உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களும் ஒரு முஸ்லிமின் மனசாட்சியும்

0 432

எம்.எஸ்.எம். ஐயூப்

உயிர்த்த ஞாயிறு தின­மான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 9 மணி­ய­ளவில் நான் எனது மக­ளுடன் கொழும்பு நகர மண்­ட­பத்தை நோக்கி பஸ்ஸில் பய­ணித்துக் கொண்டு இருந்தேன். பஸ் தெமட்­ட­கொ­டையை அண்­மித்தபோது அதன் வானொலி ஒலி­ப­ரப்பிக் கொண்டு இருந்த பாடலை இடை­ந­டுவே நிறுத்தி விசேட செய்­தி­யொன்றை ஒலி­ப­ரப்­பி­யது.

கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் புனித அந்தோ­னியார் தேவஸ்­தா­னத்தில் இடம்­பெற்ற மாபெரும் வெடிச் சம்­ப­வ­மொன்றில் பெரும் எண்­ணிக்­கை­யானோர் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும் பலர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் அச் செய்­தியில் கூறப்­பட்­டது.
கனவு காண்­கி­றேனா என்­றதோர் எண்ணம் ஒரு கனம் மனதில் தோன்றி மறைந்­தது. சிறிது நேரம் வரை எனக்கு எனது செவி­க­ளையே நம்ப முடி­யா­தி­ருந்­தது. ஏனெனில் கடந்த 10 ஆண்­டு­க­ளாக நாம் குண்டு வெடிப்­புக்­களைப் பற்­றிய செய்­தி­களை கேட்­டதே இல்லை.

பஸ்ஸில் என்­னுடன் பய­ணிக்கும் பய­ணி­களைப் பார்த்தால் மேலும் குழப்­ப­மாக இருந்­தது. 10 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் கேட்கும் இந்தப் பயங்­கரச் செய்­தியைக் கேட்டு பஸ்ஸே அல்­லோல கல்­லோ­ல­மாகி இருக்க வேண்டும். இருந்த போதிலும் பய­ணிகள் எதுவும் நடக்­கா­ததைப் போல் அமை­தி­யாக இருந்­தனர்.

நாம் நகர மண்­டபம் அருகே அமைந்­துள்ள பஸ் தரிப்­பி­டத்தில் இறங்­கினோம். இன்­னமும் என்ன நடக்­கி­றது என்­பது தெளி­வா­க­வில்லை. எனவே மகளை மற்­றொரு பஸ்ஸில் அவ­ளது ரியூஷன் வகுப்­பிற்கு அனுப்­பி­விட்டு நான் எனது அலு­வ­ல­கத்­திற்குச் சென்றேன். அங்கே ஆசி­ரியர் பீட உறுப்­பி­னர்கள் அனை­வ­ருமே தொலைக் காட்சிப் பெட்­டியை சூழ நின்று கொண்­டி­ருந்­தனர். தொலைக் காட்­சியில் ஒளி­ப­ரப்பிக் கொண்­டி­ருந்த காட்­சிகள் மிகவும் பயங்­க­ர­மா­ன­வை­யாக இருந்­தது. கொழும்பு தொலை­தொ­டர்பு மத்­திய நிலை­யத்தில் இடம்­பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்­ப­வத்தைப் போன்ற மிக மோச­மான சம்­ப­வங்­களை அறிக்­கை­யிட்ட அனு­பவம் எனக்கு இருந்த போதிலும் இங்கே நாம் தொலைக்­காட்­சியில் காணும் காட்சி அவை அனைத்­தையும் விஞ­்சு­ம­ள­வுக்கு படு பயங்­க­ர­மா­ன­தாக இருந்­தது.

