பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 2020 மே மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞரும் ஆசிரியருமான மன்னாரைச் சேர்ந்த அஹ்னப் ஜெஸீமை, சுமார் ஒரு வருடத்தின் பின்னர் அவரது தாயார் சிறையில் சந்தித்துள்ளதாக அவரது சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர தெரிவித்தார்.
“ஒரு வருடம் கழித்து, மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஒரு தாய் தன் மகனை சிறையில் பார்த்து அவருடன் சில வார்த்தைகளை பரிமாறிக்கொள்வது என்பது எவ்வளவு கவலைக்குரியது? இது பற்றி முழு மனித குலமும் அவமானப்பட வேண்டும்” என சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர இச் சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
கொவிட் நிலைமைகளை காரணமாகக் கொண்டு அவரை நேரில் சந்திப்பதற்கு இதுவரை சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்து வந்தனர். இந் நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மகசின் சிறைச்சாலைக்குச் சென்று தனது மகனை சந்திப்பதற்கு அவரது தாயாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 15 நிமிடங்கள் வரை இச் சந்திப்பு நீடித்ததாக அறிய முடிகிறது.
அஹ்னப் ஜெஸீம் எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli