பௌத்த தேரர்களான ஆசிரியர்கள் என் மீது விசேட அக்கறை செலுத்தினார்கள்
சிங்களம், பௌத்த தர்மம் உட்பட 9 பாடங்களில் 'ஏ' சித்தி பெற்ற அஷ்ரா பானு
இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் குளியாபிட்டிய மத்திய கல்லூரியில் (சிங்கள பாடசாலை) கல்வி கற்று சிங்களம் மற்றும் பௌத்த தர்மம் உட்பட 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற மாணவி அஷ்ரா பானு ‘விடிவெள்ளி’க்கு வழங்கிய நேர்காணல்.
நேர்கண்டவர் :
தாவுஸ் எம்.அஸாம்
உங்களைப் பற்றி அறிமுகப்படுத்துங்கள்?
எனது முழுப் பெயர் மொஹமட் மிஸ்பர் அஷ்ரா பானு. எனது தந்தை ஒரு துணிக்கடை வைத்திருக்கிறார். தாய் பரீனா. குளியாப்பிடிய, பள்ளபிடிய எனது சொந்த ஊர்.
தரம் ஒன்று முதல் ஐந்து வரை குளியாப்பிடிய, ஹொலி ஏஞ்சல் மகளிர் கல்லூரியிலேயே எனது ஆரம்பக் கல்வியைப் பயின்றேன். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்லூரியிலே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து, குளியாப்பிடிய மத்திய கல்லூரிக்கு செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. தரம் 6 முதல் சாதாரண தரப் பரீட்சை எழுதும் வரையில் குளியாப்பிடிய மத்திய கல்லூரியிலேயே கல்வி பயின்றேன்.
உங்களுடைய பெற்றோர் உங்களை சிங்கள மொழி மூலமான பாடசாலையில் சேர்ப்பதற்கான விசேடமான காரணிகள் ஏதும் இருக்கிறதா?
எனது தாய் சிங்கள மொழி மூலமாகவே கல்வி கற்றுள்ளார். ஆகவே என்னை ஒரு தமிழ் மொழி மூலமான பாடசாலையில் சேர்த்தால் அவரால் எனது கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவ முடியாமல் போய்விடும் என்பதால், எனது பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவரால் தீர்க்க முடியாமல் போய்விடும் என்பதால் என்னையும் சிங்கள மொழிப் பாடசாலையில் சேர்த்தார். உண்மையில் அன்று எனது தாய் எடுத்த அந்த முடிவு அதற்கு எனது தந்தை வழங்கிய ஆதரவும், அதனால் தான் நான் இன்று இந் நிலையில் இருக்கிறேன். இன்றைய எனது இந்த வெற்றிக்கு அது ஒரு முக்கிய காரணியாக அமைந்தது என்றே குறிப்பிடலாம்.
பாடசாலைக் காலங்களில் நீங்கள் எதிர்நோக்கிய கல்வி ரீதியான சவால்கள் என்ன?
உண்மையில் நான் தரம் 1 முதல் 11 வரையில் இரண்டு பாடசாலைகளில் கல்வி பயின்றுள்ளேன். இந்த இரண்டு பாடசாலை அனுபவங்களிலும் பாரிய மாற்றங்கள் இருந்தன. ஹோலி ஏஞ்சல் கல்லூரியில் இருந்து புலமைப் பரிசில் சித்தியடைந்து குளியாப்பிடிய மத்திய கல்லூரிக்கு சென்றதும் ஒரு பாரிய சவாலுக்கு முகம் கொடுத்தேன். அதாவது ஹொலி ஏஞ்சல் கல்லூரியில் பௌத்த தர்மம், இஸ்லாம், இந்து சமயம் என்று எல்லா விருப்பத் தேர்வுப் பாடங்களும் இருந்தன. அங்கு ஐந்தாம் தரம் வரை இஸ்லாம் பாடத்தை நான் கற்றேன். அதற்கான ஆசிரியர்களும் அங்கு இருந்தார்கள். புலமைப் பரிசில் சித்தியடைந்து குளியாப்பிடிய மத்திய கல்லூரிக்கு சென்றதும் அங்கு இஸ்லாம் பாடம் இல்லை. அங்கு 10 இற்கும் குறைவான முஸ்லிம் மாணவர்கள் தான் கல்வி பயின்றனர். அதனால் அதற்கான ஆசிரியர்களும் அங்கு இருக்கவில்லை. எனவே சிங்களம், பௌத்த தர்மம் ஆகிய பாடங்களை தெரிவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்தப் பாடப் புத்தகங்கள் கையில் கிடைத்ததும் உண்மையில் நான் அழுதுவிட்டேன். ஏனென்றால் அந்தப் புத்தகம் அதில் உள்ள விடயங்கள் எனக்கு ஒரு புதிய விடயமாக இருந்தது. அவற்றைப் புரிந்து கொள்ளக்கூடிய பக்குவமும் எனக்கு அப்போது இருக்கவில்லை. உண்மையில் சிறுவயதில் இருந்து கல்வியில் நான் அதிகம் திறமை காட்டி வந்தேன். எல்லாப் பாடங்களிலும் அதிகமான புள்ளிகளைப் பெற்று எப்போதும் முன்னணியில் தான் இருப்பேன்.