உல­கெங்கும் ஊழல் மலிந்த நிர்­வா­கங்கள் மற்றும் நீதித்­துறை மீதான தலை­யீ­டுகள் கார­ண­மாக நான் மரண தண்­ட­னையை ஆத­ரிப்­ப­வ­னல்ல. ஆயினும் இது போன்ற படு பாதகச் செயல்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கும் மரண தண்­டனை வழங்கக் கூடாதா என என்னைப் போலவே மரண தண்­ட­னையை எதிர்க்கும் நண்பரொ­ரு­வ­ரிடம் கேட்­டேன். தொலைக் காட்­சியைப் பார்த்த வண்ணம் இருந்த அவர் என் பக்கம் திரும்பி எவ்­வித பதி­லையும் வழங்­காது சற்று சிரித்­து­விட்டு மீண்டும் அந்த அகோர காட்­சி­களின் பக்கம் திரும்­பினார்.

மேலும் சில தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்கள் மீதான இதே போன்ற தாக்­கு­தல்­களைப் பற்­றிய செய்­திகள் வந்த வண்­ண­மி­ருந்­தன. யார் இந்தக் கொலைக்­கா­ரர்கள் என்­பதே எல்லோர் மன­திலும் எழுந்த கேள்­வி­யாகும். அடுத்து ஜனா­தி­ப­தி­யாக வர விரும்­புவர் ஒருவர், இஸ்­ரே­லி­யர்கள், ஜே.வி.பியினர் என பல்­வேறு வாதங்கள் அந்தக் கேள்­விக்கு பதி­லாக முன்­வைக்­கப்­பட்­டன. அதற்­கி­டையே நீண்ட நேர­மாக தொலை­பே­சியில் பேசிக் கொண்­டி­ருந்த எனது நண்ப­ரொவர் திடீ­ரென எழுந்து தொலை­பேசி ரிஸி­வரை வைத்­து­விட்டு “ஐ.எஸ். தான் செய்­தி­ருக்­கி­றார்கள்” என்று கூறிய வண்ணம் ஆசி­ரி­யரின் அறைக்கு ஓடினார். அப்­போது மத்­திய கிழக்கு நாடு­களில் இயங்­கிய இஸ்­லாமிக் ஸ்டேட் ஒப் ஈராக் அன்ட் சிரியா என்ற கொலைக்­கார கும்­ப­லையே அவர் ஐ.எஸ். என்று சுருக்­க­மாக குறிப்­பிட்டார்.

தேவா­ல­யத்­துக்குச் சென்ற இந்த நூற்றுக் கணக்­கான அப்­பாவி மக்­களைக் கொன்­ற­வர்கள் எனது சம­யத்தைச் சார்ந்­த­வர்கள் என்­பதைக் கேட்­டதும் பெரும் வெட்­கமும் குற்ற உணர்வும் என் மனதை ஆட்­கொண்­டது. அன்று மாலை­யாகும் போது அதி­கா­ரிகள் தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­வர்­களை அடை­யாளம் கண்­ட­தோடு அவர்கள் திட்­ட­மிட்டே கிறிஸ்­தவ மக்­களை அம் மக்­களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் படு­கொலை செய்­துள்­ளார்கள் என்­ப­தையும் கண்­ட­றிந்­தனர். அன்றே அது தொடர்­பாக பலர் கைது செய்­யப்­பட்­டனர். படித்த சில செல்­வந்­தர்­களே இந்தப் படு பாதகச் செயலில் முன்­ன­ணியில் இருந்­துள்­ளனர் என்­பதும் அன்றே தெரிய வந்­தது.

