கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் சில்லறை வியாபாரத்தின் முதுகெலும்பாக இருந்து, முதலில் தலையிலே பொருட்பொதி சுமந்து நடைநடையாய் திரிந்தும், பின்னர் தாவளமாட்டு வண்டிகளிலும் அதன்பின் சைக்கிள் வண்டிகளிலும் ஊரூராய் அலைந்தும், கோடை வெய்யிலிற் காய்ந்தும் மாரி மழையினில் நனைந்தும், பட்டணத்துப் பொருள்களை கிராமங்களுக்கும், கிராமங்களின் உற்பத்திகளைப் பட்டணங்களுக்குமாகக் கொண்டுசென்று விநியோகித்து, காலவோட்டத்தில் வீதியோரங்களிலே கடைகளைத் திறந்து, அந்தச் சில்லறை வியாபாரத்தின்மூலம் நாலு காசு சம்பாதித்துத் தமது குடும்பங்களைக் காப்பாற்றிய சுறுசுறுப்பும் விடாமுயற்சியுமுள்ள ஒரு முஸ்லிம் சமூகம், இன்று ஒடுங்கிக்கொண்டு, வியாபார வாய்ப்புகளையும் தொழில் வாய்ப்புகளையும் ஏன் மனித உரிமைகளையும்கூட இழந்து, சாணக்கியமும் தூரநோக்கும் இனப்பற்றும் இல்லாத முஸ்லிம் தலைவர்களை வைத்துக்கொண்டு நீதி கேட்டுத் தவிப்பதேன்? முழு நாடுமே முஸ்லிம்களுக்கு ஒரு திறந்த சிறைபோல் மாறியதேன்? அங்கே நடமாடும் பிணங்காளக அவர்கள் காணப்படுவதேன்? இவ்வினாக்களுக்கு விடை காண்பதாயின் ஒரு நூலே எழுதிவிடலாம். ஆனால் சில குறிப்புகளைமட்டும் இக்கட்டுரை வரைகின்றது.
பௌத்த சிங்களப் பேரினவாதம்
சுதந்திர இலங்கையின் வரலாற்றிலும் அரசியலிலும் மிகவும் துல்லியமாக வெளிப்படும் ஓர் அமிசம் அங்கே திட்டமிட்டு வளர்க்கப்பட்ட பௌத்த சிங்களப் பேரினவாதம். அதன் இலக்கு இலங்கையை ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடாக உருவாக்கி அங்கு வாழும் சிறுபான்மை இனங்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றுவதே. இந்த இலக்கைத்தான் மிகத்தெளிவாக 2019ஆம் ஆண்டு ஆனி மாதம் கண்டி நகரில் நடைபெற்ற ஒரு பகிரங்கக் கூட்டத்தில் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர், “இந்த நாடு சிங்கள மக்களுக்கே சொந்தமான ஒரு நாடு; அவர்களின் தயவிலேதான் ஏனையோர் வாழலாம்”, என்று கூறி உறுதிப்படுத்தினார். இன்றுவரை பெரும்பான்மை இனத்தவரின் எந்த ஓர் அரசியல்வாதியோ தலைவனோ அந்தக் கூற்றை நிராகரித்துப் பகிரங்கத்தில் பேசவில்லை, ஒருவரைத்தவிர. அவர்தான் காலஞ்சென்ற மங்கள சமரவீர. ஞானசாரரின் கூற்றை பகிரங்கமாகவே அவர் நிராகரித்து இந்த நாடு எல்லா இனங்களுக்கும் சொந்தம் என்று சொன்னதால் பௌத்த சங்கத்தினரிடையேயுள்ள சில பேரினவாத பிக்குகள் அவரை ஓர் இனத் துரோகியென்றே கூறி அவரை பௌத்த வைபவங்களிலிருந்து விலக்கிவைத்தனர்.
இலங்கையை ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடாக மாற்றும் திட்டம் 1949ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழரின் பிரஜாவுரிமையை நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுடன் ஆரம்பமானது. அந்த மசோதாவுக்கு இலங்கைத் தமிழரின் பிரதிநிதிகள் சிலரும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளும் ஆதரவாக வாக்களித்தமை இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் நடந்த ஓர் முரண்நகைச்சுவையான சம்பவமெனக் கூறலாம். ஏன்? அதை துரோகம் என்றே கூறலாம். பேரினவாதம் தமது இனங்களையும் வருங்காலத்தில் நசுக்கும் என்பதை அத்தலைவர்கள் அன்று உணரத்தவறியது அவர்களின் அறியாமையா அல்லது பெரும்பான்மைத் தலைமைத்துவத்தின் தயவை எதிர்பார்த்தா?
இந்தியத் தமிழர்களை அந்நியராக்கிய பேரினவாதம் 1950களிலிருந்து இலங்கைத் தமிழர்மேல் அதன் கவனத்தைத் திருப்பலாயிற்று. நாடாளுமன்னறச் சட்டங்கள், அப்பட்டமான அரசாங்க உத்தியோக ஒதுக்கல், பாரபட்சமான கல்வித் திட்டங்கள், இனக்கலவரங்கள் என்றவாறு பல்வேறு வகைகளில் அந்த இனத்தை நசுக்கப் பேரினவாதம் முற்பட்டது. தமிழினம் எதிர்க்கத் தொடங்கிற்று. சாத்வீகப் போராட்டமாக ஆரம்பித்த அதன் எதிர்ப்பு பின்னர் நாடாளுமன்ற பகிஷ்கரிப்பாக மாறி ஈற்றில் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து சுமார் கால் நூற்றாண்டுகாலமாக நீடித்தபின் 2009ல் அரசாங்கப் படைகளின் வெற்றியுடன் அப்போர் முடிவுக்கு வந்தது. ஆயினும் தமிழினத்தின் எதிர்ப்பு இன்னும் வேறுவழிகளிலே தொடர்கிறது. ஆண்ட பரம்பரை அடிமையாக வாழ விரும்புமா?
