உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களை நான் பாதுகாத்தேன்
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் அடிப்படைவாத முஸ்லிம்கள் சிலரினால் மாத்திரம் நடத்தப்படவில்லை. இதன் பின்னணி பாரியதாகும். இந்தப் பாரிய பின்னணி என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக அவர்களைப் பயன்படுத்தியது யார் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். இந்த உண்மையை அறிந்து கொள்ளும் வரை நாங்கள் திருப்தியுற மாட்டோம்.’ என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார்.
இலங்கையின் நீதிக்கான ஒன்றியம் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தெளிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் உரையாற்றுகையிலே பேராயர் இவ்வாறு தெரிவித்தார். சூம் தொழிநுட்பமூடாக கடந்த 16 ஆம் திகதி இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.பேராயர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதற்கான எமது போராட்டத்துக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும். தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? உண்மையில் என்ன நடந்தது. யார் அதனைச் செய்தார்கள்? என்பதை அறிந்து கொள்ள உதவவேண்டும். தங்களது அரசியல் இலக்கை அடைந்து கொள்வதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டார். தான்பதவிக்கு வந்ததும் உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதாகவும் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார். பொது மக்களிடம் உறுதி மொழிகளை வழங்கினார்.
ஆனால் அவர் பதவிக்கு வந்து,ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதும் உடனடியாக அமைச்சர்களுடன் கலந்துரையாடி அரசியல் தீர்மானமொன்றினை எடுத்தார். அது சுயாதீனமான தீர்மானமல்ல,ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது, எவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகள் அவருக்குக் கிடைக்கப்பெற்று இரு தினங்களின் பின்பு ஜனாதிபதி என்னைத் தொடர்பு கொண்டார். ‘அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும், பரிந்துரைகளையும் அமுல்படுத்தமுடியாது. அரசாங்கம் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்தாத. அவ்வாறு அமுல்படுத்தினால் நான் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்துவிடுவேன்’என்று தெரிவித்தார்.
இன்று நேரம் வீணடிக்கப்படுகிறது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சந்தேகத்துக்கிடமான விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் உளவு முகவர்களை விசாரணை நடத்துமாறு கேட்கவேண்டுமென ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.ஆனால் இந்தப் பரிந்துரை இதுவரை அமுலாகவில்லை. தற்போதைய அரசாங்கமும் தலைமைத்துவமும் இவ்விடயத்தில் அக்கறையின்றி இருக்கிறது.
நாம் எவரையும் பழிவாங்கவிரும்பவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது, அதன்பின்பு இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான வன்முறைகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பிருந்தது. நாம் இதனைத் தடுத்தோம். முஸ்லிம்களைத் தாக்க வேண்டாம் பொறுமையாக இருங்கள் என்று எமது மக்களை வேண்டினேன். தொடர்ச்சியாக இந்த வேண்டுகோளை முன்வைத்து முஸ்லிம்களைப் பாதுகாத்தேன்.
தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதியாது நீதி வழங்கப்பட வேண்டும். தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்தரதாரிகள் இனம் காணப்படும் வரை எம்மால் திருப்தியடைய முடியாது’ என்று கூறினார்.- Vidivelli