இந்தக் மிலேச்சக் கும்­பலைப் பற்றி என் மனதில் கடும் வெறுப்பும் கோபமும் எழுந்­த­தோடு அவர்­களை நான் மன­துக்­குள்­ளேயே சபித்துக் கொண்டேன். எனினும் எனது சம­யத்தின் பெய­ரி­லேயே இந்தப் பெரும் பாதகச் செயலைச் செய்­துள்­ளார்கள் என்­பதை அறிந்த பின்னர் என்னைச் சுற்­றி­யுள்­ள­வர்­களில் எத்­தனைப் பேர் இந்தப் பாவத்­தி­லி­ருந்து என்னை விடு­விப்­பார்­களோ என்ற ஆதங்­கத்­தின் கார­ண­மாக நான் மனம் திறந்து இந்த நிகழ்­வு­களைப் பற்றிப் பேச தயங்­கி­னேன. இந்­த­ளவு கொடி­ய­வர்கள் இவ்­வ­ளவு காலம் எனது சமூ­கத்­துக்­குள்­ளேயே இருந்­துள்­ளார்கள் என்ற யதார்த்­தத்தை ஏற்க எனது மனம் பெரும் போராட்­டத்­தில ஈடு­பட்­டது. ஆனால் அதனை ஏற்றுத் தான் ஆக வேண்டும்.
அதனை அடுத்த சில நாட்­க­ளாக நான் இந்த அநா­க­ரிக கொலை வெறியைப் பற்­றிய இலங்கை முஸ்­லிம்­களின் எண்­ணங்­களை மிக உன்­னிப்­பாக ஆராய்ந்து வந்தேன். கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல்­வேறு இன­வாத தாக்குதல்­களின் போது முஸ்­லிம்­களின் பக்கம் நின்ற ஒரு சமூ­கத்தின் மீது மேற்­கொள்ளப்­ப­பட்ட இந்த மிலேச்­சத்­த­னத்தை முஸ்­லிம்­களால் நடத்­தப்­பட்டு வரும் எந்­த­வொரு பத்­தி­ரி­கையோ இணை­யத்­த­ளமோ ஏனைய ஊட­கமோ மறை­மு­க­மா­கவோ சிறி­த­ள­வா­கவே நியாப்­ப­டுத்­தாது மிகக் கடு­மை­யாக விமர்­சிப்­பதை கண்டு திருப்­ப­தி­ய­டைந்தேன். இன்று வரை முஸ்­லிம்கள் எவரும் எந்­த­வொரு ஊட­கத்தின் மூல­மா­கவோ எந்­த­வொரு மேடை­யிலோ அதனை நியா­யப்­ப­டுத்­து­வதை நான் கண்­டதோ கேட்­டதோ இல்லை.

ஆனால் எவரும் யதார்த்­தத்தை புறக்­க­ணிக்க முடி­யாது. எனது சம­யத்தைப் பின்­பற்­று­வ­தாகக் கூறிக் கொள்ளும் ஒரு குழு­வினர் எனது சம­யத்தின் பெயரால் இந்­நாட்டு வர­லாற்றில் மிகக் கொடூ­ர­மான குற்­ற­மொன்றை செய்­தி­ருக்­கி­றார்கள். தமது சம­யத்தின் பெயரால் அநா­க­ரி­க­மான இந்தப் படு­கொலைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றதன் பின்­னரே நானும் உள்­ளிட்ட இந்­நாட்டு முஸ்­லிம்கள் அந்த யதார்த்­தத்தைப் பார்க்க கண் விழித்­துள்ளோம். இந்த அழுக்­கி­லி­ருந்து தூய்­மை­ய­டை­வது இல­கு­வா­ன­தல்ல, சில­வே­ளை­களில் தலை­மு­றைகள் வரை அந்த அழுக்கு எம்மை சூழ்ந்து கொண்டே இருக்கும் என்று நினைக்கும் போது மிக வேத­னை­யா­கவே இருந்­தது.

எமக்­குள்­ளேயே இந்தக் குழு­வினர் இந்­த­ளவு வளர்ந்­துள்­ளார்கள் என்றால் எம் மத்­தியில் மேலும் இந்தக் கொலைக்­கார சித்­தாந்­தத்தை தலையில் சுமந்து கொண்டு திரி­ப­வர்கள் இருக்க வேண்டும் என்று ஊகிக்­கலாம். வெட்க உணர்வின் கார­ண­மா­கவும் குற்ற உணர்வின் கார­ண­மா­கவும் அர­சியல் நோக்கம் கொண்ட சில ஊட­கங்கள் இந்­நாட்டு முஸ்­லிம்கள் அனைவர் மீதும் அள்ளி வீசிய அவ­மா­னத்தின் கார­ண­மா­கவும் முஸ்­லிம்கள் மத்­தியில் ஒரு வித தற்­சோ­தனைப் போக்கு காணப்­ப­ட­லா­யின. தீவி­ர­வா­தத்­தையும் உண்­மை­யான இஸ்­லாத்­தையும் பிரித்­த­றியக் கூடிய இப் புதிய போக்கை நல்­லதோர் திருப்­ப­மா­கவே நான் கண்டேன். ஆனால் முஸ்லிம் விரோத ஊடக பிர­சாரம் மிக மோச­மான திருப்­பத்தை அடைந்­ததால் இந்த தற்­சோ­தனைக் கலந்­து­ரை­யாடல் ஓரிரு வாரங்­க­ளி­லேயே தற்­காப்புக் கலந்­து­ரை­யா­ட­லாக மாறி­யது. தீவி­ர­வாதம் பற்­றிய முஸ்­லிம்­க­ளி­டை­யி­லான கவலை படிப்­ப­டி­யாக நீங்­கி­விட்­டது.

