ஷிபா
பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வை.கே.எம்.லாஹி திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக தனது 63 ஆம் வயதில் இம்மாதம் 7ஆம் திகதி இரவு காலமானார். அன்னாரின் ஜனாஸா மறுநாள் வெள்ளிக்கிழமை காலை கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
டாக்டர் லாஹி 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி பிறந்தார். உமர் லெப்பை முஹம்மது யூசுப் என்ற அவரது தகப்பனார் ஆயுர்வேத மற்றும் யூனானி மருத்துவத்தில் நான்காவது தலைமுறையாக இருந்து வந்தார். இவர் கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கணை ஹுரிமலுவையைப் பிறப்பிடமாக கொண்டவர்.
டாக்டர் லாஹியின் தந்தையாரான வைத்தியர் யூசுப் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு 12இல் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் 1977ஆம் ஆண்டு காலமானார். அப்பொழுது தன் அருகில் இருந்த மருத்துவ கல்லூரியின் அனுமதிக்காக காத்திருந்த மகன் லாஹியின் கரங்களை பற்றியவாறு “நீங்கள் இருதய நோய் மருத்துவரொருவராக வந்து என் போன்ற நோயாளர்களின் உயிரைக் காக்க உதவ வேண்டும்” எனக் கூறியிருந்தார். அதனை கருத்தில் கொண்டு டாக்டர் லாஹி பின்னாளில் இருதய மருத்துவ நிபுணராக வருவதற்கு முயற்சித்திருக்கிறார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற டாக்டர் லாஹி, பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் MBBS மருத்துவ பட்டத்தைப் பெற்றார்.அதை தொடர்ந்து அவர் நாட்டில் காலி, கராப்பிட்டி மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் பணியாற்றினார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்த பொழுது, கொழும்பு பல்கலைக்கழக பட்டப் பின்படிப்பு நிலையத்தில் MS உயர் பட்டதாரியானார். அதை தொடர்ந்து இங்கிலாந்தில் மத்திய லண்டனிலுள்ள மிடில்செக்ஸ் வைத்தியசாலையில் இருதய அறுவைச் சிகிச்சை தொடர்பான மேற்கல்வியை கற்று 1992ஆம் ஆண்டிலிருந்து 1995ஆம் ஆண்டு வரை அங்கு இருதய நோய் மருத்துவ நிபுணரொருவராக (FRCS) சிறப்புச் சித்தி பெற்று, நாடு திரும்பி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அந்தப் பிரிவில் பிரதான நிபுணராகப் பணியாற்றினார். அதிலிருந்து இது வரை 23,500 இற்கும் மேற்பட்ட சிகிச்சைகளை அவர் வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பின்னர் எட்டு வருடங்கள் பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே (லேடி ரிட்ஜ்வே) சிறுவர் வைத்தியசாலையிலும் ஓய்வு பெறும் வரை பணியாற்றி ஆயிரக்கணக்கான குழந்தைகள், சிறுவர்கள் உட்பட இளம் வயதினருக்கும்,வயது வந்தவர்களுக்கும் இருதய அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தார்.
அவர் கொழும்பில் உள்ள பிரபல முன்னணி தனியார் வைத்தியாசலைகளிலும் இருதய நோய் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி இருக்கின்றார். அரசாங்க வைத்தியசாலைகளைப் போன்றே தனியார் வைத்தியசாலைகளிலும் ஆயிரக்கணக்கான சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.
அன்னாரின் மனைவி பாத்திமா மின்னா பாரி. மகன் ஹுஸைன் லாஹி, அவுஸ்திரேலியா, சிட்னி நகரில் மயக்கவியல் மருத்துவ நிபுணராக உள்ளார். மகள் சப்ரீனா லாஹி, பிரித்தானியாவில் இரசாயனவியல் முத்துமானி பட்டம் பெற்றவர். மருமகன் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ்.
அரச சேவையிலிருந்து 62 ஆவது வயதில் ஓய்வுபெற்ற பின்னர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், வைத்தியசாலையிலும் மரணிக்கும் வரை பணியாற்றினார்.
அறுவைச் சிகிச்சைகளின் போது அவரது கைவிரல்கள் வெகு லாவகமாகச் செயற்படுவதால் “அற்புத விரல்கள்” (Miracle Fingers) என மருத்துவர்கள் மத்தியில் அவர் அழைக்கப்பட்டார்.