இஸ்லாம் என்றால், அது எனது மார்க்கம் எனக்கு பரிச்சயமானது. அதில் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும் என்பது எனது ஆழ்மனதின் நம்பிக்கை. திடீரென்று இவ்வாறு ஒரு புதிய பாடம். வேறு ஒரு மதம் சார்ந்த பாடம். தெரியாத ஒரு விடயம். அதில் சிறந்த பெறுபேறுகளைப் பெறமுடியாமல் போனால் நான் தோல்வியடைவேன் என்ற அச்சம் உள்ளத்தில் ஏற்பட்டது. அதை நினைத்து ஆரம்பத்தில் அதிகமாக அழுததும் உண்டு. அப்போது தான் மனதில் ஒரு உறுதியை எடுத்தேன். எல்லாப் பாடங்களிலும் சிறந்த புள்ளிகளை எடுக்கும் நான் இப்பாடத்திலும் சிறந்த புள்ளிகளை எடுப்பேன் என்று உள்ளத்தில் உறுதியான நம்பிக்கையை ஆழமாகப் பதித்துக் கொண்டேன். அன்றிலிருந்து உயர்தரம் வரை பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தை உள்ளத்தில் வைத்துக் கொண்டு படித்தேன். மாஷா அல்லாஹ் தரம் 6 இல் இருந்து சாதாரணதரப் பரீட்சை எழுதும் வரை எல்லாப் பரீட்சையிலும் 90இற்கு மேற்பட்ட புள்ளிகளையே பெற்று வந்தேன். சாதாரண தரப் பரீட்சையிலும் சிறப்பான சித்தியைப் பெற்றேன். அத்தோடு முடியும் என்று நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பாடத்தையும் நான் ஆழமாக கற்றுக் கொண்டேன்.
ஒரு பாடசாலையில் கல்வி பயிலும் போது அந்தப் பாடசாலை கலாசாரத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும். நீங்கள் ஒரு முஸ்லிம் மாணவி, சிங்களப் பாடசாலையில் கல்வி கற்கும் போது உங்களது உடை மற்றும் தனித்துவத்துக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்பட்டதுண்டா?
உண்மையில் முக்கியமாக சொல்ல வேண்டிய ஒரு விடயம் இது. ஒரு சில சிங்களப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்குக் கூட பர்தா அணிவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை. ஆனால் எனது பாடசாலையில் அவ்வாறான விடயங்கள் இருக்கவில்லை. எனக்கு எனது மார்க்க வரையறைகளுக்கு உட்பட்டு பர்தா அணிந்து பாடசாலைக்கு செல்வதற்கான சந்தர்ப்பத்தை பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகம் எனக்கு முழுமையான அனுமதியைத் தந்தார்கள். அதற்காக எனது பாடசாலை அதிபர், ஆசியர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அது மாத்திரமின்றி Red Cross Society, St.John Ambulance Service ஆகியவற்றிலும் நான் இருந்தேன். அவற்றிலும் எனது மார்க்க வரையறைகளுக்கு பாதிப்பில்லாமல் உடை அணிவதற்கு எனக்கு அனுமதி தந்திருந்தார்கள். உண்மையில் நான் கல்வி கற்ற இரு பாடசாலைகளிலும் எனக்கு எனது மார்க்க வரையறைகளைப் பாதிக்கும் எந்த சம்பவங்களும் ஏற்படவில்லை. எந்த ஒரு ஆசிரியரும் ஒருபோதும் என்னை ஒரு முஸ்லிம் மாணவி என்ற வேறுபாடுகளுடன் பார்க்கவில்லை. என்னை ஆதரித்து என்னோடு அன்பாகவே நடந்து கொண்டார்கள். அதிலும் முக்கியமாக குறிப்பிட வேண்டும் எனக்கு பௌத்த தர்ம பாடத்தை எடுத்த லீல்கொலவெவ தேரர், சுகதாநந்த தேரர், சுகததாஸ தேரர் ஆகியோரும் என்னோடு எப்போதும் அன்பாகவே நடந்து கொண்டார்கள். நான் ஒரு முஸ்லிம் மாணவி என்பதால் என் மீது விஷேட கவனம் எடுத்து, பௌத்த தர்மத்தில் உள்ள விடயங்கள் எனக்கு புதிது என்பதால் அவை எனக்கு புரிகிறதா என்று அடிக்கடி என்னை விசேடமாக கவனம் செலுத்தி கற்பதற்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். உண்மையில் அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
அண்மையில் இன ரீதியான பல பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுத்தோம். உண்மையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் பயத்துடன் தான் பாடசாலைக்கு சென்றேன். ஆனால் நான் நினைத்தது போன்றிருக்கவில்லை. ஆசிரியர்களும் சரி, மாணவர்களும் சரி என்னோடு வழமை போன்று அன்பாகவே நடந்து கொண்டார்கள். யாரும் எனது மனம் நோகும் விதத்திலோ அல்லது அணுகுமுறையிலோ எந்த மாறுபாடும் காட்டவில்லை. உண்மையில் அதை நினைத்து அன்று நான் பெருமையடைந்தேன். அந்த ஒற்றுமை சகோதரத்துவம் என்றும், எப்போதும், எல்லா இடத்திலும், எல்லோர் மனதிலும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.- Vidivelli