தாக்குதல்களுடன் ஹிஜாஸுக்கு தொடர்பிருப்பதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்
பெரும்பான்மை மக்களுக்கு சவால் விடுக்கிறார் ரெஹான்
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஒரு நிரபராதி என்றும் அவரை விடுவிப்பதற்காக குரல் கொடுக்குமாறும் பெரும்பான்மை சிங்கள மக்களிடம் காணொளி மூலமாக சிங்கள, ஆங்கில மொழிகளில் அழைப்பு விடுத்துள்ளார். வெலிகம நகர சபையின் முன்னாள் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி பிரதித் தலைவருமான ரெஹான் ஜயவிக்ரம. அதன் தமிழ் வடிவத்தை ‘விடிவெள்ளி’ வாசகர்களுக்காக தருகிறோம்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று அனைவராலும் அறியப்பட்ட ஒருவராக இருக்கிறார். அவ்வாறு அவர் அறியப்பட்டிருப்பதற்கு காரணம் அவர் ஒரு சிறந்த சட்டத்தரணி என்பதோ, ஒரு சிறந்த கல்விமான் என்பதோ, ஒரு சிறந்த சமூகப் பணியாளர் என்பதோ அல்ல. மாறாக அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதனால் ஆகும்.
நான் இன்று ஹிஜாஸ் தொடர்பில் என்னிடம் உள்ள ஆதாரபூர்வமான தகவல்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் கூறுவது பொய் என்று நீங்கள் எவராவது கருதினால் நீங்கள் எந்தவொரு நீதிமன்றத்துக்கும் சென்று முறையிட முடியும். நான் எந்தவொரு பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் முன்னிலையிலோ உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ முன்னிலையாகி ஹிஜாஸ் ஒரு நிரபராதி என்பதை நிரூபிக்க தயாராகவுள்ளேன்.
‘சேவ் த பேர்ள்’ நிறுவனம் தொடர்பில் முதலில் சில விடயங்களை கூற விரும்புகிறேன். ஒரு பொய்யை திரும்பத்திரும்ப கூறினால் அது உண்மையாகிவிடும் என்று சொல்வார்கள். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத்தான் செய்து வருகிறார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சேவ் த பேர்ள் நிறுவனத்தின் முக்கிய அங்கத்தவர் என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஊடகங்களிலும் தோன்றி சரத் வீரசேகர கூறி வருகிறார். சேவ் த பேர்ள் பல முஸ்லிம் நாடுகளின் உதவியுடன் முஸ்லிம் சமூகத்திற்கு உதவி வருகிறது.
ஒரு விகாரையால் குழு ஒன்று அமைத்தால் அதில் நீங்கள் முஸ்லிம்களை உறுப்பினர்களாக உள்வாங்குவீர்களா? அப்படிச் செய்யமாட்டீர்கள். அதேபோன்றுதான் சேவ் த பேர்ள் ஒரு முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனம். எனவே அவர்கள் முஸ்லிம்களையே அதன் நிர்வாகிகளாக நியமித்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் ஏனையவர்களையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஹிஜாஸ்தான் இதனை ஆரம்பித்தவர் என சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜாமிஆ நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அகார் முகம்மத், சுகாதார அமைச்சின் மேலதிக பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி, தேசிய சூறா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத், வாமி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நஜ்மான் உட்பட மேலும் பலர் இதன் முகாமைத்துவ சபையில் அங்கம் வகிக்கிறார்கள்.
நான் மேலே பெயர் குறிப்பிட்ட இவர்கள் அனைவரும் இந்த நிறுவனத்தின் முகாமைத்துவ சபையில் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். அதற்காக இவர்களும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று யாராவது கூற கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமைச்சர் சரத் வீரசேகர இவர்களும் குற்றவாளிகள் என்று எங்காவது கூறியிருக்கிறாரா? அப்படியானால் ஏன் இந்த நிறுவனத்தில் அங்கத்தவராக இருக்கும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை மாத்திரம் குற்றம்சாட்ட வேண்டும்?
இந்த அரசாங்கம் சேவ் த பேர்ள் நிறுவனத்தின் பெயரைக் கூறி, ஹிஜாஸ் அதன் உறுப்பினர் என்பதால் அவரைக் கைது செய்துள்ளதாக கூறுகிறது. இதனை நம்பி சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிடுவோரும் கூட ஹிஜாஸ்தான் சேவ் த பேர்ள் நிறுவனத்தின் தலைவர் எனக் கூறுகின்றனர்.