டாக்டர் லாஹி சத்திர சிகிச்சை மேற்கொண்ட பலர் இன்று அவரது மறைவு குறித்து தமது கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர். அவரது மருத்துவத் திறமையை மெச்சுகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெற்ற சிலர் ‘விடிவெள்ளி’யிடம் டாக்டர் லாஹி தொடர்பான தமது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் லாஹியை இறைவன் அழைத்துக்கொண்டுள்ளான் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் உறைந்து போனேன் என்கிறார் காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.
“2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென கண்டுபிடிக்கப்பட்ட எனது நான்கு இருதயக் குழாய் அடைப்புக்களை தனது திறமையால் மார்புக் கூட்டறுப்பு செய்து, இறையருளால் நான் இன்னும் உயிர்வாழ வழிகோலிய உன்னத வைத்திய நிபுணர் லாஹி. ஒரு துளியேனும் வேற்றார் இரத்தம் வேண்டாது, அந்த அறுவை சிகிச்சையை தான் மேற்கொண்டதாகக் கூறியிருந்தார்.
எந்தவித விகற்பங்களும் ஏற்படாதவாறு நான் மிக விரைவில் பூரண சுகமடைந்தேன். அடைப்புக்கள் பற்றி அறிந்ததும் அதனை அவரொரு பொருட்டாகக் கொள்ளாது சத்திர சிகிச்சையை நடத்தி முடித்தார்.
இந்த நிகழ்வை நான் எழுதிய எனது நூலான திரு நபி காவியத்தில் அவரது பெயரோடு பதிவு செய்துள்ளேன்” என்கிறார் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.
அறுவை சிகிச்சையின் பின் இதயத்தில் இதுவரை ஒரு சிறு நோவு கூட ஏற்படவில்லை எனக் கூறுகிறார் பொலன்னறுவை, 63 வயதான தம்பாளை ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எல்.புகாரிதீன்
உயர்ந்த உள்ளம் படைத்த, மருத்துவ அனுபவம் நிறைய வாய்க்கப் பெற்ற ஒரு மகானை இழந்திருக்கிறோம். இதய நோய்களுக்கு அறுவை சிகிச்சை அளிப்பதில் வல்லவரான டாக்டர் லாஹி இன, மத, மொழி பேதமின்றி ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி எல்லா நோயாளர்களுக்கும் சமமாக சிகிச்சை அளித்தவர்.
எனக்கு இரண்டு முறை மாரடைப்புகள் ஏற்பட்ட பின்னர், நான் டாக்டர் லாஹியைச் சந்தித்தேன். அவரது ஆலோசனையின் பேரில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவரால், எனக்கு 2012 ஜனவரி 22ஆம் திகதி பைபாஸ் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து 9 வருடங்கள் கடந்த பின்னரும் கூட இறைவனின் அருளாலும் டாக்டர் லாஹியின் செயற்றிறன் மிக்க அறுவை சிகிச்சையின் பயனாகவும் இதுவரை எனது இதயத்தில் ஒரு சிறு நோவு கூட ஏற்படவில்லை. மேலும் எனது ஊரைச் சேர்ந்த ஐவருக்கு அவர் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்” என்றார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் மஜீது அப்துல் லத்தீப் (வயது 58) டாக்கடர் லாஹி உடனான தனது அனுபவத்தை பகிரும் போது, சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் என் இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அறுவைச் சிகிச்சை செய்வதற்காக வைத்தியர் லாஹியைச் சந்தித்தேன்.
அவர் என்னை பரிசோதித்த விதம், என்னோடு பண்பாக பேசிய அந்த வார்த்தைகள், அந்த நேரத்தில் என்னுள் இருந்த மனப் பயம் மற்றும் எனக்குள் இருந்த பாதி வருத்தம் குறைந்த மாதிரியும் உணர்ந்தேன். அந்த அளவுக்கு மிகவும் பண்பாகவும் மன தைரியத்தை ஊட்டும் அளவுக்கும் பணிவாகவும் பேசினார்.
என் இதயத்தில் ஏற்பட்ட மூன்று அடைப்புகளை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கினார். சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் எனக்கு அந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எனக்கு வயது 45. அதன் பின்னர் நான் 6 மாதத்திற்கு ஒரு முறை டாக்டர் லாஹியைசசந்தித்து ஆலோசனை பெற்றுக் கொண்டுதான் வந்தேன்.
