எஸ்.என்.எம்.சுஹைல்
“இஸ்லாத்தில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்ற பிரிவுகள் கிடையாது. இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டம். அது முழுமையான ஒரு கல்வி முறையின் பெருமையையும் அவசியத்தையும் பேசுகிறது. இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை மார்க்கக் கல்வி கற்ற முஸ்லிம்கள் விஞ்ஞானம், வானியல், புவியியல், கணிதம், தொழில்நுட்பம், வைத்தியம், கட்டிடக்கலை, பொறியியல் போன்ற துறைகளுக்கு பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளனர்” என்று 2020 ஜூன் மாதமளவில் விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமான ‘மௌட்டீகக் கொள்கைகளால் இலங்கையில் முஸ்லிம் சமுதாயம் அழியும் ஆபத்து’ எனும் தனது கட்டுரையில் கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சமகால கல்விமானாக திகழ்ந்த அவர், எந்த விடயத்தையும் பொதுவெளியில் திறம்பட கூறும் துணிவுடையவர். சமூக சிந்தனை, தூரநோக்கு மற்றும் பொதுப் பார்வை என்பவற்றைக்கொண்டு இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கு அரும் சேவையாற்றிய கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் கடந்த வியாழக்கிழமை (2021.10.14) அன்று இறையடி சேர்ந்தார்.
சிலகாலம் நோய்வாய்ப்பற்றிருந்த அவர் கொழும்பு வைத்தியசாலையில் காலமானார். அன்னாரின் ஜனாஸா கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பேருவளை மொல்லியமலை ஹில்ரியா ஜும்ஆமாப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மர்ஹூம் கனி ஹாஜியாரின் புதல்வரான இவர் 1946 ஆம் ஆண்டு தர்கா நகரில் பிறந்தார். தனது ஆரம்பகல்வியை மாலிகாஹேன முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட அவர் உயர்தரம் படிக்க கொழும்பு சாஹிரா கல்லூரியில் இணைந்தார். 1963 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை தொடர்ந்தார். பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பையும் கலாநிதி பட்டத்தையும் பெற்றார்.
ஆசிரியர் பயிற்சி கலாசாலை
பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் பின்னர் ஆசிரியர் நியமனம் பெற்று மாவனெல்லை சாஹிரா கல்லூரியில் தனது சேவையை ஆரம்பித்ததுடன், அக்கரைப்பற்று மத்திய கல்லூரி உட்பட சில பாடசாலைகளில் பணியாற்றினார். மிக இளம் வயதில் தர்காநகர் முஸ்லிம் பெண்கள் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்தார்.
திறந்த பல்கலைக்கழகம்
அதற்கு பின்னர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பதில் பீடாதியாகவும் செயற்பட்டதுடன், அக் காலப்பகுதியிலேயே தனது கலாநிதி பட்டத்தையும் பூர்த்தி செய்தார். பின்னர் இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்வி பீடத்தின் பீடாதிபதியாகவும் நியமனம் பெற்றார். தொடர்ந்து பாலர் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின் இணைப்பாளராகவும் பதவி வகித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாவது உபவேந்தராக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் இரண்டு தவணை பதவிக் காலத்தை அங்கு பூர்த்தி செய்தார். இவர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக சேவையாற்றிய காலமே அப் பல்கலைக்கழகத்தின் பொற்காலம் என்றும் சொல்லப்படுகின்றது. நிர்வாக கட்டமைப்பில் ஊழல் மோசடிகள் இல்லாத நிலைமையை உருவாக்கி சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார்.
இந் நியமனத்திற்கு முன்னர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற போராட்டமொன்று குறித்த விசாரணை குழுவில் பேராசியர் ஹுஸைன் இஸ்மாயில் நியமிக்கப்பட்டிருந்ததுடன் மாணவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்னின்று உழைத்ததாக அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான சிராஜ் மஸ்ஹூர் தனது பதிவொன்றில் சுட்டிக் காட்டியிருந்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தை ஸ்தாபித்த ஹுஸைன் இஸ்மாயில். முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் குவைட் நாட்டுக்கான இலங்கை தூதுவராக இருந்த சந்தர்ப்பத்தில் குவைட் அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை பெரும் அபிவிருத்திக்கு இட்டுச் சென்றார்.
திட்ட அமுலாக்க தலைவராக இருந்து பல்கலைக்கழக அபிவிருத்தி மற்றும் சமூக வாழ்வாதார அபிவிருத்திக்காக குவைட் அரசாங்கத்தின் அரபு அபிவிருத்தி நிதியத்தின் பங்களிப்பையும் உலக வங்கியின் திட்டம், கனேடிய சர்வதேச அபிவிருத்தியின் உதவியையும் பெற்றுக்கொண்டார்.
அத்துடன், குவைட் அரசாங்கத்தின் அரபு அபிவிருத்தி நிதியத்தின் 2800 மில்லியன் ரூபா உதவியுடன் இணைந்த அபிவிருத்திக்கான 10 வருட திட்டத்தை முன்னெடுத்ததுடன், நோர்வே அரசாங்கத்தின் உதவியையும் பெற்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் முன்னின்று உழைத்தார்.
