மக்களின் அனைத்துப் பிரச்சினைகளினதும் மீட்பர்களாக தம்மை ஆசை காட்டி, 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முடியாது தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஒரே இரவில் எரிவாயு விலையை ஆயிரக் கணக்கான ரூபாவினால் அதிகரித்ததன் மூலம் தம்மை ஆதரித்தவர்களுக்கும் ஆதரிக்காதவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து பால்மா, கோதுமை மா, பேக்கரி உற்பத்திகள், உணவுப் பொதிகள், தேநீர் உள்ளிட்ட அனைத்தினது விலைகளும் அதிகரித்துள்ளன. விரைவில் எரிபொருளுக்கான விலைகள் அதிகரிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ள நிலையில் மக்கள் பலத்த விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 முடக்க நிலை காரணமாக தொழில் இன்றி வறுமைக்குள் தள்ளப்பட்டிருந்த மக்களுக்கு இந்த விலையேற்றம் பேரிடியாகவே வந்து விழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு நினைத்தவாறு விலைகள் அதிகரிக்கப்பட்டன. இதனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலைகளை அறிமுகப்படுத்தியது. எனினும் மேற்படி பொருட்களின் இறக்குமதியாளர்களின் அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் கட்டுப்பாட்டு விலைகளை தளர்த்தியது. இதனையடுத்தே இவ்வாறு விலைகள் ஒரே இரவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரத்தை தன் வசம் கொண்டுள்ள ஜனாதிபதி இந்த வர்த்தக மாபியாக்களை மீறி எதனையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும்.
கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளாலேயே இலங்கையில் இவ்வாறு பொருட்களுக்கு விலையேற்ற வேண்டி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவமே இதற்குக் காரணம் என்பதே யதார்த்தமாகும்.
ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதையே தனது முதற் குறிக்கோளாக முன்வைத்த ஜனாதிபதி, இன்று தனது குடும்பத்தினர், நெருங்கிய ஆதரவாளர்கள், ஆலோசகர்களே ஊழலுக்குத் துணை போயிருப்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறார். தனது அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களே ஊழலுக்குத் துணை போவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுதலிக்க முடியாத நிலைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார்.
வெள்ளைப் பூடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தனது பதவியை இராஜினாமாச் செய்த நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன பகிரங்கமாகவே ஊடகங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். மறுபுறம் சர்வதேச ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ‘பண்டோரா பேப்பரஸ்’ புலனாய்வு அறிக்கையிலும் ஜனாதிபதியின் குடும்பத்தவர்களின் பெயர்கள் உள்ளடங்கியிருப்பதும் பலத்த அவமானத்தைத் தேடித் தந்துள்ளது.
மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றிச் சிந்திப்பதே அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய தோல்வியாகும். குடிவரவு குடியகல்வு காரியாலயங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் தினமும் கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது. வெளிநாட்டு தூதரகங்களில் விசா கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மூளைசாலிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முயல்வது இலங்கையின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
சட்டவிரோதமாகவேனும் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல மக்கள் துணிந்துவிட்டனர் என்பதையே கடல் வழியாக வெளியேற திருகோணமலையில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 69 பேரின் நிலைமை காட்டுகிறது.
அதுமாத்திரமன்றி அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு இலட்சக் கணக்கானோரை அனுப்பி வைப்பதற்கான திட்டங்களையும் அரசாங்கம் தீட்டியுள்ளதாக அறிய முடிகிறது. குறிப்பாக பணிப் பெண்களாக இளம் யுவதிகள், தாய்மாரை அனுப்புவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இது நாட்டில் பாரிய குடும்ப, சமூக சீரழிவுகளுக்கே வழிவகுக்கும்.
உள்நாட்டில் பாரிய தொழிற்சாலைகளை அமைப்போம், இலட்சக் கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவோம் எனக் கூறி பதவிக்கு வந்தவர்கள் இன்று அந்நியச் செலாவணிக்காக அப்பாவிப் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களது குடும்பங்களையே சீரழிக்க முயற்சிப்பது கவலைக்குரியதாகும்.
எனவேதான் அரசாங்கம் இவ்வாறான தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முன்வர வேண்டும். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு தகுதிவாய்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை உள்வாங்கி செயற்பட வேண்டும். நாடு மிகப் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் அரசியல் வேறுபாடுகளை ஒருபுறம் வைத்து விட்டு, எதிர்க்கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். அதனையே மக்களும் எதிர்பார்த்து நிற்கின்றனர். இது அடுத்த தேர்தலுக்கு தயாராகின்ற நேரமல்ல. மக்களுக்கு இப்போதிருக்கின்ற முக்கிய பிரச்சினை தேர்தல் அல்ல. மாறாக வயிற்றுப் பசியே என்பதை சகல தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.- Vidivelli