இப்பொழுது உங்களுக்கு சேவ் த பேர்ள் நிறுவனம் பற்றி நன்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். மேலதிக விபரங்கள் தேவை எனில் அதன் இணையத்தளம் ஊடாக அறிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக இந்த அமைப்பின் நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் மற்றொரு மிக முக்கியமான நபர் குறித்து நான் குறிப்பிட வேண்டும். அவர்தான் முன்னாள் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி எஸ்.எஸ்.பி. மஹி டோல். அவர் இலங்கையின் மிக முக்கிய புலனாய்வு அதிகாரிகளில் ஒருவர். இந்த நாட்டுக்கு பெருமைதேடித்தந்தவர் அவர். அவரும் சேவ் த பேர்ள் நிறுவனத்தில் அங்கம் வகிக்கிறார். 2015 ஆம் ஆண்டு தான் பதவியில் இருக்கும் போதே, ஸஹ்ரான் அங்கம் வகித்த தீவிரவாத தௌஹீத் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன் முதலாக அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியவர். இதற்கமைய இந்த தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய அரசாங்கம், இன்று ஹிஜாஸை கைது செய்து சிறையிலடைத்திருப்பதுதான் வேடிக்கையானதாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஹிஜாஸுக்கும் தொடர்புள்ளதாக யாரோ சிலர் கூற, அதனை நம்பி இந்த முட்டாள்கள் ஓர் அப்பாவியான ஹிஜாஸை கைது செய்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைத்திருக்கிறார்கள்.
இதுவே உங்கள் சகோதரருக்கு, சகோதரிக்கு, தாய்க்கு, தந்தைக்கு, மாமாவுக்கு, மாமிக்கு நடந்தால் எப்படியிருக்கும்? நீங்கள் ஹிஜாஸ் விடயத்தில் அனுதாபப்பட வேண்டும். பச்சாதாபப்பட வேண்டும். இன்று இவர்கள் இந்த மனிதருக்கு எதிராக இப்படி நடந்து கொள்கிறார்கள். இது பற்றி நாம் உரத்துப் பேசாவிட்டால் அவர்கள் நாளை நமக்கு எதிராகவும் இதனைத்தான் செய்வார்கள். அவ்வாறு நமக்கு எதிராக எதுவும் நடந்தால் ஹிஜாஸுக்கு எதிராக பேசுவோரும் நமக்காக பேச வரமாட்டார்கள்.
நீங்கள் ஹிஜாஸுக்கு ஆதரவாகப் பேசினால், நாளை நமக்கு எதுவும் நடந்தால் நிச்சயமாக ஹிஜாஸ்தான் முதல் மனிதராக நமக்காக குரல் கொடுப்பார் என்பதை நான் உறுதிபடக் கூறுகிறேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஹிஜாஸுக்கு தொடர்பிருப்பதாக பாரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இச் சம்பவம் தொடர்பில் விசாரிக்க இதே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தவொரு இடத்திலாவது ஹிஜாஸின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை எனக்கு காண்பிக்குமாறு நான் சவால் விடுகிறேன்.
அவர் குற்றவாளியென எங்காவது ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என நீங்கள் நிரூபித்தால், எனது சகல அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் ஒரு மணி நேரத்திற்குள் ஒதுங்கிக் கொள்வேன் என சவால் விடுகிறேன்.
ஆணைக்குழு அறிக்கையை ஒரு புறம் வைத்துவிட்டு, ஹிஜாஸ் மீது அண்மையில் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம். அந்த அறிக்கையில் ஏதேனும் ஒரு பகுதியிலாவது ஹிஜாஸுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் சம்பந்தம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் காண்பித்தால் நான் மீண்டும் சகல அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் ஒரு மணி நேரத்திற்குள் ஒதுங்கிக் கொள்வதாகவும் எனது கட்சியால் எனக்கு வழங்கப்பட்டுள்ள சகல பதவிகளையும் இராஜினாமாச் செய்வதாகவும் இங்கு வாக்குறுதியளிக்கிறேன்.
இந்த இடத்தில் சட்டமா அதிபரிடமும் முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். இது ஒரு பௌத்த நாடு. நாங்கள் இன்று செய்கின்ற செயல்கள் நாளை நமக்கு எதிராகவே திரும்பும் (கர்மா) என்பதை நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அதனால்தான் நான் ஹிஜாஸுக்காக உண்மையைப் பேசுகிறேன். இன்னும் பிள்ளைகள் உள்ள, பிள்ளைகள் இல்லாத ஆயிரக் கணக்கானோரும் ஹிஜாசுக்காக பேசுவதும் இதனால்தான்.
தயவு செய்து ஹிஜாஸுக்கு பிணை வழங்கும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டாம். ஹிஜாஸை பிணையில் விடுவிப்பதற்கு அவர் சார்பாக நான் சான்றுறுதியளிக்க வேண்டும் என நீங்கள் கருதினால் உங்கள் அலுவலகத்துக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ வந்து அதனைச் செய்வதற்கும் நான் தயாராகவிருக்கிறேன். அரசாங்கத்தில் உள்ள ஏனைய தரப்பினருக்கும் ஹிஜாஸ் ஓர் அப்பாவி என்பதை நீங்கள் புரிய வைப்பீர்கள் என நம்புகிறேன்.
ஹிஜாஸை விடுவிப்பதற்கான போராட்டத்தில் அனைவரையும் எம்முடன் கைகோர்க்குமாறும் அழைப்புவிடுக்கிறேன்.-Vidivelli