(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களதும், ஏனைய மதங்களைச் சேர்ந்த சிலரினதும் ஜனாஸா நல்லடக்கத்துக்கு இதுவரைகாலம் அடைக்கலம் கொடுத்து வந்த ஓட்டமாவடி மஜ்மாநகர் விசேட மையவாடியின் செயற்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் முடிவுக்கு வரவுள்ளன.
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை அமர்வில் கடந்த மாதம் 30ஆம் திகதி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார். ஒருமாத காலத்துக்குள் மஜ்மா நகர் மையவாடியின் செயற்பாடுகள் முடிவுறுத்தப்படுமென அன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் எதிர்வரும் 28 ஆம் திகதி மையவாடி செயற்பாடுகள் நிறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மஜ்மா நகர் மையவாடியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மையவாடியில் 7 ஏக்கர் காணியும் நிறைவுக்கு வரவுள்ளது. அத்தோடு நாம் மழைக்காலத்தையும் எதிர்நோக்கியுள்ளோம். இந்தக் காரணங்களைக் கொண்டு புதிய மாற்றிடமொன்றினை ஏற்பாடு செய்யும்படி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தீர்மானம் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்பு மையவாடிக்கு மாற்றுக்காணி ஏற்பாடு செய்யும்படி கோரியுள்ளோம்.
இவ்வருடம் மார்ச் மாதம் 5ஆம் திகதி ஓட்டமாவடி மஜ்மாநகர் மையவாடி செயற்பட்டது. அன்றைய தினம் முதல் கொவிட் 19 தொற்றினால் மரணித்த ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வந்தன. நேற்று 4 ஜனாஸாக்கள் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டன. இதுவரை 3119 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை வட்டமடு பிரதேசத்தில் ஏற்கனவே இனங்காணப்பட்டு அடையாளமிடப்பட்டுள்ள கொவிட் 19 மையவாடி தொடர்பில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம். நிஹாரிவிடம் வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
“வட்டமடு பிரதேசத்தில் மையவாடிக்காக 10 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மையவாடி தயார் நிலையிலே உள்ளது. நாளை என்றாலும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார்.
இதேவேளை சுகாதார அமைச்சோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பில் இச்செய்தி எழுதப்படும்வரை பதிலளிக்கவில்லை.- Vidivelli