வரலாற்றின் புதியதோர் அத்தியாயம்
போர் முடிந்தவுடன் வெற்றிக்களிப்போடு நாட்டுமக்களை நோக்கி உரையாற்றிய அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இனிமேல் இலங்கையில் சிங்களவர்களோ தமிழர்களோ முஸ்லிம்களோ இருக்க மாட்டார்கள், இலங்கையர் மட்டுமே இருப்பரெனக் கூறியதும் அதனைக் கேட்டோர் ஒரு நீண்ட ஆறுதல் பெருமூச்சு விட்டனர். நாடு இனியாவது ஒரு புதுப்பாதைக்குத் திரும்புமெனவும் அங்கே அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்படுவர் எனவும் எண்ணி ஆனந்தமடைந்தனர். ஆனால் அவ்வுரையைக் கேட்ட பலமும் செல்வாக்கும் நிறைந்த ஒரு பேரினவாதக்குழு ஜனாதிபதியின் கூற்றை ஆமோதிக்கவில்லை. அவர்களின் முழுநோக்கமும் இலங்கையை ஒரு பூரண சிங்கள பௌத்த நாடாக மாற்றியமைப்பதே. அந்த நோக்கம் தமிழினத்தைத் தாழ்படிய வைப்பதால் மட்டும் நிறைவேறாது. அக்குழுவினரின் பார்வையில் இன்னுமொரு சிறுபான்மை இனத்தையும் முடியுமானால் நாட்டைவிட்டே துரத்தினாலன்றி அந்த இலட்சியம் நிறைவேறாதெனத் தெரிந்தது. அந்தச் சிறுபான்மையினரே முஸ்லிம்கள். பேரினவாதத்தின் பார்வை 2009லிருந்து முஸ்லிம்கள்மேல் திரும்பலாயிற்று. இது இலங்கையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையராகவும் மற்றைய இனங்களுடன் இணைந்தவர்களாகவும் வாழ்ந்து இந்த நாட்டின் மண்ணுடன் ஒட்டியுறவாடிய ஓர் இனம் போருக்குப் பின்னர் அந்நியர் என்ற அவலப்பெயருக்கு பேரினவாதிகளால் ஆளாக்கப்பட்டது முதற்தடவையல்ல. இந்தப் பெயரின் உண்மையான தோற்றம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்கால்வாசியில் எழுந்தது. இன்று தேசத்தலைவரெனப் போற்றப்பட்டுக் கொண்டாடப்படும் அநகாரிக தர்மபாலதான் அன்று முஸ்லிம்களை அந்நியர் என்றழைத்து, அவர்கள் நாட்டைவிட்டும் அரேபியாவுக்கு வெளியேற்றப்பட வேண்டுமெனவும் குரலெழுப்பி, 1915இல் இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக சிங்கள முஸ்லிம் இனக்கலவரமொன்றையும் தோற்றுவித்தார். அவரின் குரலின் எதிரொலியாகத்தான் இன்றைய பௌத்த பேரினவாத வழித்தோன்றல்களின் குரலும் கேட்கின்றது. 2019இல் வெடித்த அளுத்கம கலவரம் அந்த எதிரொலியின் விளைவே. அந்தக் கலவரத்தின் முக்கிய கர்த்தாவாக விளங்கியவர் காவியுடைத் துறவி ஞானசாரர் என்பதை உணரும்போது 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இஸ்லாமோபோபிய அத்தியாயத்தின் இரண்டாம் பாகுதி போருக்குப்பின் ஆரம்பித்துள்ளது என்பதை வலியறுத்தத் தேவையில்லை.
அளுத்கமயைத் தொடர்ந்து அம்பாறை, திகன, ஜிந்தோட்டை என்றவாறு அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் பௌத்த பேரனவாதிகளால் அவிழ்த்து விடப்பட்டன. பொது பல சேனாவுடன் சிங்ஹ லே, இராவண பலய, மஹசொன் பலகய போன்ற சில புதிய பேரினவாத அவதாரங்களும் இணைந்து இஸ்லாமோபோபியாவை வேகமாக வழிநடத்திச் சென்றனர். மகிந்த ராஜபக்ச இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகிய காலம் தொடக்கம் நல்லாட்சி அரசாங்கக் காலத்தினூடாக கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி காலம்வரை முஸ்லிம்களுக்கெதிரான அநீதிகளும் வன்முறைகளும் நீடித்தன. ஆட்சியாளர்களோ அனைத்தையும் கண்டும் காணாததுபோல் வாளாவிருந்தனர். சுதந்திர இலங்கையில் நடைபெற்ற எந்த ஒரு இனக்கலவரத்தின்பின்னரும் (1983 உட்பட) பெரும்பான்மை இனத்தின் எந்தவொரு கலகக்காரனையாவது அரசாங்கங்கள் நீதிக்குமுன் நிறுத்தியதுண்டா? இல்லவே இல்லையே. ஆதலால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்களை அரசு தண்டிக்குமென்று எப்படி எதிர்பார்க்கலாம்? எனினும் தமிழினத்தைப்போன்று முஸ்லிம்கள் எதிர்த்துப் போராடவில்லை. அரசாங்கத்தையே தமக்கு நீதி வழங்குமாறு தொடர்ந்து வேண்டினர். (தொடரும்) – Vidivelli