“ஜெய்லானிக்கு முஸ்லிம்கள் தாராளமாக வரலாம்!”
ஏ.ஆர்.ஏ.பரீல்
“நான் புனித குர்ஆனைப் படித்திருக்கிறேன். சிங்கள பெளத்தர்களினது மாத்திரமல்ல ஏனைய சமயங்களின் கலாசாரங்களையும் மரபுரிமைகளையும் மதிக்கிறேன். தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை எனது சொந்த செலவில் புனர் நிர்மாணம் செய்து தருவதற்கும் தயாராக இருக்கிறேன்”. என நெல்லியகல, வத்துரே கும்புர தம்மரதன தேரர் தன்னைச் சந்தித்த தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
ஜெய்லானி பள்ளிவாசலின் நிர்வாக சபையின் தலைவர் என்.இப்திகார் அஸீஸ் தலைமையில் நிர்வாக சபையினர் அண்மையில் ஜெய்லானியில் நெல்லியகல,வத்துரே கும்புர தம்மரதன தேரரை சந்தித்து கலந்துரையாடினார்கள். அக்கலந்துரையாடலின்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில், எமது நாட்டில் எவருக்கும் தமது சமயத்தைப்பின்பற்றுவதற்கு பூரண சுதந்திரம் உள்ளது. கூரகலயில் முஸ்லிம்கள் தமது சமய கடமைகளை முன்பு போல் நிறை வேற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை. எந்தப்பிரச்சினையும் இல்லாது உங்களது சமய கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாம் அனுமதியளித்துள்ளோம். பள்ளிவாசல் மற்றும் பள்ளிவாசலின் உள்ளே அமைந்துள்ள ஸியாரம் என்பவற்றுக்கு எம்மால் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தப்படமாட்டாது.
கூரகல பெளத்தர்களினதும் புனித பூமியாகும். சிவனொளிபாதமலை, மற்றும் கதிர்காமம் புனித தலங்கள் போன்று கூரகலையையும் நாமனைவரும் சமய நல்லிணக்கத்துக்கான இடமாகக் கருதுவோம். இங்கு நாம் அமைத்துள்ள வாகன தரிப்பிடம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை முஸ்லிம்களும் பயன்படுத்தலாம்.
என்னைப் பற்றி சமூக வலைத்தலங்களில் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. நான் முஸ்லிம்களுக்கு எதிரானவனல்ல. இது பற்றி நீங்கள் தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.
இதேவேளை ஜெய்லானி பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் எதிர்காலத்தில் நாம் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கே வந்துள்ளோம். நீங்கள் என்ன கூறுகிறீர்களோ அதன்படி செயற்படத்தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்கள்.
புதிய நிர்வாக சபையின் தலைவர் என்.இப்திகார் அஸீஸ் அங்கு உரையாற்றுகையில், ‘கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாம் எமது பதவிகளை பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று பள்ளிவாசலும் அதனுள்ள ஓய்வறையும் எம்மிடம் உள்ளது. அனைத்தையும் முஸ்லிம்களால் பயன்படுத்தமுடியும் என நெல்லிகல தேரர் தெரிவித்துள்ளார்.
கூரகல, தப்தர் ஜெய்லானியின்
புதிய நிர்வாக சபை
- என்.இப்திகார் அஸீஸ் – தலைவர்
- அம்ஜாத் சாஹிர் மெளலானா – செயலாளர்
- நகீப் மெளலானா – உதவித் தலைவர்
- ரொசானா அபுசாலி – உதவித் தலைவி
- என்.நிஸ்தார் சாலி
- எ.என்.ஜே.எம்.ஜவுபர்
- என்.ஐ.சரீப்தீன் – பொருளாளர்
- என்.ஜே.மலிக் ஷா
- டி.எ.எம்..மொஹிதீன்
- எ.சி.எம்.பாஹிர்
- எம்.பி.எம்.அபூபக்கர்
இன்று இங்கு பாதை கட்டமைப்பு வசதிகள் தேரரினால் புனரமைக்கப்பட்டுள்ளன. பாரிய வாகன தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் வழமைபோன்று தமது சமய நடவடிக்கைகளை இங்கு தொடர முடியும். முஸ்லிம்கள் நாம் இலங்கையர் என்ற அடையாளத்துடன் எமது கடமைகளை முன்னெடுப்போம்’ என்றார்.
நிர்வாக சபை உறுப்பினர் ஜெமால்தீன் மொஹமட் ஜவுபர் உரையாற்றுகையில் ‘ இலங்கையில் முஸ்லிம்கள் சுமார் 1200 வருடங்களுக்கும் மேலாக பெரும்பான்மை இனத்துடன் நட்புறவுடன் வாழ்ந்து வருகிறார்கள். எமது நாட்டுக்கு வருகை தந்த ஆன்மிக தலைவர்களை கண்ணியப்படுத்தும் இடங்கள் உள்ளன. அவற்றில் ஜெய்லானியும் ஒன்று. கூரகல முஸ்லிம்களின் பூர்வீக இடமென்றாலும் இங்கு பெளத்தர்களுக்கும் பூர்வீகம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இங்கு முஸ்லிம்களுக்கு சில பிரச்சினைகள் இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று நாம் நெல்லியகல தேரருடன் கதைத்தோம். அவர் உண்மையில் தங்கமான மனிதர் என்பது அவருடன் கதைத்ததிலிருந்து தெரிய வந்தது.
அவர் எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளார். ரபியுல் அவ்வலில் இங்கு கொடியேற்றம். நவம்பரில் பெரும் கந்தூரி வைபவம் நடைபெறும். நாம் இன, மத, கொள்கை வேறுபாடுகளின்றி இவ்விடயத்தில் ஒன்றிணைவோம்.
இங்கு பிரச்சினைகள் இருப்பதாக சமூக ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன. இங்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்பதை பேச்சு வார்த்தையின் பின்பு நாம் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளோம். கூரகலயில் பெளத்தத்திற்கு முதலிடம் வழங்கி சில ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
இதேவேளை ஜெய்லானி பள்ளிவாசல் எல்லைக்குள் பள்ளி வாசலிலிருந்தும் 100 மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் தொல்பொருள் சின்னங்களான இரு ஸியாரங்கள் இனந்தெரியாதோரால் மண்ணினால் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இந்த ஸியாரங்கள் பல தசாப்தங்கள் பழமை வாய்ந்ததாகும் என்றாலும் இந்த ஸியாரங்கள் தொடர்பில் நெல்லியகல தேரர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.- Vidivelli