எச்.எம்.எம்.பர்ஸான்
இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி, மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். நமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பிரதேசத்தவர்கள் என சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதால் மிகவும் கவலையில் இருந்த முஸ்லிம்கள், அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டவுடன் ஆறுதலடைந்தனர். இதற்காக மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை பிரிவுகளுக்கு உட்பட்ட மஜ்மா நகர் கிராமத்தில் அமைந்துள்ள காணி அடையாளப்படுத்தப்பட்டது.
சில நூறு ஜனாஸாக்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் உடனடியாகவே மஜ்மா நகர் மக்கள் தமது காணிகளை வழங்குவதற்கு முன்வந்தனர். இதற்காக அவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
எனினும் தற்போது அங்கு 14.5 ஏக்கர் காணி மொத்தமாக ஜனாஸா அடக்கத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது. இவை பலருக்குச் சொந்தமான காணிகளாகும். அந்த வகையில் காணிகளை இழந்த மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு பதில் காணிகளை வழங்க வேண்டியது அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கடமையாகும்.
இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து விடிவெள்ளிக்காக அவர்களது கருத்துக்களை கேட்டோம்.
ஏ.எல்.சமீம் (மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்)
கல்குடா தொகுதி பள்ளிவாசல்களின் மையவாடிகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய மஜ்மா நகரில் பத்து ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்தக் காணியில்தான் கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்ய பிரதேச சபை அனுமதி வழங்கியது. அந்த இடத்தை நிபுணர் குழுவினர் பார்வையிட வருவதாக நாம் அறிந்தோம்.
கொரோனா தொற்றால் மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்வதாக இருந்தால் அந்தப் பகுதி சனநடமாட்டம் இல்லாததாக இருக்க வேண்டும் என்று நிபுணர் குழுவினர் அறிவுறுத்தல்களை விடுத்திருந்தனர்.
எப்படியாவது முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிலையில் ஒருமித்த கருத்தோடு முஸ்லிம் சமூகம் இருந்ததால் நாங்கள் அந்தப் பகுதியில் குடியிருந்த நபர்களின் இருப்பிடங்கள், ஆட்டுத் தொழுவங்கள், விவசாய செய்கைகள் அனைத்தையும் இரவோடு இரவாக அகற்றினோம்.
குறித்த இடத்தை பார்வையிட்ட நிபுணர் குழுவினர் அந்த பத்து ஏக்கர் நிலம் பொருத்தமில்லை என்றும் அதற்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான மேட்டுநில காணியே பொருத்தம் என்றும் தெரிவித்தனர்.
நிபுணர் குழு மஜ்மா நகர் காணியை பார்வையிட்ட போது அதில் முதலாவது ஜௌபர் என்பவருடைய காணியைத்தான் அடையாளம் கண்டனர். அவர்கள் நீதியாக நடந்து கொண்டார்கள். காணிச் சொந்தக்காரர் ஜௌபரை அழைத்து அவரது விருப்பத்தை கேட்டனர். அவர் எதையும் எதிர்பார்க்காமல் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக அந்தக் காணியை விட்டுக் கொடுத்தார்.
அல்லாஹ்வின் உதவியுடன் அந்த இடத்தில் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அவர் நூறு வீதம் உடன்பட்டதன் மூலம்தான் அன்று தேசியத்தில் ஒரு பாரிய பிரச்சினைக்கு தீர்வாக அமைந்தது.
அதற்கமைய வாழைச்சேனையைச் சேர்ந்த முகம்மட் ஜௌபர் என்பவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் காணி அடையாளப்படுத்தப்பட்டு அதில் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி முதலாவது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின்னர் கொரோனா மரணங்கள் அதிகரித்தமையால் அதன் அருகிலுள்ள ஏனைய நபர்களின் காணிகளும் பெறப்பட்டன. இதுவரை 14 நபர்களின் 14.5 ஏக்கர் காணிகள் கொரோனா உடல்கள் நல்லடக்கம் செய்யவும் அதன் பாதுகாப்பு வலயத்துக்காகவும் எடுக்கப்பட்டுள்ளன.
தேசியத்திலும், சர்வதேசத்திலும் ஓட்டமாவடி மஜ்மா நகர் புகழ் பெற்றுள்ளது. ஆனால் காணியை இழந்து தவிக்கும் அந்த ஏழைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் இலைமறை காய்களாக சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
காணியை இழந்த நபர்களுக்கு எப்படியாவது காணிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய கிராம அபிவிருத்திச் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அது கைகூடாத நிலையில்தான் நாங்கள் அண்மையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளரிடம் மாற்றுக் காணியை பெற்றுக் கொடுக்கும்படி மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம்.
மஜ்மா நகரில் முன்னூறு உடல்கள்தான் அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது மூவாயிரத்தை தாண்டிச் செல்கிறது.
கல்குடா முஸ்லிம் மக்கள் நிலப்பற்றாக்குறையால் தவிக்கின்றனர். அதனால் தான் ஜனாஸா நல்லடக்கத்தை கிண்ணியா – வட்டமடு பகுதிக்கு மாற்றுங்கள் என்று கேட்கிறோம். ஆனால் இன்னும் இங்கேயே அடக்கம் தொடர்கிறது.
ஓட்டமாவடி மஜ்மா நகரில் ஜனாஸா நல்லடக்கத்தை நிறுத்த மறுக்கும் சிலர் அங்கு அடக்கம் செய்யப்படுவது அரச காணியிலேயே என்றும் இன்னும் அரச காணிகள் அங்கு தாராளமாக உள்ளன என்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
ஆனால் அது மக்களுக்குச் சொந்தமான காணியாகும் அதில் அவர்கள் காலாகாலமாக விவசாயம் செய்து வந்துள்ளனர். அதேபோன்று அங்கு மக்கள் குடியிருந்தமைக்கான ஆதாரங்களும் உள்ளன.