ஒரு சில ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் ஊடக நிறு­வ­னங்­க­ளையும் தவிர்ந்த இந்­நாட்டில் சகல சிங்­கள மற்றும் ஆங்­கில ஊட­கங்­களும் உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்­காக அனைத்து முஸ்லிம் சமூ­கத்­தையும் குறை கூற முடி­யாது என்று கூறிக் கொண்டே அனைத்து முஸ்­லிம்­க­ளையும் அவர்­க­ளது சம­யத்­தையும் கலா­சா­ரத்­தையும் வாழ்க்கை முறை­யையும் மிக மோச­மா­கவும் பயங்­க­ர­மா­னதா­கவும் அநா­க­ரி­க­மா­ன­தா­கவும் சகிப்புத் தன்­மை­யற்­ற­தா­கவும் மற்­ற­வர்­க­ளுக்கு ஆபத்­தா­ன­தா­கவும் சித்­த­ரித்­தன.
ஒவ்­வொரு நாளும் நாளொன்­றுக்கு பல செய்தி அறிக்­கைகள் மூலம் இந்த அநா­கரிக ஊடகச் செயற்­பாடு நடந்­தே­றி­யதால் அது வரை மிக நெருக்­க­மாக இருந்த எமது சிங்­கள அய­ல­வர்கள் எம்­மை­விட்டும் வில­கி­யி­ருக்க முயல்­வதை காண்­பது வேத­னை­யாக இருந்­த­தோடு அபாய சமிக்­ஞை­யா­கவும் அமைந்­தது. ஆங்­காங்கே சில அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்­றாலும் இதே சம­யத்­தோடும் கலா­சா­ரத்­தோடும் வாழ்க்கை முறை­யோடும் இந்­நாட்டு முஸ்­லிம்கள் ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு மேலாக சிங்­கள மக்­க­ளோடும் தமிழ் மக்­க­ளோடும் சமா­தா­னத்­தோடு வாழ்ந்­தார்கள் என்­பதை இந்த ஊட­கங்கள் ஓரிரு நாட்­க­ளி­லேயே மறந்­து­விட்­ட­தோடு நாட்டு மக்­க­ளையும் மறக்கச் செய்­தன.

அமை­தி­யாக பல நூறு ஆண்­டுகள் இந்­நாட்டில் வாழ்ந்த ஒரு சமூ­கத்தை இந்த ஊட­கங்கள் தமது வெறுப்புக் கலந்த பிர­சா­ரத்தின் மூலம் எந்த அளவு பயங்­க­ர­மா­ன­தாக சித்­தி­ரித்­தன என்றால் கம்­பஹா மாவட்­டத்தில் சில முஸ்லிம் பிர­தே­சங்கள் குண்­டர்­களின் தாக்­கு­த­லுக்கு இலக்­காக அப்பிர­சா­ரங்கள் கார­ண­மா­யின. இத் தாக்­கு­தல்கள் பயங்­க­ர­வாத தாக்­கு­லுக்கு இலக்­கான கிறிஸ்­த­வர்­களால் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பதும் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் இடம்­பெற்று மூன்று வாரங்­க­ளுக்குப் பின்­னரே இடம்­பெற்­றன என்­பதும் அவை இந்தப் பிர­சாரங்­க­ளா­லேயே தூண்­டப்­பட்­டன என்­ப­தற்கு சிறந்த சான்­றாகும். அர­சியல் ரீதி­யாக ஒதுக்கித் தள்­ளப்­பட்டு இருந்த சில சமயத் தலை­வர்கள் இத் தரு­ணத்தைப் பாவித்து தமது அர­சியல் இருப்பை வளர்த்துக் கொள்ள முயன்றமை நிலை­மையை மேலும் மோச­மாக்­கி­யது.

