமான், தீர்க்கதரிசி என்றால் ஆரம்பத்திலேயே அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கவேண்டும். இப்போது தனிக்கட்சி தொடங்கி, அதன் விளைவாக முஸ்லிம் சமூகம் அழிந்தபின் இப்போது கட்சி தொடங்கியது பிழை என்று கூறுவது ஒரு கல்விமான் தீர்க்கதரிசிக்குரிய பண்பில்லையே. அப்போது பொதுவெளியில் கூறாமல் இப்போது பொதுவெளியில் கூறுவதால் எந்தப் பிரயோசனமுமில்லை. அஹமட் லெவ்வை கிழக்கு மாகாண மக்களை ஒன்று திரட்டும் நோக்கத்தில் கிழக்கு மாகாணத்தில் அனைத்து முஸ்லிம் ஊரிலும் உள்ள பள்ளிவாசல்களை எல்லாம் அழைத்து காத்தான்குடி மெத்தை பள்ளியிலே மூன்று நாட்களாக மகாநாடு நடாத்தி கிழக்கிலங்கை முஸ்லிம் மஜ்லிஸை உருவாக்கினார்.
அஹ்மது லெவ்வை வடகிழக்கிற்கு வெளியே முஸ்லிம் காங்கிரசை கொண்டு செல்ல வேண்டாம் என ஏன் தனக்கு குறிப்பிட்டார் என்பதை பல வருடங்களுக்குப் பின்னர் தெளிவாக உணர்ந்த அஷ்ரப்தான் “தேசிய ஐக்கிய முன்னணி” என்ற கட்சியை புறாச் சின்னத்தில் உருவாக்கினார். அவருக்கு முஸ்லிம் காங்கிரஸை கைவிடும் நோக்கம் இருந்தது. தேசிய ஐக்கிய முன்னணியை தொடங்கிய உடனே அவர் மரணித்து விட்டதால் அதன் பின் வந்தவர்கள் அக்கட்சியை முன்னெடுத்துச் செல்லவில்லை.
பொதுவாகவே முஸ்லிம்களுக்கு அரசியல் தீர்வு எப்போது தேவைப்படும் என்றால், தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று கிடைக்கவிருக்கும் போது தான் முஸ்லிம்களும் தீர்வு பற்றி தீவிரமாக பேசுவார்கள். அதாவது தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கின்ற போது அதோடு சேர்த்து முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டும், இல்லாவிட்டால் முஸ்லிம்களுக்கு தீர்வு தேவையில்லை, அதாவது தீர்வு தேவைப்படும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு பிரச்சினை இல்லை என்ற மனப்பாங்கிலேயே தான் முஸ்லிம்கள் நடந்து கொள்வார்கள். முஸ்லிம்களின் இந்த மனப்பாண்மையை தமிழ் தரப்பு எள்ளி நகையாடியது. “நாங்கள் கஷ்டப்பட்டு அரிசி சேர்த்து, மசாலா சேர்த்து, பிரியாணி சமைக்கின்றோம். பிரியாணி சமைத்து முடிகின்ற நேரத்தில் நல்ல பிரியாணி வாசம் வரும். பிரியாணி வாசம் வந்ததும் முஸ்லிம்கள் அதனை மணந்துவிட்டு தாங்களும் புரியாணி சாப்பிடுவோம், எங்களுக்கும் பிரியாணியில் பங்கு தாருங்கள் என்று கேட்டு வருகின்றார்கள்” என முஸ்லிம்களைப் பார்த்து தமிழர் தரப்பு எள்ளி நகையாடியது.
அதாவது தாங்கள் ஆயுதம் ஏந்தி, பல்லாயிரம் உயிர்களை இழந்து, போராடி, கஷ்டப்பட்டு ஒரு தீர்வுக்கான நிலையை எட்டும்போது தான் முஸ்லிம்களும் விழித்துக்கொண்டு தங்களுக்கும் தீர்வு வேண்டும் என்கிறார்கள் என்பதுதான் தமிழர் தரப்பு விவாதமாக இருந்தது.