அரசாங்கத்தால் ஒப்பம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி அது அரச காணி என்று சிலர் வாதிடுகின்றனர். அப்படிப் பார்த்தால் காவத்தமுனை, கேணிநகர், நாவலடி போன்ற பகுதிகளில் வசிக்கும் ஏராளமான நபர்களுக்கு இன்னும் ஒப்பங்கள் வழங்கப்படவில்லை. அங்கு மக்கள் குடியிருக்கிறார்கள். ஒப்பம் வழங்கப்படவில்லை என்பதற்காக வேண்டி காலாகாலமாக வாழ்ந்து வரும் நபர்களை எழுப்பிவிடுவது நியாயமா? என்று நான் கேட்கிறேன்.
மஜ்மா நகர் ஒரு மீள் குடியேற்ற கிராமாகும். அந்தப் பகுதி மக்களுக்கு அதிகாரிகள் திட்டமிட்டு ஒப்பங்கள், உறுதிகள் வழங்காமல் உள்ளார்கள். அனால் அங்குள்ள மக்கள் காலாகாலமாக ஒப்பங்களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
எனவே, காணிகளை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள நபர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி மாற்றுக் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.ஏ.முகைதீன் (விவசாயி):
மஜ்மா நகரில் கொரோனா தொற்றால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் காணி விவசாயம் செய்யப்பட்ட, மக்கள் குடியிருந்த காணிகளாகும். அந்தக் காணியில் ஒரு பகுதி எங்களது பரம்பரை காணியாகும். அந்தக் காணிக்குள் 1971 ஆம் ஆண்டு ஓட்டமாவடி பிரதேச சபையால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு ஒன்று இப்போதும் உள்ளது.
1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியால் அப்போது அங்கு வசித்து வந்த குடும்பத்தின் பிள்ளை ஒன்று மரணித்த சம்பவமும் பதிவாகியுள்ளது. அந்திக் குடும்பத்தினர் தற்போது காவத்தமுனை பகுதியில் வசித்து வருகின்றனர்.
நான் அந்தக் காணியை 1990 ஆம் ஆண்டுமுதல் பராமரித்து வருகிறேன். பயங்கரவாத தாக்குதலினால் அப்போது எங்களுடைய குடியிருப்புகள் தீயில் எரிந்து சாம்பலாகின. ஆதனால் அந்தக் காணிக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒப்பங்களும் தீயில் சாம்பலாகின. அதன் சில பகுதிகள் என்னிடம் இப்போதும் உள்ளது.
அத்துடன், நாங்கள் பயிர்ச் செய்கை செய்த போது வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தில் உரம் பெறுவதற்காக பணம் கட்டிய பற்றுச்சீட்டு மற்றும் பள்ளிவாசலுக்கு வழங்கிய நன்கொடை பணத்துக்கான பற்றுச்சீட்டு உட்பட இன்னும் பல ஆதாரங்கள் எம்மிடம் இன்றும் உள்ளன.
ஏ.எல்.முகம்மது முத்து
நான் அந்தக் காணியை சுமார் பதினைந்து வருடங்களாக பராமரித்து வருகிறேன். அந்தக் காணிக்கு ஒப்பம் கோரி விண்ணப்பித்துள்ளேன். எனது காணியை நில அளவை அதிகாரிகள் பார்வையிட்டு அதற்கான அடையாள கல்லினையும் இட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில்தான் எனது காணி ஜனாஸா அடக்கத்துக்காக எடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தருவதற்கு எங்கும் காணி இல்லை என்றால் இதைப்பற்றி நாங்கள் சிந்திக்க மாட்டோம். ஆனால் மாற்றுக் காணிகளை வழங்க வேறு இடமுள்ளது. அதனால்தான் நாங்கள் மாற்றுக் காணிகளை கேட்டு பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம்.
ஜனாஸா அடக்கம் ஆரம்பித்த ஆரம்ப காலப் பகுதியில் எங்களை ஓட்டமாவடி பிரதேச சபை அழைத்து உங்களுக்கு பத்து நாட்களுக்குள் மாற்றுக் காணி தருவோம் என்று வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால் இதுவரை எங்களுக்கு காணி வழங்கப்படவில்லை.
அந்தக் காணியில் தான் நான் பயிர் செய்து எனது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டேன். இப்போது அந்தக் காணியை இழந்த நிலையில் எனது வாழ்வாதாரம் இழக்கப்பட்ட நிலையில் உள்ளேன்.
அங்கு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதை வைத்து வெளியூர் தனவந்தர்கள் மூலம் பல்வேறு உதவிகள் கிடைப்பதாக நாங்கள் அறிகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை.
எங்களது காணிக்கு நாங்கள் பணம் கேட்கவில்லை. எங்களுக்கு பணம் தேவையில்லை. மாற்றுக் காணிதான் தேவை. காணிகள் வழங்குவதற்கு இடம் இருக்கிறது. அதனால் தான் நாங்கள் காணி கேட்டு மகஜர் கொடுத்துள்ளோம் என்றார்.
இவர்களைப் போன்று காணிகளை இழந்த பலரையும் நாம் தொடர்பு கொண்டோம். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நினைத்தால் எங்களுக்கு காணிகளை வழங்க முடியும் என்று தங்களின் ஆதங்கங்களை வெளியிட்டனர். இவ்வாறு காணிகளை இழந்து தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள நபர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட வேண்டும். இதற்கான அழுத்தங்களை தேசிய ரீதியாக செயற்படும் முஸ்லிம் மக்களும் அமைப்புகளும் வழங்க முன்வர வேண்டும். இதில் நம் அனைவருக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.-Vidivelli