கொரோனா அலை ஏற்படுவதற்கு முன்னர் நான் அவரை இறுதியாக சந்தித்தேன். அவர் சொன்ன பிரகாரம்தான் தற்போதும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறேன். மாகாணம் விட்டு மாகாணம் செல்லக்கூடிய தடையை எடுத்ததும் அவரை சந்திக்கலாம் என்ற ஆவலோடும் இருந்தேன். அவருடைய திடீர் மறைவைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்து போனேன். அவருடைய பிரிவு வைத்தியத் துறைக்கு ஏற்பட்ட ஒரு மாபெரும் இழப்பாகத்தான் நான் பார்க்கிறேன். சிறந்த மனிதரை, ஒரு மிகச் சிறந்த வைத்தியரை இந்த நாடு இழந்திருக்கின்றது” என்றார்.
2018 ஆம் ஆண்டில் அவருடைய தாயார் சடுதியாக மயக்கமடைந்து, உயிரிழந்த போது அது பற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்ட சமயத்தில் அவர் அறுவை சிகிச்சையொன்றை ஆரம்பித்திருந்தார். உடனடியாக தனது தங்கையின் கணவரான டாக்டர் ஹபீஸுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து தான் தற்சமயம் அறுவைச் சிகிச்சை ஒன்றை ஆரம்பித்துவிட்டதாகவும், அதனை நிறைவு செய்துவிட்டு வரவேண்டிய கடப்பாடு இருப்பதாகவும் ஆகவே, உடனடியாகச் சென்று முதலில் நடக்க வேண்டிய விடயங்களை மேற்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். சில மணி நேரத்தின் பின்னர் அறுவை சிகிச்சையை முடித்தவுடன் தனது மறைந்த தாயாரின் ஜனாஸாவுக்குச் சமூகமளித்திருக்கிறார்.
டாக்டர் லாஹி இறை நம்பிக்கை மிக்கவர். தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற முயற்சித்தவர். தஹஜ்ஜத் தொழுகையை கூட தவறவிட நினைக்காதவர் ஏற்கனவே உம்ரா கடமையை நிறைவேற்றி இருந்த அவர், 2017ஆம் ஆண்டு புனித மக்கா சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றினார்.
டாக்டர் லாஹியிடம் சிகிச்சை பெற்ற கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் மௌனகுரு சின்னையா தனது முகநூலில் நீண்ட பதிவொன்றை இட்டுள்ளார். அதில் அவர் டாக்டர் லாஹி பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.
“1999 இல் இருதயக்கோளாறு காரணமாக கொழும்பு பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்குட்படுத்தப்பட்டேன். அதன் முடிவு எனக்கு இருதயத்தில் பிரச்சினை என கண்டறியப்பட்டது. அப்போதுதான் எனக்கு டாக்டர் லாஹி அறிமுகமானார்.. வயதில் மிக இளைஞர். மெல்லிய உருவம் பிரகாசமான கண்கள். அதிகம் அவர் பேசவில்லை. தான் எனது வைத்திய அறிக்கையைப் பார்த்ததாகவும், எனது பிரச்சினை என்னவெனவும் சுருக்கமாக விளக்கினார்.
பிரபல தனியார் வைத்தியசாலைக்கு மறுநாள் மாற்றப்பட்டேன். அங்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. மறுநாள் என்னை பார்க்க லாஹி வந்தார். எனது அறுவைச் சிகிச்சை பற்றி விளக்கமளித்தார். சத்திர சிகிச்சை முடிந்து உணர்வு வந்த பின் மூன்றாம் நாள் எழுந்து நடமாட முடியும் என்பதும் அவரது பேச்சின் சாரமாக இருந்தது.
“மூன்று நாட்களுக்குள் எழுந்து நடமாடலாமா?” என ஆச்சரியத்துடன் அவரிடம் கேட்டேன். “சில பயிற்சிகள் செய்த பின்னர் நாளடைவில் ஓடவும் செய்யலாம்” எனக் கூறினார். உயிர் போகப்போகிறது என எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அவரது வார்த்தைகள் பெரும் நம்பிக்கை அளித்தன. அறுவைச் சிகிச்சை அறையில் டாக்டர் லாஹியுடன் இன்னும் சில டாக்டர்களும், தாதிமாரும் இருந்தனர். எனக்கு சுமார் 7 மணி நேர அறுவைச் சிகிச்சை நடந்ததாக பின்னர் எனது மனைவி கூறினார்.
