எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல இலக்கியவாதியும் ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரியுமான ஜுனைதா ஷெரீப் தனது 82 ஆவது வயதில் கடந்த 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.
1940 ஆம் ஆண்டு காத்தான்குடியில் பிறந்த இவர், 1967 ஆம் ஆண்டிலிருந்து ‘ஜுனைதா ஷெரீப்’ என்ற புனைப் பெயருடன் எழுத ஆரம்பித்தார்.
80 வயதைக் கடந்தும் மனைவி வபாத்தாகிவிட்ட நிலையிலும் இறுதிவரை எழுதி வந்தார். ‘ஜுனைதா ஷெரீப்’ என்ற பெயர் மூலமே இவர் அறிமுகமாகியிருந்ததால் அவரை எல்லோரும் ஒரு பெண் எழுத்தாளர் என்றே நீண்ட காலமாக எண்ணியிருந்தனர். ஜுனைதா எனும் தனது மனைவியின் பெயரை இணைத்தே ‘ஜுனைதா ஷெரீப்’ எனும் புனைப் பெயரை அவர் உருவாக்கியிருந்தார்.
20 நாவல்களையும் பல நூறு சிறுகதைகளையும் வானொலி நாடகங்களையும் எழுதி வாழ்நாளில் ஏராளமான இலக்கிய விருதுகளைப் பெற்ற ஒருவராக இவர் திகழ்ந்தார்.
2019 ஆம் ஆண்டுக்கான அரச தேசிய இலக்கிய விருது விழாவில் இவர் எழுதிய கனவுலகம் என்ற சிறுகதை தொகுப்பு விருது வென்றது.
1990 ஆம் ஆண்டு வானொலி நாடகத் தொகுப்புக்கான தேசிய இலக்கிய விருதையும் 2006 ஆம் ஆண்டு நாவலுக்கான தேசிய இலக்கிய விருதையும் இவர் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதே போன்று இவர் 2006 ஆம் ஆண்டு ஜனநாயகர்கள் எனும் நூலுக்காக வடக்கு கிழக்கு மாகாண விருதைப் பெற்றதுடன் இதே ஆண்டில் பெரியமரைக்கார் சின்னமரைக்கார் என்ற நூலுக்கான மாகாண மட்ட விருதையும் பெற்றார்.
2016 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண சபையின் இலக்கிய விழாவில் சீதக்காதினி என்ற நூலுக்கான விருதையும் பெற்றுக் கொண்டார்.
இவர் எழுதிய சூனியத்தை நோக்கி எனும் நாவல் சர்வதேச விருதையும் பெற்றுக் கொடுத்தது.
2019 ஆம் ஆண்டு தமிழ் நாடு தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இவர் கரிகாற் சோழன் எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலக்கிய ஜாம்பவான்கள் கலந்து கொண்ட முஸ்தபா அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த சர்வதேச இலக்கியப் பெரு விழாவில் இவருக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இவர் ஒரு எழுத்தாளர், இலக்கியவாதி மாத்திரமன்றி ஒரு சிறந்த நிருவாக அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
இவற்றைத் தவிர இக்பால் தின விருது, தமிழியல் விருது என பல இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ள ஜுனைதா ஷெரீப் தனது கல்வியை காத்தான்குடி முதலாம் குறிச்சி அந் நாசர் வித்தியாலயத்தில் கற்றுள்ளார்.
1975 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த இவர் கிழக்கு மாகாணத்தின் முதல் முஸ்லிம் நிருவாக சேவை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் 1975ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையின் பிரிவுக்காரியதரிசியாகவும் பின்னர் பிரிவு உதவி அரசாங்க அதிபராகவும் 1977 ஆம் ஆண்டு வீசிய சூறாவளிக்குப் பின்னர் தலைமையக உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றினார். பின்னர் 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
1992 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றியதுடன் 1994 ஆம் ஆண்டு புனர்வாழ்வு அதிகார சபையின் மேலதிக பொது முகாமையாளராகவும் கடமையாற்றினார்.
இன விவகார தேசிய நல்லிணக்க அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் கடமை புரிந்துள்ளார்.
அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் வாழ்விட நகர முகாமையாளராகவும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவின் இணைப்பாளராகவும் செயலாற்றியுள்ள இவர் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்பின் டிப்ளோமா கற்கைநெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.
இவ்வாறு எழுத்துலகிலும் நிருவாக சேவையிலும் தடம்பதித்த ஜுனைதா ஷெரீப், சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 82ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் ஜனாஸாவை பார்வையிட சமய தலைவர்கள், அரச உயரதிகாரிகள், முக்கியஸ்தர்கள், எழுத்தாளர்கள் என பலரும் வருகை தந்தனர்.
அன்னாரின் ஜனாஸா காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.- Vidivelli