பங்களாதேஷில் கொவிட-19 தொற்று விடுமுறையில் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு திருமணம்
பாடசாலைக் கல்வியையும் கைவிட்டனர்
எம்.ஐ.அப்துல் நஸார்
பங்களாதேஷில் கொவிட்-19 தொற்று காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீளத் திறக்ப்பட்டபோது அங்கு கல்வி கற்ற சிறுமிகளின் ஆசனங்கள் வெறுமையாகக் காணப்பட்டன.
பாடசாலைகள் மூடப்பட்டிருந்த கடந்த 18 மாதங்களில் இப்பகுதியில் உள்ள ஏராளமான பாடசாலை மாணவிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
பங்களாதேஷில் திருமண வயது பெண்களுக்கு 18, ஆண்களுக்கு 21 ஆகும், எனினும் கொவிட்-19 பரவலுக்கு முன்னர், 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் மதிப்பீட்டின்படி 15.5 சதவீதத்திற்கும் அதிகமான 15 வயதிற்குட்பட்ட பங்களாதேஷ் சிறுமிகள் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏராளமான மாணவிகள் பாடசாலைக்கு சமூகமளிக்காததைக் கண்டு ஆசிரியர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.
கொவிட்-19 தொற்று பரவல் காலத்தின்போது பங்களாதேஷில் நடைபெற்ற சிறுபராய திருமணங்கள் தொடர்பான துல்லியமான தகவல்கள் இல்லாதிருந்தாலும், அங்கு வறுமையான சமூகங்களில் காணப்படும் பொருளாதார மற்றும் சமூக இறுக்கங்கள், முடக்கநிலை அதிகரித்தமையினால் சிறுபராய திருமணங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்ததாக நம்பப்படுகிறது.
பங்களாதேஷ் தலைநகரிலிருந்து சுமார் 300 கி.மீற்றர் தொலைவிலுள்ள குல்னா மாவட்டத்தில், அதிகாரிகள் இது தொடர்பில் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
‘கடந்த மாதம் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டபோது பல மாணவிகள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்பதை நாம் அவதானித்தோம். எமது பாடசாலை அதிகாரிகள் அவ்வாறான மாணவிகளின் பாதுகாவலர்களைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் பல மாணவிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இந்த மாவட்டத்தில் 3,000 க்கும் மேற்பட்ட சிறுபராய திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்த மாவட்ட அதிகாரியொருவர், உண்மையான எண்ணிக்கை அதனை விட மிக அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
‘பொருளாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகள் காரணமாக பெற்றோர் தமது மகள்களை திருமணம் செய்து வைக்க வழிவகுத்துள்ளன. எமது ஆசிரியர்கள் பாதுகாவலர்களுடன் தொடர்புகளைப் பேணுகிறார்கள், அச் சிறுமிகளை பாடசாலைகளுக்குச் செல்ல அனுமதிப்பதற்கு இணங்கச் செய்து வருகின்றனர்’ எனவும் அவர் தெரிவித்தார்.
குல்னாவைச் சேர்ந்த அபுஸ் ஷாஹித் என்ற தந்தை, தனது ஒன்பதாம் வகுப்பு மகளை ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார், ஏனெனில் அவரது வருமானம் முழுமையாக இழக்கப்பட்டுள்ளதால் தனக்கு வேறு வழி தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
‘அதே நேரத்தில், காலவரையறையற்று பாடசாலைகள் மூடப்பட்டன, என் மகள் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை,’ என அவர் மேலும் தெரிவித்தார்.
குல்னாவைச் சேர்ந்த அஸ்மா பேகம், தனது 15 வயது மகளை விரும்பத்தகாத சம்பவங்கள் மற்றும் கிண்டல் செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றுவதற்காக திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.
‘நான் தீர்மானமொன்றை எடுக்க வேண்டியிருந்தது. அது தவிர, எங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை தரப்பிலிலிருந்து திருமண கோரிக்கையொன்று வந்தது அதற்கு நாம் சம்மதம் தெரிவித்தோம். அவர்கள் தங்களது மருமகளை தொடர்ந்து படிக்க அனுமதிக்கிறார்களா அல்லது இல்லையா என்பது மாப்பிள்ளை குடும்பத்தினரின் முடிவைப் பொறுத்தது’ என பேகம் மேலும் தெரிவித்தார்.
பங்களாதேஷில் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டதன் மூலம் சிறுபராயத் திருமணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
கொவிட் -19 தொற்றுநோய்க்கு முன்னர், உலகில் ஒவ்வொரு இரண்டு வினாடிகளிலும் சிறுமியொருவர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படுவதாக தரவுகள் காட்டுகின்றன. வைரஸ் பரவல் மேலும் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த தசாப்தத்தில் 13 மில்லியன் சிறுபராயத் திருமணங்கள் இடம் பெறும் என ஐ.நா கணித்துள்ளது.- Vidivelli