ஒரு முறை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமோடு நான் பேசிக் கொண்டிருக்கும் போது இந்த பிரியாணி கதையைச் சொன்னேன். அப்போது சிவாஜிலிங்கம் “தமிழர்களோடு சேர்ந்து முஸ்லிம்களும் போராடாத காரணத்தினால் முஸ்லிம்களுக்கு தீர்வு கிடைக்க தேவையில்லை என்ற விவாதம் பிழையானது. ஏனெனில் இந்தியர்கள் தங்களுடைய சுதந்திரத்திற்காக மிகவும் போராட்டம் நடத்தி, பல உயிர்களை இழந்து சுதந்திரத்தை பெற்றுக் கொண்டார்கள். அதேநேரம் எந்தப் போராட்டமும் நடத்தாமல் இலங்கையர்கள் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இந்தியர்கள் போராடியதால்தான் போராடாத இலங்கையர்களுக்கும் சுதந்திரம் கிடைத்தது. எனவே தமிழர்களின் போராட்டத்தினால் தீர்வு கிடைக்கும் போது முஸ்லிம்களுக்கும் அதனோடு சேர்ந்து தீர்வு கிடைப்பதில் எந்த தவறும் இல்லை” என்று சிவாஜிலிங்கம் அருமையான உதாரணத்தோடு என்னிடம் விளங்கப்படுத்தினார்.
முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தியதன் முக்கிய காரணமாக அஷ்ரப் முன்வைத்தது “இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான போது முஸ்லிம்கள் ஒரு தரப்பாகவே கருதப்படவில்லை. முஸ்லிம்களின் விருப்பு வெறுப்புகள் அதில் உள்வாங்கப்படவில்லை. இதற்குக் காரணம் முஸ்லிம்களுக்கு ஒரு தனிக்கட்சி இல்லாததே. இதனால் தான் முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தினேன்” என்றார்.
இலங்கை- இந்திய ஒப்பந்தமே வடகிழக்கிலே உள்ள தமிழர்களுக்கு ஒரு தீர்வாக வந்தது தான். வடகிழக்கு மக்களையே மையமாக வைத்து வந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முஸ்லிம் கட்சி தொடங்குவதற்கு காரணம் காட்டும் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை வடகிழக்கோடு மட்டுப் படுத்தாமல் வடகிழக்கிற்கு வெளியே கொண்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. வடகிழக்கிற்கு வெளியே பெரிய அளவில் முஸ்லிம் காங்கிரஸ் வளரவில்லை. வடகிழக்கிற்கு வெளியே மரச் சின்னத்தில் தேர்தல் கேட்டு வெற்றி பெற்ற ஒரே தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரம் தான். அதுவும் ஒருமுறை தான் ரவூப் ஹக்கீம் மரத்திலே கேட்டார். பின்னர் அவரும் யானைச் சின்னத்தில் தேர்தல் கேட்டுத்தான் வெற்றி பெற்று வருகிறார்.
தென்னிலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் சிதறி வாழும் முஸ்லிம்கள் இதனால் சில கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள். அப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டி போட்டு ஒரு சில ஆயிரம் வாக்குகளைப் பெறுவதால் அதுவரையில் முஸ்லிம்களிடம் இருந்து வந்த சில ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று வந்த சிங்களவர்கள் தோல்வியடைந்ததால் இதற்குக் காரணமான முஸ்லிம் காங்கிரஸின் மீது சிங்களவர்கள் ஆத்திரம் அடைகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு.
எனவே முஸ்லிம் மக்களின் இந்த இழிநிலைக்கு முஸ்லிம்களுக்கு தனிக் கட்சி உருவாகியது மாத்திரந்தான் காரணமா என்பது விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.- Vidivelli