இவர், 25 வருட காலத்தில் 20,000 பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களை உருவாக்க பாடுபட்டுள்ளார். அத்தோடு பேராதனை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் 23 வருடங்கள் விரிவுரையாளராக கல்விப் புரட்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதுதவிர, மலேசியாவிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளராகவும் மலேஷிய விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் கௌரவப் பதவி வகித்ததுடன் பேராசிரியராகவும் சேவையாற்றியுள்ளார்.
முஸ்லிம் கல்வி மாநாடு
1963 ஆம் ஆண்டு கொழும்பு சாஹிரா கல்லூரியில் உயர்தரம் கல்வி பயிலும் போது இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் மரணிக்கும் வரை அவ்வமைப்புடன் இருந்து இந்நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் சேவையாற்றினார்.
முஸ்லிம் கல்வி மாநாடு ஒரு முழுமை பெற்ற அமைப்பாகும். சகல முஸ்லிம் எம்.பிமார்களும் அதில் அங்கம் பெற்றிருக்கின்றனர். 2005 ஆம் ஆண்டு அவ்வமைப்பின் தலைமை பொறுப்பை சுமந்த அவர் மரணிக்கும் வரை அப்பதவியில் நீடித்தார். மிகுந்த அர்ப்பணிப்பான சிந்தையுடன் இவரின் பணிகள் தொடர்ந்தன. மாதந் தவறாமல் முஸ்லிம் கல்வி மாநாட்டுக் கூட்டங்களை மிக கஷ்டத்துக்கு மத்தி யில் கூட்டி முஸ்லிம் பிரச்சினைகளை ஆராய்வதிலும், தீர்வு காண்பதிலும் அவர் நிறைவு கண்டார். பிரதி உபகாரம் எதிர்பாராமல் இலட்சி யப் போக்கில் தமது சேவைகளை செய்தார். கெளரவங்களை ஒருபோதும் அவர் எதிர்பார்க்கவில்லை.
கல்வி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போது முழுமூச்சாக தன்னை ஈடுபடுத்தி இலங்கை முஸ்லிம்களின் அபிலாசைகளை அதில் உட்புகுத்த பாடுபட்டார்.
அத்தோடு, கல்வி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் நீண்ட தூரம் பயணிப்பார் என அவரது நீண்ட நாள் நண்பர் பேராசிரியர் ஹுஸைமியா கூறினார். சமகாலத்தில் கல்வி மற்றும் இஸ்லாமிய கல்வி ஆய்வு விடயத்தில் கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் தவிர வேறு எவரையும் தன்னால் காண முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஆய்வுகள்
இலங்கை மத்ரஸாக்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வு நூலையும் பேருவளை முஸ்லிம்களின் வரலாற்று ஆய்வு நூலையும் தொகுத்துக் கொண்டிருந்த
வேளையில் கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் எம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார். இதுதவிர முஸ்லிம் சமூகத்தின் சமகால பிரச்சினைகள் , தேசிய விவகாரங்கள் தொடர்பாக விடிவெள்ளி மற்றும் தேசிய பத்திரிகைகளிலும் தொடர்ச்சியாக ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகளை எழுதி சமூக விழிப்புணர்வை தூண்டினார். அத்தோடு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், முஸ்லிம் சேவை ஊடாகவும் தனது சிந்தனைகளை வெளிப்படுத்தியதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை நேரடியாக சொல்லக் கூடிய ஹுஸைன் இஸ்மாயில் இயக்கம், கட்சிகள் சாராது நடுநிலையாக எழுத்துப் பணியை மேற்கொண்டிருக்கிறார். சில விடயங்களை தைரியமாக சொல்லி சமூக மட்டத்தில் மூடி மறைக்கப்பட்டுவரும் பிரச்சினைகளை பேசுபொருளாக்கி உரையாடல்களை தொடங்கி வைத்துள்ளார். அத்தோடு, அவ்விவகாரங்களுக்கு தீர்வை நோக்கி செல்வதற்கான ஆலோசனைகளையும் வழங்க அவர் மறக்க வில்லை. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக தைரியமாக குரல் எழுப்பிய அவர் எம் சமூகத்தின் பலவீனங்களையும் சுட்டிக்காட்ட பின்நிற்கவில்லை.
பொதுச் சேவை
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர் இரண்டாம் தடவையும் குறித்த ஆணைக்குழுவில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
நாட்டின் கல்விக் கொள்கையை தீர்மானிக்கும் அதிகாரமிக்க உயர் சபையான தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். தேசிய கல்வி நிறுவனத்தின் கல்வி விவகார சபையின் உறுப்பினராகவும் கடமையாற்றினார்.
இதற்கப்பால் இஷாஅதுல் இஸ்லாம் அனாதைகள் இல்லத்தின் செயலாளராகவும் தன்னை பொதுப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டார்.
இலங்கையில் அண்மைக்கால சூழ்நிலையில் முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக தூரநோக்குடன் சிந்தித்து செயலாற்றி சமூகத்தையும் சீர்த்திருத்தத்தின் பால் தூண்டிய ஒரு மாமேதை தான் கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில். கடந்த சில வருடங்களாக நாம் பெரும் கல்விமான்களையும் சமூக சிந்தனையாளர்களையும் இழந்துவரும் நிலையில் கலாநிதி ஹுஸைன் இஸ்மாயிலின் இழப்பானது ஈடு செய்ய முடியாதது என்றே கூற வேண்டும்.- Vidivelli