7 மணி நேரம் என் உடலுடனும், அவரது அறிவுடனும், செயல் திறன்களுடனும், உணர்வுகளுடனும் போராடிய அம்மனிதாபிமானி இன்று நிம்மதியாகச் சென்றிருக்கிறார்.
நான் இரண்டு வாரம் வைத்தியசாலையில் இருந்தேன், டாக்டர் லாஹி, இடைக்கிடை என்னை வந்து பார்த்து மகிழ்ச்சி தெரிவித்துச் சென்றார். அவரது கைகளை எடுத்து என் கண்களில் ஒற்றி, “எனக்கு மீள் உயிர் அளித்தவர் நீங்கள்” என்றேன். அவர் இதனை எதிர்பார்க்கவில்லை. “இல்லை, இல்லை. என்னில் ஒன்றும் இல்லை. சரியான சமயத்தில் நீங்கள் வந்து விட்டீர்கள்” என்றார். உடற் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்யுங்கள் எனக் கூறிஅனுப்பி வைத்தார்.
இந்திய நண்பர்களின் ஆலோசனையின் பிரகாரம், ஆறுமாதங்களின் பின் சென்னை அப்பலோ வைத்தியசாலைக்குச் சென்று ஒரு பரிசோதனை செய்தேன். அவர்கள் எனது அறுவைச் சிகிச்சை வெகு நேர்த்தியாகவும், குறையில்லாத வகையில், மிகத் திறமையாகவும் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அதிசயித்தனர்.
2014 இலும் 2018 இலும் நோர்வே சென்றபோதும் என்னை அங்கு பரிசோதித்த இருதயவியல் நிபுணர்கள் இதே வார்த்தையைக் கூறினர். நமது நாட்டின் நிபுணத்துவத்தை பிற நாட்டார் கூறுகையில் எத்தனை மகிழ்ச்சி. இந்தப் புகழ் லாஹிக்குரியது.
எனக்கு உயிர் தந்து, ஆலோசனைகளால் உரமூட்டி, உற்சாகமூட்டி, நம்பிக்கையளித்து, வாழ வைத்த அவர் இன்று சென்று விட்டார். நானோ வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனது நூல் ஒன்றை அவருக்குச் சமர்ப்பிக்க நினைத்திருந்தேன். எனது நினைவுகளில் என்றும் அழியாத திரு உருவம் டாக்டர் லாஹி” என்கிறார் பேராசிரியர் மௌனகுரு.
மாலைதீவுக்கு சென்று செய்த அறுவைச் சிகிச்சை
ஒரு சந்தர்ப்பத்தில், அவர் கொழும்பு பிரபல தனியார் வைத்தியசாலையொன்றின் இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கால கட்டத்தில் மாலைதீவில் ஒருவருக்கு கத்தியால் இதயத்திலே குத்தப்பட்டதன் விளைவாக கத்தி அவரது இதயத்தை ஊடறுத்துச் சென்றிருந்தது. அதனை அசைத்தால் அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்ற காரணத்தினால் குறித்த கத்தி அவ்வாறே இருக்கத்தக்கதாக சிகிச்சை அளிக்கவேண்டும். மாலைதீவில் அதற்குரிய வசதிகள் இல்லாத காரணத்தினால் உடனடியாக கொழும்பில் அது தொடர்பாக நன்கறியப்பட்ட டாக்டர் லாஹியைத் தொடர்புகொண்டு மாலைதீவுக்கு வந்து, அங்குள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற உதவுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அப்போது டாக்டர் லாஹி கொழும்பிலிருந்து உரிய அறுவை சிகிச்சை சாதனங்களோடு, இரவோடு இரவாக மாலைதீவுக்கு விமானத்தில் சென்று, அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு இதயத்தில் இருந்த கத்தியை அகற்றி, அந்த நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உதவியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்தி, மாலைதீவிலும் இலங்கையிலும் பல செய்திகள் அப்பொழுது வெளியாகின.