இனக் கல­வ­ரங்கள் இடம்­பெற்­றமை மட்­டுமே இவற்றின் விளை­வா­க­வில்லை. முஸ்­லிம்கள் மத்­தியில் தோன்­றி­யி­ருந்த தற்­சோ­தனைப் போக்கும் அவர்கள் மீதான இத் தாக்­கு­தல்­களின் கார­ண­மாக மங்கிப்போக ஆரம்­பித்­தது. எனது சம­யத்தின் பெயரால் கிறிஸ்­த­வர்கள் தாக்­கப்­பட்ட போது எங்கே பிழை நடந்­து­விட்­டது என்­பதை அறிய இஸ்­லா­மிய நூல்­களை பரி­சீ­லிக்­கவும் சக முஸ்­லிம்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டவும் ஆரம்­பித்­தி­ருந்த நானும் என்னை மூடிக் கொண்ட குண்­டர்­களின் தாக்கு­தல்கள் பற்­றிய பீதியின் கார­ண­மாக நான­றி­யா­ம­லேயே அவற்றைக் கைவிட்­டு­விட்டேன்.

ஒரு சில மணித்­தி­ய­லங்­களில் 260க்கு மேற­்பட்ட அப்­பாவி ஆண், பெண் மற்றும் சிறு­வர்­களை கொன்றுக் குவித்த பயங்­க­ர­வா­தி­களின் கொலைக்­கார சித்­தாந்தம் எந்­த­ள­வுக்கு இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளி­டையே ஊடு­று­வி­யுள்­ளது என்­பது எவ­ருக்கும் தெரி­யாது. சம­யத்தின் பெயரால் இந்தச் சித்­தாந்தம் ஊட்­டப்­ப­டு­வ­தாலும் நீண்ட கால­மாக படிப்­ப­டி­யாக அது வளர்ந்து வந்­த­தாலும் பலர் பல்­வேறு அளவில் அதனை ஏற்று இருக்­கக்­கூடும் என்­ப­தாலும் அதனை அடையாளம் காண்பதும் உண்மையான இஸ்லாமிய சமயத்திலிருந்து அதனை பிரித்தறிவதும் இலகுவான காரியமாக இருக்காது. தீவிரவாதிகளைப் பற்றி தமக்கு தகவல் தந்தவர்களையும் சிறையில் அடைத்தது. நூறு வருடம் பழைய மத்ரஸாக்களிலும் காதி நீதிமன்றங்களிலும் தீவிரவாதத்தை தேடி அலையும் அதிகாரிகள் அதனை தம்மால் அடையாளம் காண முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.

மத்­ர­ஸாக்கள் மற்றும் காதி நீதி­மன்­றங்கள் தற்­கால சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமைய சீர்த்­தி­ருத்­தப்­பட வேண்டும் என்­பதில் எவ்­வித விவா­தமும் இருக்க முடி­யாது. அது வேறு­வி­டயம். ஆயினும் முஸ்­லிம்கள் மத்­தியில் இருக்கும் தீவி­ர­வாத போக்­கு­டை­ய­வர்­களை அடை­யாளம் காண முறை­யான உபா­யங்­களை வகுக்க அதி­கா­ரிகள் தவ­றி­விட்ட நிலையில் முஸ்­லிம்­களே அதனை மேற்­கொள்ள வேண்டும். அவர்­க­ளா­லேயே அது முடியும்.
பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து வெட்க உணர்வின் கார­ண­மா­கவும் குற்ற உணர்வின் கார­ண­மா­கவும் தற்­சோ­த­னைக்கு முன்­வந்த முஸ்­லிம்­களை இன­வாத தாக்­கு­தல்கள் மூலம் திசை திருப்­பா­தி­ருந்தால் அந்தப் பணி இலகுவாகியிருக்கும் என நான் இன்றும் திடமாக நம்புகிறேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.