சிறுவர்களுக்கான விசேட அறுவைச் சிகிச்சைகள்
குறிப்பாக சிறுவர்களைப் பொறுத்தவரையில் இருதய சோனையறைகளிடையே ஏற்படக்கூடிய துளைகளை அடைப்பது போன்ற பொதுவான அறுவை சிகிச்சை மற்றும் இருதய வால்வு மாற்று மற்றும் செப்பனிடல் அறுவை சிகிச்சைகளுக்கு அப்பால், சிக்கலான, அதாவது இருதயத்தின் பெரு நாடிகள் இடம் மாறி அமைந்திருப்பது காரணமாக அவற்றைச் செப்பனிடுவது சம்பந்தமான பாரிய உயிராபத்து மிக்க அறுவை சிகிச்சைகளைக் கூட டாக்டர் லாஹி வெற்றிகரமாக செய்துள்ளார். அபிவிருத்தி அடைந்த முன்னேற்றகரமான நாடுகளில் மேற்கொள்ளப்படக்கூடிய உயர்தரமான இருதய சிகிச்சைகளை இலங்கையில் வெற்றிகரமாக மேற்கொண்டதில் டாக்டர் லாஹி குறிப்பிடத்தக்க ஒருவராக விளங்குகின்றார்.
ஒட்சிசன் ஏற்றப்பட்ட இரத்தமும் சுத்திகரிக்கப்படாத இரத்தமும் இதயவறைகளில் இரண்டறக் கலப்பதன் காரணமாக குறிப்பாக சிறுவர்களில் ஏற்படக்கூடிய பாரதூரமான நோய் நிலைமைகளைக் கூட நவீன மருத்துவ நுட்பங்களைக் கையாண்டு வெற்றிகரமாக சுகப்படுத்துவதில் டாக்டர் லாஹியின் பங்களிப்பு மகத்தானதாக இருந்திருக்கிறது.
பொதுவாக இருதய நோய்கள் பலதரப்பட்டவை. சிறுவர் முதல் முதியோர் வரை வெவ்வேறு வயதுப்பிரிவிலும் இருதயத்தோடும் நுரையீரலோடும் சம்பந்தப்பட்ட பல விதமான நோய்நிலைகளை வெற்றிகரமாகக் கண்டறிந்து அதற்குரிய அறுவைச் சிகிச்சை முறைகளை மேற்கொள்வதில் டாக்டர் லாஹியின் ஈடுபாடு மெச்சத்தக்கதாக இருந்து வந்திருக்கிறது.
பல்வேறு விதமான அறுவைச்சிகிச்சைகளில் முன்னின்றது மட்டுமல்ல, தான் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும் பணிபுரிந்த காலத்தில் இருதய அறுவைச் சிகிச்சைத் துறையில் உயர் தகைமை பெறுவதற்காக வேண்டி தயாராகிக் கொண்டிருந்த மருத்துவர்கள் பலருக்கு பயிற்சி வழங்குவதில் அவர் முன்நின்றிருக்கிறார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் பின்னர் இந்தத் துறையில் பட்டப்பின் படிப்பை மேற்கொண்டு இன்று சிறப்பான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மருத்துவ பீட மாணவர்கள் தான் பணியாற்றுகின்ற விடுதிகளுக்கு பயிற்சிக்காக வருகின்ற பொழுது அவர்களுக்கு மிகச் சிறந்த முறையில் உரிய விளக்கங்களை அளித்து அவர்களுக்கு பிரயோக ரீதியாக இருதய நோய் சம்பந்தமான தெளிவை ஏற்படுத்துவதிலும், உரிய வழிகாட்டுதலை வழங்குவதிலும் அவர் அதிகம் ஒத்துழைத்திருக்கின்றார்.
இயந்திரத்தின் தொடர்பின்றி நேரடியாகவே துடித்துக்கொண்டிருக்கும் இருதயத்தின் மீது அறுவை சிகிச்சை (Beating Heart Surgery) மேற்கொள்ளும் நடைமுறையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகித்தவர்களில் ஒருவராக அவர் இருந்திருக்கிறார்.
அதைத்தவிர, பிறரது இரத்தத்தைச் செலுத்தாமல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவருடைய இரத்தத்தையே மீள் சுழற்சி செய்து அறுவை சிகிச்சை (Recycling blood) மேற்கொள்வதிலும் லாஹியின் பங்களிப்பு சிறப்பாக இருந்திருக்கிறது.
இவ்வாறு பல உயிர்களைக் காப்பாற்றிய அன்னாரின் சேவைகளைப் பொருந்திக் கொண்டுஅல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை அருள்வானாக.-Vidivelli